டிமென்ஷியா: முற்கூட்டியே கண்டறிதல் மற்றும் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் தொழில்முறை ஆலோசனை

17 Oct, 2023 | 11:12 AM
image

டிமென்ஷியா அல்லது முதுமையில் மறதிநோய் தொடர்பில் ஆலோசனைகளை மருத்துவர் ஹரினி அபேசிங்ஹ மற்றும் மருத்துவர் கவீந்திர பத்திரகே வழங்குகியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் டிமென்ஷியா அல்லது முதுமையில் மறதிநோய் தொடர்பில் 10 மில்லியன் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு டிமென்ஷியா காணப்படுவதுடன், இவர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் குறைந்த மற்றும் மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளிழ் வாழ்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகிறது. உயிரிழப்புக்கள் ஏற்படுத்தும் முன்னணிக் காரணிகளில் ஏழாவது காரணியாக டிமென்ஷியா காணப்படுவதுடன்,  உலகளாவிய ரீதியில் உள்ள முதுமையானவர்கள் மத்தியில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் அங்கவீனம் மற்றும் தங்கியிருத்தல் நிலைமைகளுக்கும் இதுவும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.

டிமென்ஷியா என்றால் என்ன?

ஒரு நபருக்கு நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் என்பன குறைந்து அவரது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதளவு தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதற்குக் கொடுக்கப்படும் பதம் டிமென்ஷியா ஆகும். இது பாதிக்கப்பட்டவரின் ஆளுமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

டீமென்ஷியாவின் வகைகள் பற்றிய விஞ்ஞான ரீதியான கண்ணோட்டம்: 

மூளையை நேரடியாக அல்லது மறைமுகமாகப் சேதப்படுத்தும் பல்வேறு நோய்கள் அல்லது காயங்களால் டிமென்ஷியா ஏற்படலாம்.

அல்சைமர் நோய் என்பது பொதுவான வடிவம் என்பதுடன், நோயாளர்களில் 60-70மூ ற்கு இது பங்களிக்கின்றது. அல்சைமர் டிமென்ஷியா 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதுடன், இந்த நோயின் அளவு ஒவ்வொரு 5 வருடத்துக்கு  ஒரு தடவையும் இரட்டிப்பாகிறது. அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகள் முதலில் இழக்கப்படும். ஆரம்பத்தில் மொழி ஆற்றல் பாதிக்கப்படும், சொற்களைத் தேடுவதில் அல்லது பொருட்களைப் பெயரிடுவது, சரளமான மற்றும் தகவல் நிறைந்த வசனங்களை அமைக்கும் ஆற்றலில் சிரமங்கள் ஏற்படும். பார்வையுணர்வு தொடர்பான திறனில் பாதிப்பு ஏற்படலாம் குறிப்பாக படங்களை பிரதிபண்ணுதல் அல்லது பழக்கம் இல்லாத சுற்றாடலுக்கான வழியை அறிந்துகொள்ளுதல் போன்ற இலக்குகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். மனச்சோர்வு அடிக்கடி ஏற்படுவதுடன், மனநிலையில் தடுமாற்றம், மனநிலையில் குழப்பம் குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும். 

இரத்தக்குறை டிமென்ஷியா, லீவி உடல்களுடன் டிமென்ஷியா, மற்றும் ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா என்பன் ஏனைய வகைகளாகும்.

இரத்தக்குறை டிமென்ஷியா என்பது மூளைக்கு சரியான இரத்த விநியோகம் இன்மையால் நரம்புகளில் ஏற்படும் சேதத்தினால் உருவாவதாகும்.

லீவி உடல்களுடன் டிமென்ஷியாவில் (நரம்பு உயிரணுக்களில் அளவுக்கு அதிகமான புரதம் படிதல்) நோயாளர்கள் உண்மையில் இல்லாத காட்சிகள் அல்லது பொருளொன்றைப் பார்ப்பது போன்று காட்சி மாயத்தோற்றத்தை அனுபவிக்கின்றனர். பாக்கின்சென்ஸ் நோய் மற்றும் மீண்டும் மீண்டும் விழுதல் போன்றவற்றின் அறிகுறியுடன் இது தோன்றும்.

ஃப்ரண்டோ டெம்போரல் டிமென்ஷியா (மூளையின் முன் மடலில் சிதைவு) நோயினால் முக்கிய நடத்தை மாற்றங்கள் மற்றும் பேசுவதில் சிரமம் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

பக்கவாதத்தின் பின்னர் அல்லது எச்.ஐ.வி போன்ற குறிப்பிட்ட தொற்றுச் சூழ்நிலையின் போது, மோசமான மதுபானப் பாவனையின் விளைவாக, மூளையில் மீண்டும் மீண்டும் ஏற்படும் பௌதீக ரீதியான காயங்களால் டிமென்ஷியா ஏற்படலாம். பல்வேறு வடிவங்களிலான டிமென்ஷியா நோய்களுக்கு இடையிலான எல்லைகள் தெளிவற்றைவை என்பதுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் காணப்படுகின்றன.

டிமென்ஷியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்பன அண்மைய நிகழ்வுகள் அல்லது விடயங்களை மறத்தல், பொருட்களைத் தொலைத்தல் அல்லது காணாமல் செய்தல், நடக்கும்போது அல்லது வாகனங்களைச் செலுத்தும்போது தொலைந்துபோதல், பரீட்சையமான முகங்களில் கூட குழப்பம் ஏற்படல், நேரத்தை இழத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் அல்லது தீர்மானங்களை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளல், உரையாடல்களைத் தொடர்ந்து சிக்கல்கள் அல்லது வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் மற்றும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.

டிமென்ஷியா ஒவ்வொரு நபரையும் வெவ்வேறு விதத்தில் பாதிக்கிறது என்பதுடன், பிற சுகாதார நிலைமைகள் மற்றும் நோய்வாய்ப்படுவதற்கு முன் நபரின் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்து அடிப்படைக் காரணங்கள் வேறுபடுகின்றன. 

நோயறிதல்

நோயை முற்கூட்டி அறிந்துகொள்ளல் மற்றும் இதனை முகாமைத்துவம் செய்வது குறித்து தொழில்முறை ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது டிமென்ஷியா நோயின் முக்கிய பகுதியாகும். மினி மென்டல் ஸ்டேட் எக்ஸாமினேஷன் (Mini Mental State Examination (MMSE)) மற்றும் மொன்ரீல் கொங்னிட்டிவ் அசெஸ்மென்ட் (Montreal Cognitive Assessment (MoCA)) போன்ற நோயறியும் சோதனைகளை அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் நோயறியும் நிலையங்களில் மேற்கொள்ள முடியும். 

சிகிச்சை 

டிமென்ஷியாவுடன் காணப்படும் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்கள் என்பதுடன், அவர்களுக்கான கவனிப்புக்கள் தனிப்பட்ட ரீதியிலானதாக இருக்க வேண்டும். டீமென்ஷியாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், இந்த நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள் என இரு தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க பல விடயங்களை மேற்கொள்ள முடியும். கவனிப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோயின் வடிவத்தைப் புரிந்துகொள்வது மற்றும் டிமென்ஷியா கொண்ட நபர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் அல்லது சிரமங்கள், ஆதரவான சூூழலை வழங்குதல், அவர்களின் திறனை அதிகரிக்கச் செய்தல் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியால் ஏற்படும் இழப்பைக் குறைத்தல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

டிமென்ஷியா நோய் கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு கீழ்வரும் நடவடிக்கைகள் உதவியாக இருக்கும்:

1. குடும்ப உறுப்பினர்களுக்கு டிமென்ஷியா தொடர்பில் அறிவூட்டல்; எவ்வாறு கவனிப்பது மற்றும் அனுதாபத்துடன் இருத்தல் எவ்வாறு என்பது குறித்து அறிவூட்டல்.

2. நாளாந்த இலக்குகளை எழுதி வைத்தல், பொருட்கள் மீது பெயரிட்டுவைத்தல், கருகில் பாரிய நாட்காட்டி மற்றும் மணிக்கூடொன்றை வைத்திருத்தல், வீட்டில் பொதுவாகப் பயன்படுத்தும் பகுதிகளுக்குச் செல்லும் வழியை குறியீடு செய்து வைத்திருத்தல், ஆபத்தைக் குறைப்பதற்கு சிறந்த ஒளி இருப்பதை உறுதி செய்தல் போன்ற சுற்றாடல் மாற்றங்களை மேற்கொள்ளல்.

3. கலை, இசை, குறுக்கெழுத்துக்களைத் தீர்த்தல், விளையாட்டுக்களில் ஈடுபடுத்தல் போன்று மூளையின் இயக்கத்தை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருந்தல்.

4. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் உடலை பௌதீக ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருத்தல்.

5. சமூக ஈடுபாடு, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகச் செயற்பாடுகளுடன் நேரத்தைச் செலவுசெய்தல்.

6. வைத்தியரிடம் சென்று வழமையான சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் மருத்துவ நிலைமைகள் முகாமைத்துவம் செய்யும் நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.

இதற்கு மேலதிகமாக Donepezil மற்றும் Memantine போன்ற மருந்துகள் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கும், நோயின் வளர்ச்சி வீதத்தைக் குறைப்பதற்கு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்படலாம். 

ஆபத்துக்கான காணிகள் மற்றும் தடுப்பு 

டிமென்ஷியாவின் ஆபத்துக் காரணிகளில் வயது வலுவானதொன்றாகக் காணப்படுகின்றபோதும், இது உயிரியல் ரீதியான முதுமையின்போது தவிர்க்க முடியாது விளைவு அல்ல. உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல், புகைப்பிடிக்காதிருத்தல், மதுபானத்தைத் தவிர்த்தல், உடல் பருமனைக் கட்டுப்படுத்தல், ஆரோக்கியமான உணவுமுறை, இரத்த அழுத்தத்தை சரியான முறையில் பேணுதல், கொலஸ்ரோல் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவை சரியாகப் பேணுதல் போன்றவற்றின் ஊடாக டிமென்ஷியாவுக்கான ஆபத்தைக் குறைக்க முடியும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

(எழுத்தாளர்கள் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பட்டதாரிகள் என்பதுடன், தற்பொழுது லங்கா அல்சைமர் சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்) 

இந்தக் கட்டுரை 2023 செப்டெம்பர் 23ஆம் திகதி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right