பெருகிவரும் அதீத மன அழுத்ததுக்கு புதிய தீர்வொன்றைத் தருகிறது டெல்லியில் திறந்து வைக்கப்பட்டுள்ள ‘த பிரேக் ரூம்’!

வேலைச் சுமை மற்றும் நாளாந்தம் ஏற்படும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் பலரும் தடுமாறிவருகின்றனர். இதனால், நாளடைவில் உள, உடல் ரீதியான நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், டெல்லியில் த பிரேக் ரூம் என்ற பெயரில் ஒரு வித்தியாசமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோபத்தை வெளிப்படுத்த எண்ணுபவர்கள், தமக்கான பணத்தைச் செலுத்திவிட்டு இந்த நிறுவனத்தின் உட்புற அறைக்குச் செல்கின்றனர். அங்கு, தொலைக்காட்சி, கண்ணாடி, தேனீர் குவளைகள் உள்ளிட்ட அனேக வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 

அறையின் வாயிலில் கிரிக்கெட் மட்டை மற்றும் எல்லே மட்டை வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த மட்டையை எடுத்துக்கொண்டு போய், நீங்கள் விரும்பும் பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கலாம். தொலைக்காட்சி, கணினிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் கூட உங்கள் ஆத்திரம் தீரும்வரை அடித்து நொறுக்கலாம். ஒவ்வொருவருக்கும் பதினைந்து நிமிடங்கள் வீதம் ஒதுக்கித் தரப்படுகிறது. மேலும், பொருட்களை உடைக்கும்போது உங்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான உடைகளும் தரப்படுகின்றன.

‘‘இங்கு வந்து எனது கோபத்தையெல்லாம் கொட்டிவிட்டுப் போவதால், மன இறுக்கம் குறைகிறது. இதனால், கோபம் எல்லாம் வடிந்து இயல்பான மன நிலையுடன் வீடுதிரும்ப முடிகிறது’’ என்கிறார் ஒருவர்!