(நா.தனுஜா)
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அயர்லாந்தை தளமாகக்கொண்டியங்கிவரும் 'முன்னரங்கப் பாதுகாவலர்கள்' (Front Line Defenders) எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்போருக்கு எதிராக அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தாக்குதல் மற்றும் அடக்குமுறையின் மூலம் பதில் கூறியிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்திருக்கும் அம்பாறை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களைச்சேர்ந்த பெரும்பான்மையின சிங்களவர்கள் தமது கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் நிலங்களில் குடியமர்த்தப்படுவதற்கு எதிராக மயிலத்தமடு மற்றும் மாதனை பகுதி விவசாயிகளால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியும், மட்டக்களப்புக்கு வருகைதந்திருந்த ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கிலும் கடந்த 8 ஆம் திகதி செங்கலடி மத்திய கல்லூரியை நோக்கி அமைதிப்பேரணியில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் தாக்கப்பட்டனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மயிலத்தமடு மற்றும் மாதவனை ஆகிய பிரதேசங்களிலுள்ள மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மையின சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டவிரோதமான முறையில் குடியேறியிருப்போரை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி விவசாயிகளால் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை அப்பகுதியிலுள்ள சுமார் 500 க்கும் மேற்பட்டோர் தமிழ் விவசாயிகளின் அன்றாட செயற்பாடுகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறு ஏற்படுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடந்த 8 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீது பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதுமாத்திரமன்றி அப்போராட்டம் ஒளிப்பதிவு செய்யப்படுவதாகவும், அங்கிருந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியேற்படும் என்றும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி ஆண் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதுடன், தள்ளிவிடப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தொடரும் அடக்குமுறைகள் குறித்து நாம் மிகுந்த கரிசனை கொள்கின்றோம். அதுமாத்திரமன்றி தமது உரிமைகளைக்கோரி அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்போருக்கு எதிரான மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM