மீண்டும் கல்லூரி மாணவராக நடிக்கும் சூர்யா..!?

16 Oct, 2023 | 05:38 PM
image

நடிகர் சூர்யா - இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா, கல்லூரி மாணவராக நடிக்கிறார் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

'சூரரைப் போற்று' எனும் தேசிய விருதுகளைப் பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் மலையாள நடிகை நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் மாதவன் மற்றும் பொலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். 

'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை தழுவி தயாராகிறது என்றாலும், குறிப்பிட்ட ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகவில்லை என படக்குழுவினர் விளக்கமளித்திருக்கிறார்கள். 

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு திகதிகள் குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் 'கங்குவா' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்தத் திரைப்படம் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்பதும், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததும் 'சூர்யா 43' படத்தில் கல்லூரி மாணவராக நடிப்பதற்கான விசேட பயிற்சிகளில் சூர்யா ஈடுபடவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்