புதன் பகவானின் அருளை பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்...!

16 Oct, 2023 | 04:45 PM
image

எம்மில் சிலர் அவர்களுடைய உறவுகளில் சகோதரிகளிடமோ அல்லது அத்தைகளிடமோ அல்லது தாய்மாமனிடமோ அல்லது மகள்களிடமோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பேசாத நிலையை பின்பற்றுவர். இவர்களுக்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக இல்லை என புரிந்துகொள்ளலாம்.‌

உங்களுக்கு பற்கள் தொடர்பான ஆரோக்கிய கேடு பிரச்சினைகள் இருந்தாலும், நரம்பியல் பிரச்சினைகள் இருந்தாலும், தோல் தொடர்பான அரிப்பு, சொரியாசிஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், அஜீரணம் உள்ளிட்ட குடல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் உங்களுக்கு புதன் பகவானின் ஆசி இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும், தொழில் முனைவோராக இருந்தாலும், ஏதேனும் கவனக் குறைவு காரணமான செய்யக்கூடாத செயலை செய்திருந்தாலும், பேச்சின் வன்மையால் மற்றவர்களை எளிதில் கவரும் திறமை கொண்ட உங்களுக்கு அண்மைக்காலமாக உங்களது பேச்சில் தொய்வு, விரக்தி, திறமையின்மை, புதிய தகவல் இன்மை போன்றவற்றின் காரணமாக பேசுவதில் தடைகள் இருந்தாலும், உங்களுக்கும் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கவில்லை என்பதனை புரிந்து கொள்ளலாம்.

பாடசாலையில் பயிலும் மாணவ, மாணவிகளில் யாருக்கு கணித பாடத்தில் ஆர்வம் இல்லையோ, கவனக்குறைவாக சில கணித புதிர்களை யார் தவறாக செய்கிறார்களோ அவர்களுக்கும் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கவில்லை என்பதே பொருள்.

இவர்கள் அனைவரும் புதன் பகவானின் அருளைப் பெற பின்வரும் எளிய பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் சூரியன் உதயமாகும் தருணத்தில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்துக்கு சென்று ஒரு விளக்கேற்றி விநாயகரை வழிபட வேண்டும். 

பொருளாதார சக்தி இருந்தால் தினமும் ஒரு தேங்காயினை உடைத்து வேண்டிக்கொள்ளுங்கள்... உங்களுக்கு புதன் பகவானின் அருள் கிடைக்க தொடங்கும்.‌

வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளையில் துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலமும் புதன் பகவானின் அருளை பெறலாம்.

மேலும், நீங்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது சிறிய அளவிலான நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரக் கற்களை உடன் வைத்துக்கொள்ளலாம். இவையும் புதன் பகவானின் அருளை பெற்றுத் தருவதற்கான உபாயமாகும்.

உங்களுக்கு வீட்டில் அருகிலிருக்கும் திருமணமாகாத இளம் பெண்களுக்கு அவர்கள் மனம் மகிழும்படியான சிறிய பரிசினை வழங்கலாம். அவர்களின் மனதைக் கவர்ந்த இனிப்பை கூட நீங்கள் பரிசாக தரலாம். ஒருபோதும் மணமாகாத இளம் பெண்களைப் பற்றிய தவறான சொற்களை பயன்படுத்தக் கூடாது. இதனை நீங்கள் கடைப்பிடித்தாலும் உங்களுக்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஊறவைத்த பச்சை பயிரை புதன்கிழமைகளில் பறவைகளுக்கு தானமாக கொடுத்தாலும் உங்களுக்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிட்டும்.

வீட்டின் அருகிலுள்ள பெருமாள் ஆலயத்துக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொடுத்தாலும், அருகில் உள்ள சிவ ஆலயத்துக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பூக்களை வாங்கிக் கொடுத்தாலும் உங்களுக்கு புதன் பகவானின் அருள்பார்வை கிட்டும்.‌

நீங்கள் பொருளாதார அளவில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தால், அன்னதானம் செய்யுங்கள். அதன்போது பச்சை பயறு மற்றும் வெல்லம் கலந்த ஓர் உணவு வகையை தவறாமல் அன்னதானத்தில் இடம்பெற வைப்பதன் மூலம் புதன் பகவானின் அருளை பெறலாம்.

இதுபோன்ற பரிகாரங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களிடமிருந்து கருத்து முரண்பட்டால் பேசாதிருக்கும் அத்தை, தாய்மாமன், மகள்கள், சகோதரிகள் என அனைவரும் பகை மறந்து பேசி, மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்வார்கள். 

உங்களது தொழிலில் கவனக் குறைவு ஏற்படாமல், முழுமையான விழிப்புணர்வு ஏற்பட்டு, அனைத்து காரியங்களையும் துல்லியமாகவும், சமயோசிதமாகவும் செய்து லாபத்தை ஈட்ட தொடங்குவீர்கள். இதன் காரணமாக மனமகிழ்ச்சியுடன் முன்னேற்றமும் சாத்தியமாகும். கணிதப் பாடத்தில் மாணவ, மாணவிகள் அதிக பெறுபேறுகள் பெற்று சித்தி அடைவார்கள். உங்களது பேச்சில் பழைய நகைச்சுவை கலந்த தனித்தன்மை வெளிப்பட்டு, ரசிக்கும் வகையில், மற்றவர்களை மயக்கும் வகையில் பேசத் தொடங்குவீர்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right