மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கோ அல்லது அவர்கள் அனுபவித்துவரும் அன்றாட பிரச்சினைகளுக்கோ உரிய தீர்வுகள் இன்னமும் காணப்படவில்லை.
இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் பேரழிவுகளை சந்தித்திருந்தனர். அவ்வாறு அழிவுக்குள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதில் அக்கறை காண்பிக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கமானது அக்கறையீனமாகவே செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமானால் தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஏற்பட வேண்டும். தமிழ் மக்களின் சகல பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு செயற்படும்போதுதான் அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது யதார்த்த பூர்வமான விடயமாகும்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை இல்லாதொழிக்கும் வகையில் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு பௌத்த விகாரைகளையும் பௌத்த சின்னங்களையும் திட்டமிட்ட வகையில் அமைப்பதன் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை சுவீகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தொல்லியல் என்ற பெயரில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரமானது இந்த சுவீகரிப்பு நடவடிக்கைக்கு நல்லதொரு உதாரணமாக அமைந்திருக்கின்றது. இதேபோன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெற்று வருகின்றன.
இத்தகைய ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட்டு ஒருமைப்பாட்டுடன் நிற்க வேண்டும். இல்லையேல் சிங்கள பேரினவாதம் தமிழ் பிரதேசங்களில் ஊடுருவதை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்து விட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து திட்டமிட்ட வகையில் வடக்கு, கிழக்கில் பௌத்த தேசிய மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆனாலும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு எதிர்ப்பினை தெரிவிக்காது தமக்குள் பிளவுபட்டு நின்றமையினால் சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வந்தன.
சிங்கள மக்களே வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டன. பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டன. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டு சுவீகரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அந்த நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. இதன் வெளிப்பாடாகத்தான் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய அந்த மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா மீதான அச்சுறுத்தல்களை பார்க்கவேண்டியுள்ளது.
இத்தகைய அச்சுறுத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தற்போது அவரது பதவி விலகல் தொடர்பிலும் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த விசாரணை முடிவுகள் நீதிபதி மீது குற்றம் சாட்டும் வகையிலேயே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு வடக்கு, கிழக்கில் சிங்கள பௌத்த தேசிய வாத சக்திகளின் செயற்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் உடனடியாகவே ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.
நீதிபதி சரவணராஜா விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமக்குள் ஓரளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்கின்றனர். நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உடனடியாகவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமக்குள் சந்தித்து சில தீர்மானங்களை எடுத்திருந்தனர்.
தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்துக்கு அமைய கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதேபோன்றே எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்துள்ளன. இந்த தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குமாறு முஸ்லிம் கட்சிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பூரண ஆதரவு வழங்குவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருக்கின்றார்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவேண்டியுள்ளது. இரு சமூகங்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
நீதிபதி சரவணராஜா விடயத்தில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு வழங்குவதானது இந்த போராட்டத்தை வலுவடையச் செய்வதாக அமைகின்றது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதானது சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதற்கான மார்க்கமாக அமையும்.
தற்போதைய நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் கட்சிகள் மட்டத்தில் ஆராயப்பட்டு வந்தது.
கடந்த புதன்கிழமை சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் ஒன்று கூடிய தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
விரைவில் இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு நேரம் கோரி சகலரும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்புவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதனைவிட நீதிபதி சரவணராஜா விவகாரம் தொடர்பில் இலங்கையிலுள்ள சகல இராஜதந்திரிகளுக்கும் கடிதம் அனுப்பி வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இவ்வாறான முடிவுகளை எடுப்பது வரவேற்கத்தக்க செயற்பாடாக அமைந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமானால் இத்தகைய ஒற்றுமையான செயற்பாடுகள் அவசியமாக அமைகின்றன.
2001ஆம் ஆண்டு இத்தகைய நோக்கத்துக்காகவே நான்கு கட்சிகளைக் கொண்டமைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கூட்டமைப்பானது தற்போது சிதைவடைந்திருக்கின்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தான்தோன்றித்தனமான போக்குகள் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் அத்தகையதொரு கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் சுயநல அரசியல் போக்கினை கைவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்தகைய ஒரு நிலைமை ஏற்படும் வரை தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு தலைமைகள் முன்வரவேண்டும்.
தற்போதைய ஒற்றுமை முயற்சி தொடர வேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM