நாகநாதர்
பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்காக தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்கள் இப்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களது காலம் இருநூறு வருடங்களானாலும் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து உருவாகி இன்று பல்துறைகளிலும் மிளிர்ந்து வருகின்றனர் இவர்கள்.
ஆரம்பத்தில் கோப்பி பின்பு தேயிலை செய்கையென அதே பெருந்தோட்டப்பகுதிக்குள்ளேயே கடந்த இருநூறு வருடங்களாகவும் ஆறு தலைமுறைகளை கடந்தும் வாழ்ந்து வரும் மக்கள் பரம்பரையினரின் தியாகம், அர்ப்பணிப்பு, எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி மலையகம் – 200 என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாக காரணமான தொழிற்சங்க மற்றும் அரசியல் அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 'நாம் 200' என்ற தொனிப்பொருளில் மாபெரும் நிகழ்வை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி தலைநகரில் நடத்தவுள்ளது.
இதற்கான சின்னம் அறிமுக நிகழ்வும் இந்த சமூகத்துக்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய விளக்கமும் கடந்த 5ஆம் திகதி, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. இதில் இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அமைப்பின் தவிசாளர் ராமேஷ்வரன் எம்.பி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து சிறப்பித்தார்.
முற்போக்கு அரசியல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளம் அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் முற்போக்கு அரசியலை நோக்கி செல்கிறார் என்று தான் கூற வேண்டும். மலையக சமூகத்தினர் இலங்கை வருகை தந்து இருநூறு வருட வரலாறு என்றாலும் அவர்களின் தென்னிந்திய பாரம்பரியமானது பல ஆயிரம் வருடங்களை கடந்தது. ஆகவே காலமாற்றத்துகேற்ப காட்சிகள் மாறினாலும் எமது பாரம்பரியத்தை தொடரும் வண்ணம் இந்த நிகழ்வின் சின்னம் பல கதைகளை கூறுகின்றது.
தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் ‘நாம்’ என்ற சொல்லோடு 200 என்ற இலக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தினரின் இருநூறு வருட சேவையை நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம், நாம் நாமாக ஒன்றிணைவோம் என்ற பல அர்த்தங்களை இந்த சின்னம் வெளிப்படுத்தினாலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கனியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் வரிகளை பெரிதும் ஞாபகப்படுத்துகிறது.
மேலும் இந்த சமூகத்தினரில் சிலர் மலையகத் தமிழரா இந்தியத் தமிழரா என்ற அடையாளப்படுத்தல் சர்ச்சைகளை கொண்டு செல்கின்ற தருணத்தில் நாம் நாமாக முதலில் ஒன்று சேர்வோம் என அழைப்பு விடுத்திருக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இந்த அழைப்பில் கட்சி,தொழிற்சங்க, வர்க்க பேதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே ஒரே சமூகத்தை இரண்டாக ,மூன்றாக கூறு போடும் தீய சக்திகளை ஒதுக்கி விட்டு முதலில் இந்த சமூகத்தின் பிரதான பிரச்சினைகளை பேசுபொருளாக்க வேண்டியுள்ளது.
காணி மற்றும் வீட்டுரிமைகள் தொடர்பில் பல வருடங்களாக பல அமைப்புகள் போராட்டங்களையும் கருத்தாடல்களையும் நடத்தி வருகின்றன. ஆனால் இதை சட்டரீதியாக சவாலுக்குட்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கவில்லை. இதை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதற்கு மலையக கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டியுள்ளது.
மலையகம் – 200 என்ற தொனிப்பொருளில் இடம்பெறப் போகும் முதலாவது தேசிய நிகழ்வாக இது அமையப்போகின்றது. ஏனென்றால் இது அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறுகின்றது.
மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தசாப்த காலமாக எழுந்து வருகின்றது. அந்த சமூகத்தின் சேவைகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி ஜனாதிபதியின் பிரசன்னத்தோடு அனைத்து பிரமுகர்களினதும் இணைவில் ஒரு தேசிய நிகழ்வு இடம்பெறுவதை அனைவரும் வரவேற்க வேண்டும். அதே வேளை இந்த நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு அவசியம்.
மேலும் இந்த மக்களின் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவித்தல்களும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்துடனான வீட்டுத்திட்டம், காணி உரித்து தொடர்பான அறிவித்தல், சுகாதார மேம்படுத்தல் திட்டங்கள் பற்றி இதன்போது பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மலையகம் என்றால் அது நுவரெலியா மாவட்டம் அல்லது தேயிலை பெருந்தோட்டங்கள் சூழ்ந்த மலைப்பாங்கான புவியியல் அடையாளம் என்ற மாயை இன்று நாட்டின் ஏனைய சமூகங்களிடையே தொடர்ந்தும் உள்ளது. ஆனால் அதை கடந்தும் இந்த சமூக மக்கள் இன்று அனைத்து துறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். ஆகவே இந்த நிகழ்வை தலைநகரில் ஏற்பாடு செய்தமை பொருத்தமானதாகவே உள்ளது.
மலையக பெருந்தோட்ட சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளில் வீடு, காணி உரிமை மற்றும் சுகாதாரம் என்பன விளங்குகின்றன. ஆகவே அதை முன்னிலைப்படுத்தியே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்க வேண்டும் என்பது இந்த சமூகத்தின் ஒட்டு மொத்தமான கோரிக்கையாக உள்ளது. அதை வெற்றி கொள்வதற்கு தனித்து இயங்க முடியாது. எனவே இங்கு ‘நாமாக’ இருப்பது அவசியமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM