கார்வண்ணன்
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வரப் போகிறதா? அண்மையில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துகள் தான் இந்தக் கேள்வி உருவாக காரணம்.
கடந்த வாரம் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர் “மீண்டும் அதிகாரத்துக்கு வரும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என்றும், போதுமானளவுக்கு நாட்டை ஆட்சி செய்து விட்டேன், புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும், முன்னோக்கி செல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்ற ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரமுகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான்- மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கின்ற போதும், அவர் அந்தப் பதவியில் நீண்டகாலம் தொடருகின்ற எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையே அவரது இந்தக் கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.
77 வயதுடைய மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்து விட்டதால் இனி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது.
அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் கூட, இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டாலும், அற்ப ஆயுளில் அந்தப் பதவி பறிபோனது. 2018 இல் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக்கப்பட்ட அவர், 52 நாட்கள் மட்டும், பதவியில் இருந்தார்.
2019இல் கோட்டாபய ராஜபக்ஷவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, 2022 மே மாதம் வரையே அந்தப் பதவியில் இருக்க முடிந்தது.
2015 ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், அரசியலில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவை, மீண்டும் அரசியலில் வெற்றியாளர் ஆக்கியவர்களே, 2022இல் அவரை தோல்வியாளர் ஆக்குவதில் கணிசமான பங்கை வகித்திருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழத் தொடங்கியிருந்தால், அதற்குப் பின்னரான காலத்தில் மோசமான தோல்விகள், அவமானங்களை சந்திக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அவர் நாட்டில் அதிகாரத்தை செலுத்தியது போதும், இனிமேலும் அதிகாரத்துக்கு வர ஆசைப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை, சாகும் வரை அரசியலில் இருக்கும் நிலைப்பாட்டையும் அவர் உறுதி செய்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ இப்போது வயது மூப்பினால் தளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறார். அரசியல் ரீதியாகவும் அவர் தளர்ந்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து அவரால் எதிர்பார்ப்புகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதைவிட, பொதுஜன பெரமுனவுக்குள் தற்போது காணப்படுகின்ற குழப்பங்களை நீக்கி, புதிய தலைமைத்துவத்தின் கீழ் அதனைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்காமலேயே, நழுவிக் கொண்டு போய், பொதுஜன பெரமுனவில் சங்கமமாகியிருந்தார் மஹிந்த ராஜபக் ஷ. ஆரம்பத்தில் அந்தக் கட்சியை பசில் ராஜபக் ஷவே உருவாக்கி, ஒரு கட்டத்தில் அதனை மஹிந்தவிடம் கொடுத்தார்.
அது மஹிந்த ராஜபக் ஷவை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது. அவர் இல்லாமல் பொதுஜன பெரமுனவை உருவாக்கியிருக்கவும் முடியாது. இந்தளவு வேகமாக அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வெற்றியைப் பெற்றிருக்கவும் முடியாது.
பொதுஜன பெரமுனவுக்குள் முடிவுகளை எடுப்பதில் பஷில் ராஜபக் ஷவின் தலையீடுகள் இருந்தாலும், பின்னர் கோட்டாபய ராஜபக் ஷ, மஹிந்தவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுத்தாலும், கட்சியில் மஹிந்தவே எல்லாமுமாக இருந்தார்.
2019இற்குப் பின்னர் அவர் பிரதமர் பதவியில் இருந்தாலும் அவரிடத்தில் அதிகாரம் இருந்ததா என்ற கேள்வி இருந்தது. ஏனென்றால், அப்போது எடுக்கப்பட்ட பல முடிவுகள் மஹிந்தவின் கையை மீறி எடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.
பொதுஜன பெரமுன கட்சி என்பது ராஜபக் ஷவினருக்கு முக்கியமானது. அவர்களின் மீள் எழுச்சிக்கும், அவர்களின் அரசியல் தொடர்ச்சிக்கும் அது அவசியமானது. அந்தக் கட்சி இப்போது அந்தரத்தில் நிற்கிறது.
ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் அமர்த்தியதால், இப்போதைக்கு தப்பிப் பிழைத்திருக்கிறது. ஆனால், இது நிரந்தரமான தீர்வு அல்ல.
ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், பொதுஜன பெரமுனவின் எதிர்கால திட்டத்தை தெளிவாக வகுக்க வேண்டிய நிலையில் மஹிந்த ராஜபக் ஷ இருக்கிறார்.
இதேபோக்கில் இருந்தால், மக்களின் ஆதரவை வெற்றி கொள்வது கடினம் என்பது அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ வைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஒன்று- பொதுஜன பெரமுனவை குழப்பங்களில் இருந்து மீட்டு, அதனை வெற்றிபெற வைப்பது.
இரண்டு, பொதுஜன பெரமுனவின் ஊடாக ராஜபக் ஷ குடும்பத்தை மீண்டும் அரசியல் அதிகாரத்துக்கு கொண்டு வருவது. இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றுவது தான் மஹிந்த ராஜபக் ஷவின் இப்போதைய தேவையாக இருக்கிறது.
குறிப்பாக நாமல் ராஜபக் ஷவின் பாதுகாப்பான அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டியது அவருக்கு முக்கியமானது.
மஹிந்த ராஜபக் ஷ தவிர்ந்த வேறெவராலும் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என்பதும், ராஜபக் ஷ குடும்பத்திலுள்ள மற்றவர்களால் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியாது என்பதும் மஹிந்தவுக்குத் தெரிந்த விடயங்கள் தான்.
இவ்வாறான நிலையில், மீண்டும் அதிகாரத்தில் அமருவதை விட முக்கியமான பொறுப்பு மஹிந்த ராஜபக் ஷவுக்கு உள்ளது. அவர் கட்சியையும், குடும்பத்தையும் பலப்படுத்தினால் தான் பாதுகாப்பான நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சிக்காலம் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக் ஷ குடும்பத்துக்கும் சவாலானதாக மாறிவிட்டது. கட்சிக்குள் இருந்தவர்கள் பலர் வெளியே போய் சுயாதீன அணிகளாக இருக்கிறார்கள்.
கட்சியுடன் கூட்டணி வைத்தவர்களும், சுயாதீன அணியில் இணைந்திருக்கிறார்கள்.
ஆக, 2015இல் தோல்வியடைந்து தங்காலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ வைத் தட்டியெழுப்பி, மீண்டும் அரசியல் மேடைக்கு கொண்டு வந்த பெரும்பானவர்கள் இப்போது அவருடன் இல்லை. இது ஒரு இக்கட்டான சூழல்.
இதனைக் கடந்து செல்ல வேண்டுமானால் அது மஹிந்த ராஜபக் ஷவினால் மாத்திரமே முடியும்.
விட்டுப் போனவர்களை ஒன்றிணைக்க இன்னொரு வழியும் உள்ளது. அது சிங்கள பௌத்த தேசியவாதம்.
தன்னால் முடியாது போனால் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் தேசியவாதத்தை கையில் எடுத்தாயினும் பொதுஜன பெரமுனவை மீளக் கட்டியெழுப்ப முயற்சிப்பார்.
இவ்வாறான நிலையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக நிலவுகின்ற குழப்பங்களும் மஹிந்தவுக்கு சவாலாகவே இருக்கிறது.
மூன்றெழுத்துக் கொண்டவர் தான் மொட்டு வேட்பாளர் என்று பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார். சிங்களத்தில், பஷில், நாமல், சமல் மாத்திரமல்ல, யோசித, ரோஹிதவும் கூட மூன்றெழுத்து பெயர்கள் தான்.
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக் ஷ குடும்பத்தில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யப் போகிறதா என்பது முக்கியமானது.
அவ்வாறு தெரிவு செய்தால் தான் கட்சியில் ராஜ பக் ஷ குடும்பத்தின் செல்வாக்கு பாதிக்கப்படாமல் இருக்கும்.
ராஜபக் ஷ குடும்பத்தின் வேட்பாளர் வெற்றி பெறக் முடியாது போனாலும், ராஜபக் ஷ குடும்பத் தின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப் பதை உறுதி செய்வது தான் இப்போது மஹிந்தவுக்கு அவசியம்.
அதுதான் அவரது எதிர்கால திட்டமாக இருக்கும். அதற்காகத் தான் அவர் அரசியலில் நீடிக்கப் போகிறார், அதிகாரத்தை விட்டுக் கொடுக்கவும் தயாராகி விட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM