நமது அரசியல் நிருபர்
2024ஆம் வருடம் நடைபெறும் என உத்தேசிக்கப்படுகின்ற தேர்தல்கள் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் ஆளும் கட்சிக்குள் உருவெடுத்துள்ளன. அதாவது ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா? அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்துவதா? என்பதே ஆளும் கட்சிக்குள் தற்போதுள்ள நெருக்கடியாகும். பஷில் ராஜபக் ஷவுடன் நெருக்கமான ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது ஆட்சிக்கு நல்லது என்று வலியுறுத்துகின்றனர். எந்தத் தேர்தல் வந்தாலும் எந்தவொரு கட்சியும் தனித்து போட்டியிட விரும்பவில்லை என்பதை தேசிய அரசியல் நகர்வுகளின் ஊடாக உணர முடிகிறது. இவ்வாறானதொரு நிலையில் கடந்த வாரம் முழுவதும் பிரதான கட்சிகள் அனைத்துமே தமது அரசியல் முகாம்களை வலுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டன.
ஜனாதிபதியின் அவதானம்
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதிலும் நாட்டிற்கு வருகை தந்திருந்த 28 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூடுதல் கவனம் செலுத்தியிருந்தார்.
இலங்கை கடந்தகால நெருடிக்கடியான நிலைமைகளை கடந்து நம்பிக்கையுடன் முன்னேறி வருவது குறித்து பன்னாட்டு அமைச்சர்களுக்கும் சந்திப்புக்களில் தெளிவுப்படுத்திய ஜனாதிபதி, இதுவரை காலமும் இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டிருந்த அசாதாரணமான நிலைப்பாடுகள் தற்போது புதிய நம்பிக்கைகளுக்கு வித்திடும் வகையில் மாற்றமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு நிலையில், வழமைப்போல் கடந்த திங்கட்கிழமை காலை தனது அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புபடக் கூடிய பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியிருந்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்
குறிப்பாக சர்வதேசத்தின் அவதானத்திற்கு உட்பட்டுள்ள இஸ்ரேல் -– பலஸ்தீன போர் குறித்து இதன் போது பேசப்பட்டது.
உலக வல்லரசுகளுக்கு இடையில் ஏற்படக் கூடிய எந்தவொரு நெருக்கடியான நிலைமையும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் சிறிய நாடுகளுக்கு பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறிய அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக, இஸ்ரேல் - ஹமாஸ் போர் சூழலை கலந்துரையாடலுக்குள் கொண்டு வந்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிலைமைகள் எந்தளவு தூரம் செல்லும் என்று கூற இயலாது. ஆனால் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளின் ஏற்றத்திற்கு காரணமாகி விடும் என்று ஜனாதிபதி ரணில் இதன் போது கூறினார்.
ஆம்... உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் –- ஹமாஸ் போருக்கு முன்னர் விலைகள் குறைந்து வந்த போதிலும் தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டால் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இது நேரடியாகவே மக்களை பாதிக்கும் என்று ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இதன் போது ஜனாதிபதியை நோக்கி கூறினார்.
இந்த நிலைமையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ஏனெனில் சில விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியும். மேலும் சில விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த இயலாது. எனவே தான் உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துரைப்பது முக்கியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க இங்கு தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் இதன் போது கூறினார்.
ஹரின் – மனுஷவின் பதவிகள்
கடந்த வியாழக்கிழமை மாலை வழமைப்போல் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துக்களை கூறினார்.
எங்களது அமைச்சு பதவிகள் இல்லாமல் போய் விடும் என்றே பலரும் கூறுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதியை நோக்கி குறிப்பிட, வீணாக அச்சப்பட வேண்டாம். நஷீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை தெளிவாக வாசியுங்கள் என்று அனைவரையம் நோக்கி ஜனாதிபதி கூறினார்.
குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்சியின் உயர்பீடம் அனுப்பிய கடிதத்திற்கு தன்னை நியாயப்படுத்தி நஷீர் அஹமட் பதிலளித்திருக்கவில்லை. மாறாக பதிலளிக்க கால அவகாசத்தையே கோரியிருந்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறென்பதை அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதனை செய்ய தவறியமையினாலேயே நீதிமன்றம் இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கியது என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நீண்ட விளக்கத்துடன் இந்த விடயத்தை தெளிவுப்படுத்தினார்.
ஆறுதல் கூறிய முக்கியஸ்தர்
அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவரது எம்.பி. பதவிக்கு ஆப்பு வைத்திருக்கின்றது. இதனால் கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அச்சமடைந்திருக்கின்றனர்.
தற்போதைய ஆளுங் கட்சி பக்கம் தாவியுள்ளவர்களும் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படுபவர்களும் இவ்வாறு அச்சம் அடைந்திருக்கின்றனர். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் ஆளுங்கட்சியின் புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்று கருத்து வெளியிட்டுள்ளார்.
நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஆளும் தரப்புக்கு கோட்டாபய ராஜபக் ஷ காலத்தில் மாறியிருந்தார். அவருக்கு அன்று அமைச்சு பதவியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பில் இணைந்துள்ளவர்களுக்கு நஸீர் அஹமட்டின் விடயம் பொருந்தாது என்று இந்த முக்கியஸ்தர் தெரிவித்திருக்கின்றார்.
இதனால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் அவர் ஆறுதல் கூறியிருக்கின்றார்.
சீன கடன் நிவாரணம்
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த பேராசிரியர் ஆசு மாரசிங்க, சீன கடன் நிவாரணம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் அறியவில்லை என்பது உண்மையா? என கலந்துரையாடலை வேறு திசைக்கு கொண்டு செல்லும் வகையில் ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பினார்.
ஆம். அதனை சர்வதேச நாணய நிதியத்திடம் கூறவில்லை. சீனாவுடன் கடன் நிவாரணம் குறித்து கலந்துரையாடினோம். எமது கோரிக்கையை சீன தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இதன் போது நிலைமையை தெளிவுப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து மற்றுமொரு கேள்வியை முன்வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சர்வதேச நாணய நிதியம் 2 ஆம் கட்ட நிதியை இலங்கைக்கு வழங்காது என்று எதிர்க்கட்சி கூறுவதில் உண்மை உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
எமக்கு மக்கள் மீது இனியும் பொருளாதார சுமைகளை சுமத்த இயலாது. ஆனால் அரச வருமானத்தை அதிகரிக்கும் யோசனை திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்துள்ளோம். அதனை அவர்களால் நிராகரிக்க இயலாது. எனவே 2 ஆம் கட்ட நிதியை நாணய நிதியம் எமக்கு வழங்கும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இங்கு சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கட்சியின் மத்திய செயற்குழு வியாழக்கிழமை மாலை கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது பிரதித் தலைவர் பதவியை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து ஜனாதிபதி ரணில் மத்திய செயற்குழுவில் குறிப்பிட்டார்.
ஆனால் கட்சியின் பதவிகளில் தற்போதைக்கு எவ்விதமான மாற்றங்களையும் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை பெரும்பாலான மத்திய செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் ரவி கருணாநாயக்கவுக்கு சார்பான யோசனை நிராகரிக்கப்பட்டு பதவி நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்டம்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு –- செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வரவு -– செலவுத் திட்டமாக முன்வைக்க வேண்டும் என்ற விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பஷில் ராஜபக் ஷ ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.
அதாவது மக்களுக்கு கூடுதல் நிவாரணங்கள் மற்றும் சலுகைகளை வழங்கும் வகையில் இந்த வரவு -– செலவுத் திட்டம் இருக்க வேண்டும் என்பது பஷிலின் வலியுறுத்தலாக உள்ளது. இதனை மையப்படுத்தியே பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன அலுவலக ஊடக சந்திப்புகளில் 2024 ஆம் ஆண்டு வரவு –- செலவுத் திட்டத்தில் மக்களுக்கு கூடிய சலுகைகள் வழங்கப்படும் என்ற விடயத்தை பஷில் ராஜபக் ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அதில் பங்கேற்பவர்கள் கூறி வருகின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளர்
2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்ற நிலைப்பாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் அரசியல் மட்டத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக மூன்றெழுத்தில் பெயர் கொண்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் அரங்குகளில் பேசப்படுகின்றது. ஆனால் வேட்பாளர் யார் என்பதை பஷில் ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளதாகவும், நிச்சயமாக அவர் மூன்றெழுத்தில் பெயர் கொண்டவர் அல்ல என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல்கள் கூறுகின்றன.
புதிய அரசியல் கூட்டணி
ஆளும் கட்சிக்குள் உருவெடுத்து வரும் புதிய அரசியல் கூட்டணியின் சம்மேளனம் மற்றும் மாவட்ட ரீதியிலான பிரசாரக் கூட்டங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
இந்த கலந்துரையாடல்களில் பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். அடுத்துவரும் தேர்தல்களில் வெற்றி இலக்குகளை அடைவதற்காக மக்கள் ஆதரவை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு யோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டன.
புதன்கிழமை சந்திப்பு
அரசியலுடன் தொடர்புப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் சிலர் புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டாளர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. புதிய கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா மற்றும் சுகீஷ்வர பண்டார ஆகியோர் இதன் போது கலந்துக்கொண்டிருந்தனர்.
பல்வேறு அரசியல் கூட்டணிகள் ஏற்கனவே உள்ளன. எதிர்காலத்திலும் அவ்வாறான அரசியல் நோக்கங்களை முன்வைத்த கூட்டணிகள் உருவாகலாம். எனவே உங்களது இந்த அரசியல் கூட்டணியும் சராசரியானதாக இருந்து விடக் கூடாது. மாறாக மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அவ்வாறு இல்லை. நாங்கள் ஆதரவு வழங்கிய தலைவர்களை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். எனவே மாற்று தலைமைகளையே மக்கள் விரும்புகின்றனர். வெற்றி பெறக் கூடிய, மக்கள் விரும்புகின்ற ஒருவரை அடுத்த தலைவராக தெரிவு செய்வோம். இதற்காக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது என்று அநுர பிரியதர்ஷன யாப்பா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெய்சங்கரின் கிழக்கு மாகாண விஜயம் ரத்து
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவர் முன்னிலையில் மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவரது இந்த விஜயத்தின்போது, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் சந்திப்பு, நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றிய கள ஆய்வு மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணஸ்வர ஆலயத்துக்கான விஜயம் உள்ளிட்டவை நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தன.
குறிப்பாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான துணைத்தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஜெய்சங்கரின் கிழக்கு விஜயத்துக்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வதற்காக அங்கே முகாமிட்டும் இருந்தனர். எனினும் இறுதி நேரத்தில் அவரது விஜயம் ரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான காரணம், இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகள் உள்ளிட்ட வெளிவிகார அமைச்சின் முக்கிய செயற்பாடுகள் பலவற்றை நேரடியாக இருந்து கவனித்துக்கொள்வதற்காக அவர் அவசரமாக நாடு திரும்பவேண்டியிருந்துள்ளது. இதனையடுத்தே அவர் மாநாட்டை முடித்துக்கொண்டு அன்றிரவே நாடு திரும்பியிருந்தார்.
இந்தியா, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்திய வெளியுறவுத்துறை ‘ஒப்பரேஷன் அஜய்’ என்ற திட்டத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரெலோவின் மீதான பங்காளிகளின் சஞ்சலம்
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய ஐந்து தரப்புக்களும் இணைந்துள்ள கூட்டணி தான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி. இந்தக் கூட்டணி அண்மைய நாட்களில் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டி மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கெடுத்திருந்தது. அதேபோன்று எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் சம்பந்தமான தீர்மானங்கள் எடுக்கப்படும் கூட்டத்தில் ரெலோவின் முக்கியஸ்தர்கள் யாரும் பங்கேற்றிருக்கவில்லை. தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், வினோ எம்.பி. உள்ளிட்டவர்கள் யாழில் நடைபெற்ற எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கவில்லை.
அவர்களின் பிரதிநிதியாக முன்னாள் வலி.கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மட்டுமே பங்கேற்றிருந்தார். அதேநேரம் விந்தன் கனகரத்தினத்தின் ஆதரவும் காணப்பட்டது. இதனால் தற்போது பங்காளிக்கட்சிகள் ரெலோ எதற்காக பின்னடிப்புச் செய்கின்றது என்ற சஞ்சலத்தினை அடைந்துள்ளனராம்.
விசேடமாக, கட்சிகளை ஒருங்கிணைத்தல், அனைத்துக்கட்சி கூட்டங்களில் பங்கெடுத்தல், ஊடக அறிக்கைகளை தயாரித்து வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் அதிகளவு ஆர்வத்துடன் செயற்படும் சுரேந்திரன் ஒதுங்கிக் கொண்டுள்ளமையாது ஆச்சரியமளிப்பதாக பங்காளிக் கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும், ஹர்த்தால் அனுஷ்டிப்பை வினோ எம்.பி.போன்றவர்கள் பகிரங்கமாகவே விமர்சித்துள்ள நிலையில் ரெலோவின் போக்கு எதனை நோக்கியது என்று பங்காளிக் கட்சியினர் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.
ஜனாதிபதி மீதான விக்கியின் விசனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.விக்னேஸ்வரன் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவது காலதாமதப்படுத்தப்பட்டு வருகையில், அரசியல் கட்சிகள் மற்றும் ஆளுநரை மையப்படுத்திய ஆலோசனைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனையொன்றை வரைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியிருந்தார் விக்னேஸ்வரன்.
அந்த யோசனையின் பிரகாரம் இழக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெற்றுக்கொள்ளவும், ஏறக்குறைய ஒரு இடைக்கால நிருவாக சபைக்கு நிகரானதாக அது அமைந்திருக்கும் என்றும் அவர் கருதியிருந்தார்.
அதற்கான பணிகள் செப்டெம்பரில் ஆரம்பிக்கப்படும் என்றும் பின்னர் அது ஒக்டோபர் முதல்வாரத்தில் ஆரம்பமாகும் என்றும் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, அந்த உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில் ஜேர்மனி பத்திரிகையாளருக்கு ஜனாதிபதி அளித்த நேர்காணல் மூலம் வெளிநாடுகளில் பெற்றிருந்த நன்மதிப்பு அனைத்தும் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஊடாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கடும்போக்கு சிங்களவர்களின் வாக்குகளை உறுதிப்படுத்தியபோதிலும் சிங்களவர்கள் அல்லாதவர்களின் வாக்குகளை இழக்க வேண்டி ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் தேவையில்லாவிடில் தங்களிடம் அதனை கூறுமாறும் தமிழர்கள் பொதுவான தமிழ் வேட்பாளரை நியமிப்பது பற்றி சிந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக்கூடிய ஆலோசனைக் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் அது சம்பந்தமாக எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து மூன்று நாட்களுக்கும் அதிகமான காலம் காத்திருந்த விக்னேஸ்வரன் பதில்கள் எவையும் வழங்கப்படாத நிலையில் தான் அதனை ஊடகங்களிடத்தில் பகிரங்கப்படுத்தியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவும் நாமலும் பரஸ்பர கருத்து
அண்மைய நாட்களில் விகாரைகள், கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்களில் வழிபாடுகளை ஆரம்பித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த. இதன்போது ஊடகங்களும் அவரைப் பின்தொடர்ந்து பல கேள்விகளைத் தொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தான் அவரிடத்தில் அதிகமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அதன்போது நீங்கள் போட்டியிடுவீர்களா, நாமலை களமிறக்குவீர்களா என்றவாறு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் அரசியலமைப்பின் பிரகாரம் போட்டியிட முடியாது என்றும் நாமல் வயதில் சிறியவர் என்றும் கூறியிருந்தார்.
பின்னர், பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலத்தில் பஷில் ராஜபக் ஷவுடனான சந்திப்பினை நிறைவு செய்த பின்னர் நாமல் ராஜபக் ஷவிடத்தில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகின்றீர்களா, உங்களது தந்தை நீங்கள் வயதில் சிறியவராக இருக்கிக்கின்றீர்கள் என்று கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பியபோது, எல்லா தந்தைகளுக்கும் தங்களது புதல்வர்கள் வயதில் சிறியவர்கள் தான். நானும் அவரது புதல்வன் என்பதால் அவர் அவ்வாறு கூறுவதையிட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் எனது தந்தை 21வயதில் அரசியலுக்கு அழைத்து வந்து சமுத்திரத்தில் தள்ளிவிட்டால் நீந்தி வெளியே வரவேண்டும் என்று கூறி என்னை அம்பாந்தோட்டையில் தள்ளிவிட்டார் என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மஹிந்தவிடத்தில் நாமலை ஜனாதிபதி வேட்பாளராக்குவது தொடர்பில் வினவியபோது, மக்களின் விருப்பம் அதுதான் என்றால் அவர் களமிறங்குவார் என்ற தொனிப்பட பதிலளித்துள்ளார். இவ்வாறு இவர்களது பரஸ்பர கருத்துக்கள் நீண்டுகொண்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் எண்ணம் இல்லையாம்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருவதாகவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பஷிலின் யோசனைக்கு இணங்கவே இந்த ஆலோசனை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் அத்தகையதொரு எண்ணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லையென்று ஆளுங்கட்சியின் புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி தலைவர் ஒருவர் புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தருடன் கருத்து பரிமாறிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை. அவ்வாறானதொரு கட்டுக்கதை பரவ விடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறாராம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM