இஸ்ரேல் - பலஸ்தீன மோதலும் நில ஆக்கிரமிப்பின் வரலாறும் 

Published By: Vishnu

15 Oct, 2023 | 06:30 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் பற்றியும், அங்கு கேட்கின்ற அழுகுரல்கள் பற்றியுமே இப்போது நமது முழுக் கவனமும் குவிந்துள்ளது. உண்மையில், நாடோடிகளாக திரிந்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு குடியேறுவதற்கு இடம்கொடுத்த பலஸ்தீன மக்களுக்கும், அவ்வாறு குடியேறி பின்னர் அந்த தேசத்தையே ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நடக்கின்ற ஒரு தர்ம யுத்தம் இதுவெனலாம்!

இந்த யுத்தம் சில நாட்களில் சற்று ஓயலாம். ஆனால் அது தற்காலிகமானதாகவே இருக்கும். ஏனெனில், ஒரு தீர்க்கமான தருணம் வரைக்கும் அதாவது கிட்டத்தட்ட உலகின் கடைசி காலகட்டம் வரை அந்த மண்ணில் முரண்பாடும், மோதலும் தொடரும் என்பதுதான் முன் கணிக்கப்பட்ட வரலாறு எனலாம்.  

அகவே, இஸ்லாமிய – யூத முரண்பாடு அல்லது பலஸ்தீன - இஸ்ரேல் மோதல் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாயின் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சரித்திரத்தை படித்தறிய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டாம் உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரையான முக்கால் நூற்றாண்டு வரலாற்றையேனும் அறிந்திராமல், இன்று காசாவில் நடக்கின்ற சண்டைகளை வைத்துக் கொண்டு மட்டும் நிலமைகளை புரிந்து கொள்ள முடியாது. 

“யூூதர்களில் 90 சதவீதமானோரை நான் கொன்றொழித்து விட்டேன். அவர்கள் ஏன் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற நியாயத்தை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீதமுள்ள கிட்டத்தட்ட 10 சதவீதமானவர்களை விட்டுச் செல்கின்றேன்” என்று, இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு அடோல்ப் ஹிட்லர் சொன்னார். 

இது ஒரு சர்வாதிகாரியாக பார்க்கப்பட்டவரின் வார்த்தைகள் என்பதையும் தாண்டி, யூதர்கள் பற்றிய உலக மக்களின் இன்று வரைக்குமான கசப்பான அனுபவங்களின் அடிப்படையில். இந்த வாசகம் வேறு ஒரு கோணத்தில் நோக்கப்படுவதையும் அவ்வப்போது நாம் காண்கின்றோம். 

கிறிஸ்தவம் உலகின் மிகப் பெரிய சமயமாகவும் இஸ்லாம் அதற்கடுத்த நிலையிலும் உள்ளது. ஆனால், இன்று உலகையே மறைமுகமாக யூதர்கள்தான் ஆட்டிப் படைக்கின்றார்கள் எனலாம். சிலுவைப் போர்கள் தொடங்கி, இரண்டாம் உலகப் போர் காலம் தொட்டு, மூன்றாம் உலகப் போர் பற்றி பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்திலும் இவர்களை மையமாக வைத்தே குழப்பங்கள் உருவாகின்றன. 

இன்று யூதர்கள் இஸ்ரேலில் மட்டுமன்றி அமெரிக்கா உள்ளடங்கலாக பல மேற்கத்தேய நாடுகளின் அரசியல் அதிகாரத்திலும், பொருளாதார கட்டமைப்பிலும் ஆணி வேராக நின்று கொண்டு தமது திட்டங்களை முன்னெடுக்கின்றனர். பாரிய மத, இன, அரசியல், இராணுவ, ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார நகர்வுகளைச் செய்கின்றனர். கண்ணுக்கு தெரியாத விளைவுகளும் உள்ளன. 

உலக வரைபடத்தில் 1940ஆம் ஆண்டுக்கு முன்னர் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவே இல்லை. இப்போது பலஸ்தீனம் என்ற நாட்டை தெளிவாக குறிப்பிடாமல் கூகுள் போன்றவை இருட்டடிப்புச் செய்திருப்பதைப் போல இது நடக்கவிவ்லை. மாறாக, உண்மையிலேயே யூதர்களுக்கு என்று ஒரு தனிதேசம் எந்த வரைபடத்திலும் இருந்திருக்கவில்லை. 

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் குறைவில்லாத சரித்திரம் யூதர்களுக்கு உள்ளது. மத தொடர்புகளும், அதேபோல் முரண்பாடுகள் தொன்றுதொட்டு உள்ளன. ஆனால், அவர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கவில்லை. யூதர்கள் எப்போதுமே, பிரச்சினைக்குரியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டதால் அரூஸிய, பாபிலோனிய காலம் தொட்டு ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டார்கள் அல்லது ஆக்கிரமிக்க நிலம் தேடி ஓடினார்கள்.  

முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த உஸ்மானிய பேரரசு காலத்தில் மட்டும்தான் அவர்கள் கொஞ்சம் மதிக்கப்பட்டார்கள் என்றும் மற்றெல்லாக் காலத்திலும் வாழ இடமின்றி நாடற்றவர்களாகவே யூதர்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக ஓடித்திரிந்தார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். 

இப்படியான ஒரு சூழ்நிலையில், ‘யூதர்களுக்கு என்று தனியான ஒரு நிலப்பரப்பு தேவை’ என்ற கருத்துக்கள் எழுந்தன. ‘யூத மூளையின்’ தேவை மேற்கத்தேய நாடுகளுக்கு இருந்ததாலும் வேறு பல அரசியல் காரணங்களுக்காகவும் யூதர்கள் என்ற பிரகடனப்படுத்தப்படாத அகதிகளை, குடியேற்ற அவர்கள் இடம் தேடினர். 

அப்போது பலஸ்தீனம் என்றொரு பரந்து விரிந்த தேசம் இருந்தது. சுற்றிலும் பல முஸ்லிம் நாடுகள் இருந்தன. இந்த அரபு பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக இப்போது கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற பலஸ்தீன மக்களின் மூதாதையர்கள், யூதர்களைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள். 

‘நாடோடியாக திரிகின்ற யூதர்கள் நமக்குச் சொந்தமான ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்து விட்டுப் போகட்டும்’ என்று அனுமதி கொடுத்தவர்கள் இந்த பலஸ்தீன முஸ்லிம்கள்தான் என்பதை வரலாற்றில் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. முஸ்லிம் அல்லாத சமூகங்கள் இதனை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த அடிப்படையில் மேற்கு ஆசியாவில், மத்திய கிழக்கு எனப்படுகின்ற அரபிய பெருநிலப்பரப்பில், மத்தியதரைக் கடல் ஓரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் யூதர்கள் குடியேற பலஸ்தீனர்கள் இடம் வழங்கினார்கள். இதனால் நாடோடிகளாக திரிந்த பல யூதர்கள் அந்த இடத்தை நோக்கி வந்தனர். 

சமகாலத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பலஸ்தீன நிலப்பரப்பில் அரபு மற்றும் யூத தனித்தனி தேசங்களை நிறுவ ஐ.நா. தீர்மானித்தது. அரபுலகின் ஆட்சியாளர்களை வசப்படுத்துவதற்கும் சில காய்நகர்த்தல் செய்யப்பட்டன. அதுமட்டுமன்றி, திரைமறைவில் இதற்குப் பின்னால் பெரும் உலக அரசியல், ஆக்கிரமிப்பு திட்டங்களும் இஸ்லாத்தை ஒழிப்பதற்கான நிகழ்ச்சிநிரலும் இருந்தன என்பது வேறுகதை. 

அதன்படி, 1948 மே மாதம் இஸ்ரேல் என்றொரு நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு ஐ.நா. ஆசீர்வாதம் வழங்கியது. ஆனால், அதே ஆண்டு செப்டெம்பர் 22 இல் அனைத்துப் பலஸ்தீன அரசை பலஸ்தீன முஸ்லிம்கள் நிறுவிய போது, அதனை 6 முஸ்லிம் நாடுகள் அங்கீகரித்த போது, அதனை ஐ.நா.வோ மேற்குலகமோ முழு மனதுடன் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் அது அவர்களது மறைமுக திட்டத்திற்கு சவாலாக இருந்தது. 

பலஸ்தீனம் என்ற நாட்டின் ஒரு பகுதியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கு ஐ.நா.வில் அப்போதே தனிநாடு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், 193 உறுப்பு நாடுகளில் 138 நாடுகள் ஆதரவளித்த போதும் அந்த அந்தஸ்து (இஸ்ரேலை விட) மூத்த நாடான பலஸ்தீனத்திற்கு இதுவரை கிடைக்ககவில்லை. ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்தே 2012இல் வழங்கப்பட்டது. 

ஆக, நாடோடிகளான யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலஸ்தீன மக்களின் நிலத்தில் இஸ்ரேல் என்ற நாடு உருவாகியது மட்டுமன்றி, பலஸ்தீன மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் தொடங்கியது. அப்போதுதான் பலஸ்தீன முஸ்லிம்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதுதான் சரித்திரமாகும். 

அகன்ற பலஸ்தீனம். அதாவது இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பையும் உள்ளடக்கிய நிலம் என்பது சர்வ சாதாரணமான ஒரு நிலப்பரப்பு அல்ல.. பொதுவான உலக வரலாற்றிலும், குறிப்பாக இஸ்லாமிய வரலாற்றிலும் இது பல சிறப்பம்சங்களை கொண்ட ஒரு முக்கிய மையப் புள்ளியாகும். 

நாம் பாடப் புத்தகங்களில் படித்த மொசப்பத்தேமிய நாகரிகம் உள்ளடங்கலாக பல சரித்திரங்கள்  பலஸ்தீனத்தை சுற்றியே சுழல்கின்றன. பல மதப் பெரியார்கள் அறிவியலாளர்கள், மேதைகள், தத்துவஞானிகள் தோன்றிய பூமியாகும் எண்ணிலடங்கா யுத்தங்கள் இங்கு நடந்திருக்கின்றன. 

இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை பலஸ்தீனத்திற்கும் அங்குள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கும் முக்கிய இடமுள்ளது. இந்த மண் இஸ்லாமிய வரலாற்றோடு மிகவும் பின்னிப் பிணைந்தது. இங்கு நூற்றுக்கணக்கான நபிமார்கள், சஹாபாக்கள் வாழ்ந்துள்ளார்கள்.  அவர்களது அடக்கஸ்தலங்கள் உள்ளன. 

‘உலகம் அழியும் காலத்தில் கூட ஒரு குறிப்பிட்டளவான இஸ்லாமிய மக்கள் இறை அச்சத்துடன் இருப்பார்கள். அவர்கள் அல்-அக்ஸா பள்ளியிலும் அதனைச் சூழவும் இருப்பார்கள்’ என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். உலகம் தொடங்கியதும் உலகம் அழிவதும் இந்த நிலத்தை மையப்படுத்தியது என்றும், மறுமைநாள் இந்த நிலத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். 

மஹ்தி (அலை) எனப்படும் இறுதி இஸ்லாமிய ஆட்சியாளர் தோன்றுவதும், தஜ்ஜால் என்ற விசித்திர மனிதன் வெளிப்படுவதும், பின்னர் கொன்ஸ்தான்தினோபின் (இஸ்தான்புள்) கைப்பற்றப்பட்ட பின்னர் இஸ்லாத்தின் எதிரிகள் கொல்லப்படுதல், உலகம் அழிதல் …. ஏன பல சம்பவங்கள் பலஸ்தீனத்தை மையப்படுத்தி அதனை சூழவுள்ள நிலப்பரப்புகளில் இடம்பெறும் என்பது முஸ்லிம்கள் நம்புகின்ற முன்கணிக்கப்பட்ட வரலாறாகும். 

1960 இலிருந்து பலஸ்தீன பூமி யுத்தகளமாகவே இருந்து வருகின்றது. இதில் பாலஸ்தீன சட்டப் பேரவை பாராளுமன்றம் உருவாக்கம் மற்றும் யசீர் அரபாத் தலைமையிலான பலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றின் வகிபாகங்கள் முக்கியமானவை. அதன் பிறகுதான் ஹமாஸ் உருவாகியது.  எவ்வாறிருப்பினும், பலஸ்தீனர்கள் கடந்த 60 வருடங்களில் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல.

அகவே, பலஸ்தீனம் என்பது, ரஷ்ய ஜனாதிபதி கூறியிருப்பதைப் போல ‘உலக முஸ்லிம்களின் உணர்வில் கலந்த ஒரு விடயம்’ ஆகும். இப்போரட்டம் ஒரு புனித நிலத்தில் குடியேற அனுமதி வழங்கிய பலஸ்தீன மக்களுக்கு நன்றி பாராட்டமால், பல்வேறு காரணங்களைச் சொல்லி இஸ்ரேல் அதனை ஆக்கிரமிப்பதை, மக்களை கொல்வதை எந்த அடிப்படையிலும் ஏற்க முடியாது. அதற்கெதிராக போராடுவது தர்மமாகின்றது. அதற்கான முழு தைரியத்தை பலஸ்தீனியர்கள் கொண்டுள்ளார்கள். 

உண்மையில், யுத்தமும் அப்பாவிகள் உயிரிழப்பதும் முடிவுக்கு வர வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து விட்டுத்தான் ஐ.நா.வும் மேற்குலகமும் சில ஊடகங்களும் உலகுக்கு நீதிக் கதை போதித்து, நீலிக் கண்ணிர் வடிக்கின்றன. ஆகவே. மக்கள்தான் நிலவரங்களை வரலாற்று அறிவுடன் நோக்க வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right