சர்வதேச அரங்கில் 2 வருடங்களின் பின் தோன்றிய இலங்கை : யேமனுக்கு சவால் விடுத்து தோல்வியுற்றது !

13 Oct, 2023 | 10:33 AM
image

(நெவில் அன்தனி)

யேமனுக்கு எதிரான FIFA உலகக் கிண்ணம் 2026, மற்றும் AFC ஆசிய கிண்ணம் 2027 ஆகிய இணை முன்னோடி தகுதிகாண் முதலாம் கட்டப் போட்டியில் 0 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

இப்போட்டி சவூதி அரேபியாவின் அபா, டமாக்  கழக விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

உள்ளூரில் முதல்தர கழக மட்ட கால்பந்தாட்டப் போட்டிகள் (சுப்பர் லீக், சம்பியன்ஸ் லீக்) 22 மாதங்கள் முற்றிலும் முடங்கிப் போயிருந்த நிலையில் இரண்டு வருட இடைவெளியின் பின்னர் சர்வதேச  கால்பந்தாட்டப்  போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்கள், யேமனுக்கு சவாலாக விளங்கினர்.

குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யேமன் பலம் வாய்ந்த அணியாகத் தென்படவில்லை. ஆனால், இலங்கையின் பின்கள வீரர்கள் இழைத்த தவறைப் பயன்படுத்தி யேமன் முதலாவது கோலைப் போட்டு ஆட்டத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகளில் கழக மட்ட கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் இலங்கை வம்சாவளியினரான ஜீ. ஆதவன் ராஜ்மோகன் மற்றும் எஸ்.பி. சுரேஷ் அன்தனி ஆகியோரும் தற்போது தாய்லாந்தில் விளையாடி வரும் வசீம் ராஸீக்கும் இலங்கையின் முதல் பதினொருவர் அணியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

எனினும் முதல் பதினொருவர் அணியில் மொஹமத் ஆக்கிப் இடம்பெறாமல் அவரை கடைசி நேரத்தில் மாற்று வீரராகப் பயன்படுத்தியமை இலங்கை இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.

மாற்றுவீரராக பயன்படுத்தப்பட்ட ஆக்கிப் மைதானத்தின் முன்களத்திலும் பின்களத்திலும் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டார்.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தைப் பெற்றுக்கொண்ட அஹ்மத் மேஹர், இலங்கையின் 3 வீரர்களைக் கடந்து சென்று அலாதியான கோல் ஒன்றைப் போட்டு  யேமன்  அணியை முன்னிலையில் இட்டார்.

அதற்கு சற்று முன்னர் அஹ்மத் அல் சரோரி வலது புறத்திலிருந்து கோலை நோக்கிப் பரிமாறிய பந்தை இலங்கை கோல்காப்பாளர் சுஜான் பெரேரா உயரே தாவிப் பிடித்து அசத்தினார்.

இடைவேளையின் பின்னர் இலங்கை அணியினர் எதிரணிக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடியதுடன் கோல் நிலையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கினர். ஆனால், இலங்கையின் முன்கள வீரர் ஓவ்சைட் நிலையில் இருந்ததால் அந்த வாய்ப்பு அற்றுப்போனது.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் நாசர் அல் கவாஷி சுமார் 25 யார் தூரத்திலிருந்து ஓங்கி உதைத்த பந்து இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரெராவைப் பிரமிக்கச் செய்து கோலின் இடதுபுறமாக உள்ளே சென்றது.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் யெமன் அணித் தலைவர் அல் மட்டாரி 24 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு யேமனை 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.

அவர் ஓங்கி உதைத்த பந்து இலங்கையின் தடுப்புச் சுவருக்கு மேலாக சென்று கோலின் வலது மேல் முலைக்குள் புகுந்தது. அதனைத் தடுக்க சுஜான் பெரேரா எடுத்த முயற்சி கைகூடவில்லை.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கும் யேமனுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டப் போட்டியில் இலங்கை 4 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறும். அதன் மூலம் 6 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாட இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42