(நா.தனுஜா)
உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் என்ற ரீதியில் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (எக்ஸிம் வங்கி) கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிக இணக்கப்பாட்டை எட்டியதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை தவணை அடிப்படையில் முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளக மற்றும் வெளியகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் இலங்கை அதன் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளது.
இருப்பினும் இச்செயற்திட்டத்தின் பிரகாரம் இலங்கை அதன் நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ள விதம் குறித்து ஆராய்வதற்காகக் கடந்த மாதம் நாட்டுக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, இலங்கையின் வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் இன்னமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்படாததன் விளைவாக இலங்கைக்கான இரண்டாம் தவணைக் கடன்தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பொறுத்தமட்டில் இந்தியா, ஜப்பான் மற்றும் 'பாரிஸ் கிளப்' உறுப்பு நாடுகள் உள்ளிட்ட இலங்கையின் கடன்வழங்குனர் நாடுகள் கூட்டிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றி வருவதாகவும், அவை இலங்கைக்கான பிரதான கடன்வழங்குனர் நாடான சீனாவைத் தவிர்த்து கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவது குறித்து ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் வெளியகக் கடன்மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற மாதாந்த ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அந்நாட்டின் வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இச்செயன்முறைக்கு சீனா எத்தகைய உதவிகளை வழங்கியிருக்கின்றது? இருதரப்பு கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஏதேனும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டிருக்கின்றதா?' என்று வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், 'இலங்கையின் நட்புநாடு மற்றும் அயல்நாடு என்ற ரீதியில் தற்போது இலங்கை முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை சீனா உன்னிப்பாக அவதானித்துவருகின்றது. அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றோம்.
குறிப்பாக சீனா தொடர்புபட்டிருக்கும் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டிலிருந்து சீனாவின் சம்பந்தப்பட்ட நிதியியல் கட்டமைப்புக்கள் இலங்கையுடன் மிகநெருக்கமான தொடர்பைப்பேணி செயற்பட்டுவருகின்றன' என்று தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு தொடர்பில் செயற்திறன்மிக்க இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் வகையில் உரியகாலத்தில் 'நிதியியல் ஆதரவு ஆவணத்தை' வழங்கியதாகவும் சீன வெளிவிவகாரப் பேச்சாளர் வாங் வென்பின் சுட்டிக்காட்டினார்.
'அனைத்து கடன்வழங்குனர்கள் கூட்டத்திலும் சீனாவின் நிதியியல் கட்டமைப்புக்கள் கண்காணிப்பாளராகப் பங்கேற்றன. அத்தோடு கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றத்தைப் பகிரக்கூடியவகையிலான நட்பு ரீதியான தொடர்பாடலை சீன நிதியியல் கட்டமைப்புக்கள் ஏனைய கடன்வழங்குனர்களுடன் பேணின' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த செப்டெம்பர்மாத இறுதியில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் என்ற ரீதியில் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிக இணக்கப்பாட்டை எட்டியதாக சுட்டிக்காட்டிய வாங் வென்பின், இலங்கையின் கடன்நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் ஏனைய கடன்வழங்குனர்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM