என்.கண்ணன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், ஜேர்மனியில் 'டி. டபிள்யூ' ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வி, கடந்த திங்கட்கிழமை வெளியாகியது.
இதுவரை காலமும் யாரும் பார்த்திராத ரணில் விக்கிரமசிங்கவின் முகத்தை- அந்த செவ்வி வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையிலும் உலகம் முழுவதிலும், பரபரப்பாக பேசப்பட்ட, பார்க்கப்பட்ட, விமர்சிக்கப்படுகின்ற செவ்வியாக இது அமைந்திருக்கிறது.
முழுமையாக கோட்டாபய ராஜபக்ஷவாக மாறிய ரணில் விக்கிரமசிங்கவை இந்தச் செவ்வியில் காண முடிந்தது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அவர், ‘அரகலய’ போராட்டக்காரர்களை ஒடுக்க ஆரம்பித்த போதே ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷவாக மாறத் தொடங்கினார்.
2009ஆம் ஆண்டு போர் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவருக்கு, அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவாக செவ்வியளித்திருந்தார்.
அந்தச் செவ்வி பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் ஊடகவியலாளர் வித்தியாதரன் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது கைது தொடர்பாக அந்தச் செவ்வியில் அவுஸ்ரேலிய ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, கோட்டாபய ராஜபக்ஷ அடைந்த சீற்றமும், அதற்கு அவர் பதிலளித்த முறையும் - அந்தக் காலத்து அச்சுறுத்தல் நிலைக்கு உதாரணமாக அமைந்திருந்தது.
அந்தச் செவ்விக்கு இணையானதாக, குறிப்பிடக் கூடிய வகையில் தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜேர்மனியின் டி.டபிள்யூ ஊடகத்துக்கான செவ்வி அமைந்திருக்கிறது.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக, ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களில் பல செவ்விகளை வழங்கியிருந்தாலும், அவுஸ்ரேலிய ஊடகவியலாளருடனான செவ்வியின் போது நடந்து கொண்டது போல, அவர் கோபப்பட்டதில்லை. நிதானமாகவே பதிலளித்திருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் சரி, பதவியிழந்த போதும் சரி- கடினமான கேள்விகளுக்குக் கூட, சிரித்தபடி அல்லது சிரித்து சமாளித்தபடி, பதிலளித்திருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதுவரை காலத்திலும், அவ்வாறான ஒருவராகத் தான் ஊடகங்களினால் அறியப்பட்டிருந்தார். ஆனால், இப்போது அவர், தனது இன்னொரு பக்கத்தை ஊடகங்களிடம் காண்பித்திருக்கிறார்.
நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அவர் தனது மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் தனது இயல்பு நிலையை இழந்து இந்தச் செவ்வியை எதிர்கொண்டமைக்கு செவ்வி கண்ட ஊடகவியலாளரின் கேள்விகள் தான் காரணமா? அல்லது அதற்கு முன்னரான தொடர் நிகழ்வுகள் அவரை கடுப்பான நிலைக்குத் தள்ளியதா என்ற கேள்விகள் இப்போது இருக்கின்றன.
ஏனென்றால், இந்தச் செவ்வியில் ரணில் விக்கிரமசிங்க, வெளியிட்ட கருத்துக்கள், ஊடகவியலாளரை நோக்கி எழுப்பிய கேள்விகள், கேள்விகளை எழுப்பிய தொனி, ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் பதிலளித்த முறை எல்லாமே, வேறுபட்ட ஒன்றாகத் தான் இருந்தது.
அவர் செவ்வியின் தொடக்கத்தில் இருந்தே, முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார். இது அவர் ஜேர்மனியில் எதிர்கொண்ட இறுக்க நிலையை அல்லது அண்மைய அரசியல் மற்றும் பிற சூழ்நிலைகளால் அவர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற நிலையின் விளைவாக இருக்க கூடும்.
இந்தச் செவ்வியில் அவர், கேள்வி கேட்க உங்களுக்கு என்ன உரிமை என்று ஊடகவியலாளரைப் பார்த்து கேட்கிறார் ரணில்.
ஜனாதிபதி ரணில் இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக கேள்வியை எழுப்பியிருப்பதும், முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று அதட்டியதும், சாதாரண விடயங்கள் அல்ல.
“எங்களை இரண்டாம் தரத்தவர்களாக நினைக்கிறீர்களா? இந்த மேற்குலக மனோநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். அதனை நிறுத்துங்கள், நான் நிறுத்துகிறேன்.” என்று கூறும் அவர் ஒரு கட்டத்தில் செவ்வியில் இருந்து வெளியே போவதாகவும் அச்சுறுத்துகிறார். இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எதிர்பார்த்திராத பிரதிபலிப்புகள்.
ரணில் விக்கிரமசிங்கவை எப்போதும் நரித்தனமான அரசியல்வாதியாகவே இலங்கை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் சிரித்துச் சிரித்துப் பேசுவார். ஆனால், செயலளவில் அந்த நெகிழ்வு இருக்காது என்பது பொதுவாகத் தெரியும்.
அதற்கு மாறாக, ஜேர்மனிய ஊடகத்திடம் அவர் மேற்குலக ஊடகங்களை விமர்சித்த விதம், சனல் 4 போன்ற ஊடகங்களின் அறிக்கைகளால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார், நெருக்கடியை எதி்ர்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சனல் 4 குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டதும் அவர் கொந்தளிக்க ஆரம்பித்து விடுகிறார். “முன்னாள் சட்ட மா அதிபர் குற்றம்சாட்டினார், முன்னாள் குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் குற்றம்சாட்டினார் அதையெல்லாம் விட்டு விட்டு, சனல் 4 குற்றச்சாட்டை தூக்கிக் கொண்டு வருகிறீர்களே, சனல் 4 என்றால் புனிதமானதா?” என்று அவர் சீற்றமடைகிறார்.
அதன் தொடர்ச்சியாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் ரணில் விக்கிரமசிங்க இன்னும் கோபப்படுகிறார்.
அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாத்திரமன்றி, எந்தவொரு விவகாரம் குறித்தும் சர்வதேச விசாரணையை அரசாங்கம் நடத்தாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இதனை ரணில் விக்கிரமசிங்க அமைதியாக கூறவில்லை. மேற்குலக ஊடகங்களையும், மேற்கு நாடுகளையும் அவர், வம்புக்கு இழுக்கிறார்.
ஜேர்மனியிலோ, பிரித்தானியாவிலோ ஏதாவதொரு விடயத்துக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டிருக்கிறதா, இலங்கையையும். ஆசியாவையும் மட்டும் ஏன் அவ்வாறு நடத்துகிறீர்கள்? என்று ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்திய கோபம், மேற்குலகத்தின் அண்மைய நகர்வுகள் அவரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும், நாட்டில் ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையையும் நிராகரித்திருக்கிறார்.
சாந்தமான அரசியல்வாதியாக அறியப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, நிதானமாகப் பதிலளிக்க கூடியவர். அவர் ஏன் இவ்வாறு ஜேர்மனிய ஊடகத்தின் செவ்வி முழுவதும் கடுகடுப்பானவராக இருந்தார், சீற்றத்தை வெளிப்படுத்தினார் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, அண்மைக்காலத்தில் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள்.
சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இந்த விவகாரம் அரசாங்கத்தை எந்த நிலைக்குள் தள்ளி விடுமோ என்ற பயத்தை அவருக்குள் ஊட்டியிருக்கிறது.
அதுபோலவே, நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விடயம், அந்தச் செவ்வியில் இடம்பெறாத போதும், அவர் செவ்வியளித்த காலகட்டத்தில், அந்த விவகாரமும் சர்வதேசத்தின் கைக்குச் சென்றது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். மேற்குலகின் செல்லப்பிள்ளை என்று கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்குலகம் அளித்து வருகின்ற நெருக்கடிகள், அவரால் எதிர்பார்க்கப்படாததாக இருக்கலாம்.
சீனா விடயத்தில் அவரது அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புவிசார் அரசியல் குறித்த கரிசனைகள் குறித்து, இலங்கையுடன் அமெரிக்கா அல்லது ஜப்பான் பேசலாமே தவிர, மூன்றாவது தரப்பு நாடு பற்றி பேசக் கூடாது என்று தகவல் அளித்திருக்கிறார்.
இதுவும் மேற்குலக அழுத்தங்களின் வெளிப்பாடுகளில் ஒன்று தான்.
பல பக்க நெருக்குவாரங்களில் சிக்கியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச விசாரணைக் கோரிக்கை தொடர்பான கேள்விகளை சீற்றத்துடன் எதிர்கொண்டிருக்கலாம்.
செவ்வியில் ஊடகவியலாளரை விஞ்சி கேள்விகளைத் தொடுத்து அவரைக் குழப்பி, அவரது இலக்கை அடைய விடாமல் தடுப்பது ஒரு உத்தி.
ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறு தான், தனக்கெதிராக போடப்படக் கூடிய பந்துகளை தவிர்ப்பதற்காக, அந்தக் களத்தில் இயல்பற்ற சூழலை உருவாக்க முனைந்திருக்கிறார்.
அதன் மூலம் அவர் உருவாக்க முயன்ற விம்பம் தான், இரண்டாவது காரணம்.
அதாவது, சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயரை காப்பாற்றி விட்டார், குற்றச்சாட்டுகளை ஒதுக்கி விட்டு மேற்குலகத்தை பிளந்து கட்டி விட்டார் என்றெல்லாம், சிங்களத் தேசியவாதிகள் சிந்திக்கக் கூடிய வகையில் ஒரு உளவியல் போரை நடத்தியிருக்கிறார் ரணில்.
விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் வேட்பாளராக இருப்பாரா- இல்லையா என்ற உறுதியான நிலை இல்லாத போதும், தன்னைக் கதாநாயகனாக நிறுவுவதற்கு இந்தச் செவ்வியைப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ரணில்.
மேற்குலக ஊடகங்களை கடுமையாக எதிர்த்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது எதனைக் கூறினாரோ, கோட்டாபய ராஜபக் ஷ எதனை கூறினாரோ அதனையே தான் ரணிலும் கூறியிருக்கிறார்.
ஆனால், அவர் முன்னையவர்களை விட ஆக்ரோசமாக கொடுத்திருக்கும் பதிலும், செவ்வியை எதிர்கொண்ட விதமும், அவரை சிங்கள மக்கள் கதாநாயகனாக பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது.
இதுதான் ரணில் எதிர்பார்த்த இலக்காக இருந்தால்- இந்தச் செவ்வி அவருக்கு 100 சதவீத வெற்றி எனலாம்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள ஜேர்மனிய ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, இன்னொரு கோட்டாவை சிங்கள மக்கள் விரும்புவார்களா என்பதை அவர் சிந்திக்கத் தவறினாரா என்ற கேள்வியும் இருப்பதை மறந்து விடக் கூடாது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM