கபில்
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், இரண்டு முக்கியமான விடயங்கள் அண்மையில் அதிக கவனிப்பை பெற்றிருக்கின்றன. முதலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் அணிதிரள்வு.
இரண்டாவது, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படுத்தியிருக்கின்ற கவலை.
நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ். நகரில் இருந்து மருதனார்மடம் வரையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றுபட வைத்திருக்கிறது.
நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் சாதாரணமானதல்ல.
அதற்கு எதிராக காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும், அதனைக் கவனமாக ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.
தமிழ் மக்கள் தங்களின் உயிர்களைக் கொடுத்தும் கூட நீதியை - சுதந்திரத்தை, உரிமையை அடைய முடியாமல் இருக்கின்றனர்.
இதற்கென பாரிய விலைகளை அவர்கள் செலுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், இந்த இழப்புகளுக்கு எல்லாம் நீதி கிடைக்கவில்லை. தமிழர்கள் தங்களின் உரிமைகளை அடைய முடியவில்லை.
அதற்கு பூகோள அரசியல் முக்கியமானது. இலங்கையில் தமிழர்களின் போராட்ட நியாயங்களை விட ஒப்பீட்டளவில் பலவீனமான போராட்டங்களை நடத்திய இனக்குழுக்கள் கூட தாங்கள் எதிர்பார்த்த தீர்வை எட்டியிருக்கிறார்கள்.
ஆனால். பூகோள அரசியல் சக்திக்குள் சிக்கிக் கொண்டுள்ளதால், தமிழர்களுக்கான நீதியும், உரிமையும், இன்று வரை கைக்கு வராத நிலையே நீடிக்கிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை- தமிழர்களின் தாயகத்தில் இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புகளை நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலும், அவரது வெளியேற்றமும், அச்சொட்டாக வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையைக் கண்டிப்பதும், இதற்கெதிராக போராட்டம் நடத்துவதும் மாத்திரம் முக்கியமல்ல. கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதும் தான் முக்கியமானது.
இலங்கையில் பேரினவாத மேலாதிக்கம், அதனால் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழ் நீதிபதிகளுக்கும் கூட இருக்கின்ற பாதுகாப்பற்ற நிலையை சரவணராஜாவின் வெளியேற்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தமிழர்களுக்கான நீதியை எட்டுவதற்கு முயற்சிக்க முடியும். அதற்கான கதவை தட்டித் திறக்க முடியும்.
அதனால் தான் மனித சங்கிலிப் போராட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது. எனினும், இந்த விவகாரத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் முயற்சிகள் அவசியமானது.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கடந்த பல மாதங்களாகவே ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிச் சிதைந்து போய்க் கிடக்கின்றன.
ஓரளவுக்கு பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து, தமிழ் அரசுக் கட்சி தனியாகவும், ஏனைய பங்காளிகள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயரிலும் அணி திரண்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனி வழியில் செல்கிறது. தமிழ் மக்கள் கூட்டணியும் அவ்வாறானதொரு நிலையில் தான் காணப்பட்டது.
முன்னதாக, தியாகி திலீபன் நினைவேந்தல் போன்ற தமிழ்த் தேசிய நினைவு நாட்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட்டன.
அண்மைக் காலத்தில் அத்தகைய நிகழ்வுகளிலும் முரண்பாடுகள் தலைதூக்கி, தனித்தனியாக நினைவேந்தல்களை நடத்தும் நிலை தோன்று விட்டது.
தமிழ்த் தேசிய அரசியல் வலுப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.
அவ்வாறான நிலைக்கு ஒரு கட்சியையோ ஓரிரு தலைவர்களையோ குறை கூறிப் பயனில்லை. எல்லாத் தரப்புகளிலும் தவறுகள் இருந்தன.
அந்த தவறுகளைத் திருத்திக் கொள்ள அவர்களும் தயாராக இருக்கவில்லை.
அத்தகைய தவறுகளை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கவோ, ஆலோசனை கூறக்கூடிய செல்வாக்குமிக்க ஆளுமைகளும் தமிழ்த் தேசிய பரப்பில் குறைந்து விட்டது.
அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி குறித்து தமிழ் மக்கள் ஆழமான அதிருப்தியையும், வெறுப்பையும் கொண்டிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் தான் நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை தோற்றுவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தான் தமிழ்க் கட்சிகளை ஓரணியில் திரளும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழ்க் கட்சிகளின் இந்தப் போராட்டம் வெற்றிகரமானது எனக் குறிப்பிட முடியாது.
இதனை விடவும் வலுவானதொரு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காத்திரமான முறையில் அரசாங்கத்துக்கு செய்தி சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்க்கட்சிகள் தங்களுக்கிடையில் முட்டிக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களால், தமிழ் மக்கள் சோர்வடைந்திருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் போதிய ஆயத்தங்கள் இல்லாமை, மனித சங்கிலிப் போராட்டத்தை ஒரு வரையறைக்குள் மட்டுப்படுத்தி விட்டது.
எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்காக தமிழ்த் தேசிய கட்சிகள் இன்னமும் ஒன்றாக செயற்படக் கூடிய ஒரு மெல்லிய வாய்ப்பு இருப்பதை இது உணர்த்தியிருக்கிறது.
காலம் உணர்த்திய இந்த விடயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான், தமிழ்க் கட்சிகளும் பிழைத்துக் கொள்ளலாம், தமிழ் மக்களும் பிழைத்துக் கொள்ளலாம்.
அடுத்து, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை பலரது கவனத்தைப் பெற்றிருக்கிறது.
அதில் அவர், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற மனநிலை தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.
அவர் இப்படிக் கூறியதற்கு காரணம், ரெலோ ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட பின்னர், இடம்பெற்ற இனப்படுகொலைகளோ, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளோ அல்ல.
தற்போது இடம்பெற்று வரும் பௌத்த மயமாக்கலும், பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களும், ஆக்கிரமிப்புகளும் தான் தம்மைச் சோர்வடைய வைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
1986இல் விடுதலைப் புலிகள், ரெலோவின் செயற்பாட்டுக்குத் தடைவிதித்திருந்தாலும், 1987இல் இந்திய- - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ரெலோ அறிவித்திருந்தது.
அதற்குப் பின்னரும் ரெலோவிடம் ஆயுதம் இருந்ததும், இந்தியப்படை மற்றும் இலங்கைப் படைகளுடன் சேர்ந்து ஆயுதக் குழுவாக இயங்கியதும் பழைய வரலாறு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னர், ரெலோ அரசியல் வழியில் மட்டும் செயற்படுகிறது.
ஆனாலும், பௌத்த ஆக்கிரமிப்புகளை, பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளுக்கு எதிராக நின்று பிடிக்க முடியாமல் சோர்ந்து விட்டார் செல்வம் அடைக்கலநாதன்.
தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் பௌத்த மயமாக்கல் இன்று முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இவ்வாறான தருணத்தில் தான் செல்வம் அடைக்கலநாதன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
அது சரியான முடிவா- தவறான முடிவா என்பது வேறு விடயம். ஆனால், மீண்டும் ஆயுதம் ஏந்துவது பற்றி அவர் சிலாகித்துக் கூறியிருக்கின்ற கருத்து முக்கியமானது.
அவரது இந்தக் கருத்து யாரையும் தவறாக வழிநடத்துவதற்கோ, தமிழ் மக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவதற்கோ காரணமாக அமைந்து விடக்கூடாது.
ஏனென்றால், ஒரு சரியான தலைமைத்துவம் எடுக்கின்ற பிழையான முடிவுகள் கூட, சில வேளைகளில் சரியான விளைவுகளைத் தரக் கூடும்.
ஆனால், தவறான தலைமைத்துவம் சரியான முடிவை எடுத்தாலும் கூட, அது தவறாகிப் போய் விடும்.
இந்த இடத்தில் செல்வம் அடைக்கலநாதன் சரியான தலைவரா இல்லையா என்ற விவாதத்துக்குள் செல்வதல்ல இந்தப் பத்தியின் நோக்கம்.
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், அவர் பகிரங்கமாக ஒரு விடயத்தை அறிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் (2013) இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை முன்வைக்காது போனால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அப்போது அறிவித்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து 10 ஆண்டுகள் கழித்தும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வரவும் இல்லை. செல்வம் அடைக்கலநாதன் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கவுமில்லை.
உண்ணாவிரதப் போராட்டத்தையே முன்னெடுக்காத அவரா ஆயுதப் போராட்டம் நடத்தப் போகிறார்?
வரவர, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தங்களைத் தாங்களே திரைக் கோமாளிகள் போல ஆக்கிக் கொள்கின்றனரோ என்று தான் இப்போது கருத தோன்றுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM