சதீஷ் கிருஷ்ணபிள்ளை
இந்தியாவில் மீண்டும் ஊடக சுதந்திரம் பற்றி தீவிரமாக பேசப்படுகிறது. அரசாங்கம் ஊடகங்களை ஒடுக்கத் தொடங்கியிருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்திரா காந்தியின் ‘எமஜெர்ன்சியை’ ஒப்பிட்டு, 'மீண்டும் பிரகடனப்படுத்தப்படாத அவசரகால நிலை' என்று 'ஹிந்து' பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் நடத்திய சோதனைகளும், சுற்றிவளைப்புக்களும் இதற்கு முக்கியமான காரணம்.
இணைய வழியில் செய்திகளை வெளியிடும் 'நியூஸ்-கிளிக்' நிறுவனத்துக்காக வேலை செய்பவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.
நியூஸ்-கிளிக் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள், செய்தியாளர்கள் அடங்கலாக 30 பேரின் வீடுகள் சுற்றி வளைக்கப்பட்டன. இந்தியாவில் 'சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்குரிய சட்டம்' என்ற சட்டம் உள்ளது. இதுவும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போன்றது தான்.
இந்த சட்டத்தின் கீழ், பிரபீர் புர்க்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். முன்னையவர் செய்தி இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியர். மற்றவர் ஆளணி வள மேலதிகாரி.
மறுநாள், இந்திய உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசருக்கு நாடளாவிய ரீதியில் உள்ள ஊடக நிறுவனங்கள் இணைந்து மனுவொன்றைக் கொடுத்தன. அரசாங்கத்தின் ஒடுக்குமுறையைத் தடுக்க நீதிமன்றம் தலையிட வேண்டும் என மனுவில் எழுதப்பட்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு மனுவில் இருந்தது. நியூஸ்-கிளிக் செய்தியாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அத்தகைய தாக்குதலின் நீட்சியென அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
நியூஸ் கிளிக் மீது அரசாங்கம் முன்வைக்கும் விமர்சனம் ஏடாகூடமானது. சீனாவிடம் இருந்து பணம் பெற்று, சீனாவின் கோட்பாடுகளை இந்தியாவுக்குள் பரப்ப முனைகிறது என பா.ஜ.க.வின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். விசாரணைக்காக செய்தியாளர்களை விசாரிப்பதன் மூலம் செய்தியாளர்கள் தமது கடமைகளையே செய்வதாக கூறுகின்றனர்.
நியூஸ்-கிளிக் என்பது ஆங்கில மொழியில் செய்திகளை வெளியிடும் ஒரு இணையத்தளமாகும். அரசியல் முற்போக்குத்தன்மையை முன்னிறுத்தி செயற்படுவதாக இந்நிறுவனம் கூறுகிறது. இதன் இணையத்தளத்தில் சேர்க்கப்படும் செய்திகள் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் தொனியில் அமைந்திருந்தன.
இதனை ஸ்தாபித்த பிரபீர், பிரபலமான செய்தியாளர். 2009ஆம் ஆண்டு அவர் நியூஸ்-கிளிக் இணையத்தளத்தை ஸ்தாபித்தார். 1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் அமுலாக்கப்பட்ட அவசரகால சட்டம் பிரசித்தமானது. அந்த சட்டத்தின் கீழ் அப்போதும் கூட கைது செய்யப்பட்டவர் தான் பிரபீர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரும் நியூஸ்-கிளிக் நிறுவனத்தின் அலுவலகங்களும், பிரபீரின் வீடும் சோதனையிடப்பட்டன. அப்போதும் கூட பணம் தூயதாக்கல் என்ற குற்றச்சாட்டு தான் முன்வைக்கப்பட்டது. இப்போதும் அதே குற்றச்சாட்டின் கீழ், பிரபீர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதிய கட்டுரையின் அடிப்படையில், நியூஸ்-கிளிக் நிறுவன செய்தியாளர்களும் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுவதாகக் கூறலாம். அமெரிக்காவில் வாழும் நெவில் ரோய் சிங்கம் என்ற கோடீஸ்வரரிடம் இருந்து நியூஸ்-கிளிக் நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்படுவதாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை எழுதியிருந்தது.
இந்த நெவில் ரோய் சிங்கம் பற்றி கடும் விமர்சனங்கள் உண்டு. இவர் சீன அரசாங்கத்தின் கொள்கைகளை உலகெங்கிலும் பரப்ப பாடுபடுபவர் என்பது பிரதான விமர்சனம். இந்த நோக்கத்தை அடைவதற்காக இவர் பணத்தை வாரியிறைக்கிறார் எனவும், இவரது வலைப்பின்னலில் நியூஸ்-கிளிக் சிக்கியிருப்பதாகவும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை குற்றம் சாட்டியது.
இதற்கு ஆதாரமாக நியூயோர்க் ரைம்ஸ் முன்வைத்த விடயம், நியூஸ்-கிளிக் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்ட வீடியோ காணொளி. 'உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு உத்வேமாக அமையும் சீனாவின் வரலாறு' என்ற தொனிப்பொருளில் காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு வீடியோவை தயாரிக்கும் தேவை நெவில் ரோய் சிங்கத்திற்கே இருக்கக்கூடும் என்பது நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் கணிப்பு.
"எங்கெல்லாம் முற்போக்கு என்ற பெயரில் அரச சார்பற்ற குழுக்கள் அரசுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்களோ, அங்கெல்லாம் நெவில் ரோய் சிங்கத்தின் தலையீடு இருக்கும். இந்த அமைப்புக்களுக்கு காசு கொடுத்து, சீன அரசாங்கம் பேச நினைக்கும் விடயங்களை பேச வைப்பார்" என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை எழுதியிருந்தது. இந்த மனிதர் சீனாவின் ஹுவாவே நிறுவனத்திற்கு ஆலோசகராக கடமையாற்றியவர் என்பது உபரித் தகவல்.
இந்தியாவில் நிதி விவகாரங்களை கண்காணிக்கக்கூடிய அமுலாக்கல் பணியகம் (Enforcement Directorate) என்றொரு அமைப்பு உண்டு. இந்த அமைப்பு நியூஸ்-கிளிக் இணையத்தளத்தை விசாரித்தது.
இதன்போது, கடந்த மூன்றாண்டுகளில் 38 கோடி இந்திய ரூபாவை நியூஸ்-கிளிக் இணையத்தளம் பெற்றிருப்பதாக இந்திய அமுலாக்கல் பணியகம் கூறுகிறது. இந்த 38 கோடி எங்கிருந்து கிடைத்தது என்பதை ஆராய்ந்தால், அதன் மூலதாரம் சீனாவில் இருக்கிறது எனவும் அப்பணியகம் குற்றம் சுமத்துகிறது.
இந்தப் பணியகத்தின் கருத்துப்படி, இன்னதென்று அறிய முடியாத மூலாதாரங்களில் இருந்து நியூஸ்-கிளிக்கிற்கு நிதி கிடைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு தொடக்கம் நெவில் ரோய் சிங்கத்தை செய்தி ஆசிரியர் பிரபீர் அறிந்திருந்தாலும், அவருடனான தொடர்புகளை விசாரணையின்போது பிரபீர் மறைத்திருந்ததாகவும் அமுலாக்கல் பணியகம் கூறுகிறது.
நியூஸ்-கிளிக் இணையத்தள விவகாரம் இந்தியாவில் அரசியல் புயலைக் கிளப்பி விட்டிருப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு புறத்தில் தேசபக்தி, மறுபுறத்தில் வெளிநாட்டு சக்திகள். இவை வெறும் வாயை மெல்லக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த அவல் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி சக்திகளும் நியூஸ்-கிளிக் நிறுவனத்தைக் காப்பாற்ற முனைவதாக பா.ஜ.க.வின் அமைச்சர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இந்த விவகாரத்தின் அடிப்படையில் பரந்த அளவில் குற்றச்சாட்டுக்களும், மறுதலிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. எது உண்மை, எது தவறு என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்கு விடயங்கள் சோடிக்கப்படுகின்றன. எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது என நியூஸ்கிளிக் அமைப்பு மறுப்பறிக்கை விடுவதை புரிந்து கொள்ள முடியும். எந்தவொரு ஊடக ஒடுக்குமுறையிலும் நெறிமுறைகள் கிடையாது எனவும் பிரபீர் குறிப்பிடுகிறார்.
தமது நிறுவனத்திற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின், முறைப்பாட்டை பதிவு செய்த எவ்.ஐ.ஆர். அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களை விபரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யப்படவில்லை. மாறாக, செய்தியாளர்களின் திறன்பேசிகளையும், மடிக்கணினிகளையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். இவை இல்லாமல் எவ்வாறு வேலை செய்வது, இது ஊடகப் பணியை செய்ய விடாமல் தடுத்து விடும் முயற்சி அல்லவா என்று நியூஸ்-கிளிக் கேள்வி எழுப்பியுள்ளது.
'ஹிந்து' பத்திரிகையும் தலையங்கத்தில் இதே விஷயத்தைத் தான் பேசுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்தின் கீழ், இருவரைக் கைது செய்திருக்கிறார்கள். அந்தக் கைதுகளை நியாயப்படுத்தக்கூடிய குற்றச்சாட்டு எதுவென்பதை தெளிவாக அரசாங்கம் வரையறுக்காவிட்டால், அதன் அர்த்தம் என்ன என்று ஹிந்து பத்திரிகை கேள்வி எழுப்புகிறது. சீனாவுடன் தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாத விவகாரத்தை விசாரிப்பதாக பொலிஸார் கூறியபோதிலும், இங்கு பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய எதுவித விடயமும் கிடையாதென ‘ஹிந்து' பத்திரிகை கூறுகிறது.
“நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை ஏதோவொன்றை எழுதிவிட்டால், அதனை எடுத்துக் கொண்டு நியூஸ்-கிளிக் நிறுவனத்தை வில்லனாக சித்தரிக்க அரசாங்கம் முனைகிறது. இது விமர்சன ஊடகவியலின் கழுத்தை நெறிக்கும் செயல். கழுத்தை நெறிப்பதற்காக ஒரு ஊடக நிறுவனம் பலிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்கமும் வெறுமனே சந்தேகத்தின் அடிப்படையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஒடுக்க முடியாது” என ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
நியூஸ்கிளிக் இணையத்தளமொன்றும் மிகப்பெரிய ஊடக நிறுவனம் கிடையாது. இன்று இந்தியாவின் ஊடக ஜாம்பவான்கள் இந்த நிறுவனத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்றால், இது மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை என்பதை மறுதலிக்க முடியாது.
அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் ஒருவர் சீனாவின் கோட்பாடுகளைப் பரப்புவதற்காக உலக நாடுகளில் ஊடக அமைப்புக்களைத் தூண்டி விடுகிறார் என்று நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை முன்வைத்த குற்றச்சாட்டும், அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பயங்கரவாத சட்டமொன்றை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுவதும் மிகத் தீவிரமான விஷயங்கள்.
பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் எப்போது ஆட்சி பீடமேறியதோ, அந்த நாள் தொடக்கம் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்பட்டதாக உலக அளவில் விமர்சனங்கள் உள்ளன. போதாக்குறைக்கு, பத்திரிகை சுதந்திரம் சிறப்பாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 150ஆவது இடத்தில் இருந்து 161ஆவது இடம் வரை கீழிறங்கியுள்ளது.
எனவே, நியூஸ்-கிளிக் விவகாரத்திலேனும் இந்திய அரசாங்கம் சற்று மனசாட்சியுடன் செயற்படுவது அவசியம். குற்றச்சாட்டுக்கள் உண்மையெனில் அவற்றை ஆதாரத்துடன் நிரூபிப்பது மாத்திரமன்றி, நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் தவறை ஏற்றுக் கொள்ளவேனும் அரசாங்கம் முன்வர வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM