கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் 2016 ஆம் ஆண்டுக்ககான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி நேற்றையதினம்  கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. 

இப்போட்டிக்கு பிரதம விருந்திருந்தினராக கிளிநொச்சி மாவட்ட  அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி , பூநகரி பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வருடந்தோறும் நடைபெற்றுவரும் இவ் அரசஅதிபர் வெற்றிக்கிண்ணப்  போட்டியில் இம்முறை மாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலக அணிகளும் மற்றும் மாவட்ட செயலக அணியும் போட்டியிட்டன. இதில் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி தட்டிக்கொண்டது.

பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட அரச அதிபர், கருத்து தொிவித்த போது  இப்போட்டியானது மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும்  உடல், உளஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்தது என தெரிவித்ததோடு இனிவரும் காலங்களில் நடத்தப்படவுள்ள அரச அதிபர் கிண்ணப்போட்டி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களையும் உள்ளடக்கி நடாத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.