சுவாமிநாதன் சர்மா
பட்டயக் கணக்காளர் வரி, முகாமைத்துவ ஆலோசகர்
சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூயர் மற்றும் கட்சியரினா ஸ்விரிட்சென்கா தலைமையிலான குழு செப்டம்பர் மாதம் 14 முதல் 27, வரை கொழும்பிற்கு விஜயம் செய்தது. இதன்போது குழுவினர் மதிப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களையும் சந்தித்தனர்.
விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியக் குழு தமது பயணத்தின் முடிவில் “இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும் முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதால் எடுத்த முயற்சிகள் பலனைத் தருகின்றன எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களில் திருப்தி அடைய இரண்டு முக்கியமான விடயங்களை இலங்கை நிறைவேற்றவேண்டியுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது கடன் தவணை நிதியை வழங்குவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை என்று சர்வதேச நாணய நிதிய அதிகாரி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் தமது குழு முதல் மதிப்பாய்வின் பின்னணியில் விரைவில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை அடையும் இலக்குடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் நாணய நிதியக்குழு குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.1 சதவிகிதம் குறைந்துள்ளது. அத்துடன் உயர் அதிர்வெண் பொருளாதார குறிகாட்டிகள் கலவையான சமிக்ஞைகளை தொடர்ந்து வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான குழுவின் அதிகாரிகளான பீட்டர் ப்ரூயர் மற்றும் கட்சியரினா ஸ்விரிட்சென்கா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடினமான ஆனால் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த முயற்சிகள் பலனைத் தருகின்றன எனவும் தெரிவித்துள்ளனர். எனினும் பின்வரும் குறைபாடுகளினையும் பாதக தன்மையினையும் சுட்டிக்காட்டியுள்ளனர். நிரந்தரமான மீட்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி சீர்திருத்த வேகத்தைத் தக்கவைப்பது மிகவும் முக்கியமானது என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுதல், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் உட்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கை தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.எம்.எவ். குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான விடயங்களை பார்ப்போம்.
* இலங்கை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
* கடினமான ஆனால் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
* பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த முயற்சிகள் பலனளிக்கின்றன.
* செப்டம்பர் 2022 இல் உச்சமாக இருந்த பணவீக்கம் 70 சதவீதத்திலிருந்து 2023 செப்டம்பரில் 2 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
* மொத்த சர்வதேச கையிருப்பு இந்த ஆண்டு மார்ச்-–ஜூன் காலத்தில் $1.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
* அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறைந்துள்ளது. நிலைப்படுத்தலின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
* வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில் உள்ளது. Q2 உண்மையான GDP ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.1 சதவீதம் குறைந்துள்ளது.
* உயர் அதிர்வெண் பொருளாதார குறிகாட்டிகள் தொடர்ந்து கலவையான சமிக்ஞைகளை வழங்குகின்றன.
* சமீப மாதங்களில் கையிருப்பு குவிப்பு குறைந்துள்ளது.
* சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவது பொருளாதாரத்தை நீடித்த மீட்சி மற்றும் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானது.
* அதிகாரிகள் திட்டத்தின் முதன்மை இருப்பு இலக்குகளை அடைந்துள்ளனர். மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் திட்டத்தின் இந்த முக்கியமான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
* இருப்பினும், வருவாய் திரட்டல் ஆதாயங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேம்பட்டிருந்தாலும் ஆண்டு இறுதிக்குள் ஆரம்ப கணிப்புகளை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
* ஓரளவு பொருளாதாரக் காரணிகள் காரணமாக இருந்தாலும் இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படாவிட்டால் நிதிச் சீரமைப்புப் பொறுப்பு பொதுச் செலவில் குறைக்கவேண்டியேற்படும்.
* இது அத்தியாவசிய பொது சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்தலாம், மற்றும் கடன் நிலைத்தன்மைக்கான பாதையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
* வருவாயை அதிகரிக்கவும், சிறந்த நிர்வாகத்தைக் குறிக்கவும், வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவது, வரி விலக்குகளை அகற்றுவது மற்றும் வரி ஏய்ப்பை தீவிரமாக அகற்றுவது முக்கியம்.
* தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக, வலுவான இருப்பு குவிப்பு மூலம் வெளிப்புற இடையகங்களையும் கையிருப்பினையும் மீண்டும் உருவாக்குவதும் முக்கியமானது.
* பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் வெற்றியைக் கட்டியெழுப்புவதுடன் பண நிதியளிப்பைத் தவிர்ப்பது பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
* மற்றைய சவால்களில் பிரதானமாக மின்சார விலை நிர்ணயத்தின் செலவை மீட்டெடுப்பது முக்கியமானதாக அடங்கும்.
* கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அரசாங்கம் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் பின்வருமாறு,
* புதிய மத்திய வங்கி சட்டம்.
* ஊழலுக்கு எதிரான சட்டம். இந்த சட்டம் திறம்பட செயற்படுத்தப்பட்டால் நிர்வாகத்தை மேம்படுத்த முடியும். IMF ஆளுகை கண்டறியும் அறிக்கை வெளியிடப்படும் போது நிர்வாகத்தை வலுப்படுத்த எதிர்கால சீர்திருத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமென கூறப்பட்டுள்ளது.
* சமூகப் பாதுகாப்பு குறிக்கோள்களின் இலக்கு, போதுமான தன்மை மற்றும் முழுமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய தகுதி வரம்புகளுடன் ஒரு புதிய நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டம் இயற்றப்பட்டது.
* நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, வங்கி கண்டறிதல்களை நடத்துதல், வங்கி முறை மூலதனம் மற்றும் பணப்புழக்க குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான செயற்திட்ட வரைப்படத்தை உருவாக்குதல் மற்றும் வங்கி தீர்மான கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் பின்வருமாறு செயற்பட்டுள்ளனர்:
* உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதன் மூலம் கடன் நிலைத்தன்மையை மீண்டும் பெறுவதற்கான முன்னேற்றம்.
* வெளிப்புறக் கடனாளிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பது.
நிலுவையில் உள்ள தனது பொதுக் கடனை இலங்கை மறுசீரமைத்து வருவதால் முதல் திட்ட மதிப்பாய்வின் நிர்வாகச் சபையின் ஒப்புதலுக்கு நிதியளிப்பு உத்தரவாத மதிப்பாய்வுகளை நிறைவு செய்ய வேண்டும். இந்த நிதியுதவி உத்தரவாத மதிப்பாய்வுகள், கடன் மறுசீரமைப்புடன் போதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதில் கவனம் செலுத்தும். அது சரியான நேரத்தில் மற்றும் திட்டத்தின் கடன் இலக்குகளுக்கு ஏற்ப முடிக்கப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.
மேலும், வருவாய் திரட்டும் இலக்குகள், ஊழலுக்கு எதிரான முயற்சிகள் மற்றும் பிற முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான தங்கள் திட்டங்களில் அதிகாரிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான நிலைப்பாடு:
நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார். நாடு திரும்பியதும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன் ஆயத்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அப்போதும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பல தடவைகள் பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரியை மேலும் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் அரசின் வருமானம் போதவில்லை என்பதாகும்” என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். “எங்களால் இனியும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த முடியாது. நாங்கள் அதிகபட்சமாக சுமையை ஏற்றியுள்ளோம். அரசின் வருவாய் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தகுதிவாய்ந்த IMF குழுவிடம் நாங்கள் அந்த விடயங்களை தெளிவுபடுத்துவோம். என்ன செய்தாலும் இனி வரியை உயர்த்த முடியாது” என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து வெளியேறும் பல ஆயிரம் வங்கி ஊழியர்கள்:
இலங்கையில் வங்கித் துறையில் இருந்து மட்டும் பல ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டை விட்டு பல நிபுணர்கள் வெளியேறிவிட்டதாகவும் அரசாங்கம் இவர்களது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் புலம்பெயர்தல் விகிதம் மேலும் அதிகரிக்கும்.
இலங்கையில் இருந்து இன்னும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம் சொல்வதற்கு எதிர்மாறான விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும். ஏனென்றால் சர்வதேச நாணய நிதியத்தினுடைய உதவி வெறுமனே 2.9 பில்லியன் டொலர்கள் மட்டுமே. அது பெரிய தொகை அல்ல. ஆனால் இந்த புலமையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லாம் வெளியேறினால் அதன் விளைவு இந்த 2.9 பில்லியனை விட எத்தனையோ மடங்கு அதிகமாக இருக்கக் கூடும். இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது. ஆகவேதான் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் அத்தனையையும் இலங்கை அரசாங்கம் கேட்க இயலாது. அப்படி செய்தால் அது எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சுவாமிநாதன் சர்மா
பட்டயக் கணக்காளர்
வரி , முகாமைத்துவ ஆலோசகர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM