உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மாத்திரமன்றி இலங்கைக்குள் இடம்பெற்ற எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியில் மாத்திரமே தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வாரம் ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வைத்து ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சனல்–4 தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணத்தை மையப்படுத்தி இந்த பேட்டியின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது பெரும் ஆவேசமடைந்த ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்திருக்கின்றார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையினை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. சனல்–4 . தொலைக்காட்சி இது தொடர்பில் வெளியிட்ட காணொளியில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய அசாத் மெளலானா உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் அதன் பின்னணி குறித்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டுமென்றும் தாக்குதலின் பின்னணி குறித்து ஆராயப்படவேண்டுமெனவும் தற்போது வலியுறுத்தப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். இதேபோன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுத்தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, உட்பட்டவர்கள் சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டுமென்று தெரிவித்து வருகின்றனர்.
இதனைவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அறிவித்திருந்தது. அதன் செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் சனல்–4 தொலைக்கட்சியின் ஆவணப் படம் வெளியானதையடுத்து சர்வதேச விசாரணையை கோரியிருந்தார். சர்வதேச விசாரணையின் மூலமே உண்மையை கண்டறியமுடியும் என்றும் உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை மேலெழுந்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலோ அல்லது வேறு விடயங்கள் குறித்தோ சர்வதேச விசாரணை என்பது நடத்தப்பட மாட்டாது அதற்கு எப்போதுமே சந்தர்ப்பம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே அமைந்திருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் இறுதி யுத்தம் தொடர்பிலும் சர்வதேச விசாரணைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசாங்கத்தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெறும் என்று அரசாங்கம் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை வழங்கி வந்திருந்தபோதிலும் அதற்கான சாத்தியப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை.
இதனால்தான் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்த நிலையில் போராட்டங்களை ஆரம்பித்ததுடன் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானங்களைக்கூட மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நிறைவேற்றாமையின் காரணமாகவே தற்போது சர்வதேச விசாரணையின் அவசியம் தமிழ் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தும் நிலைமை உருவாகியிருக்கின்றது. அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் உரிய அக்கறை செலுத்தி நடவடிக்கைகளை உரியவகையில் எடுத்திருந்தால் இத்தகைய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை எழுந்திருக்க மாட்டாது.
இதேபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட்டிருந்தால் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாது.
இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக்குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தபோதிலும் உரிய பலாபலன் கிடைத்திருக்கவில்லை.
இந்த விடயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொறுமையோடு விசாரணைக்கான அழுத்தங்களை கொடுத்து வந்தார். ஆனால் அந்த அழுத்தங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு உரிய விசாரணைகள் நடத்தப்படாமையினாலேயே அவர் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு விஜயம் செய்து தனது கோரிக்கைகளை வலியுறுத்தியுமிருந்தார்.
ஆனாலும் எந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இந்த விடயத்தில் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே சனல்–4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை அடுத்து தற்போது மீண்டும் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை மேலெழுந்திருக்கின்றது. ஆனால் சர்வதேச விசாரணையை அனுமதிக்கவே முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார். இறுதியுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அன்றைய நல்லாட்சி அரசாங்கமானது அதற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றியிருந்தார்.
அவரது அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சராக இருந்த மறைந்த மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தார். வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளக விசாரணையின் அடிப்படையில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான இணக்கப்பாடே இதன்போது எட்டப்பட்டிருந்தது.
அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. ஆனாலும் அந்த அனுசரணையை நடைமுறைப்படுத்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கவில்லை. இதனால் அந்த முயற்சியும் பயனற்றுப்போயிருந்தது.
இவ்வாறு ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் இணங்கி செயற்படுவதற்கு அன்று தீர்மானித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் சர்வதேச விசாரணையை மறுத்துள்ளார். மாறாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணைக்குழுவொன்றை அவர் நியமித்திருக்கின்றார். ஆனால் உள்ளூரில் அமைக்கப்படும் குழுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்வாறான நிலையில் எவ்வாறு உரிய விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.இதற்கு பதிலளிக்கும்வகையில்அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது இந்த விடயம் தொடர்பில் சிந்திக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கிடைக்க செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனைவிடுத்து சர்வதேச விசாரணை சாத்தியம் இல்லை என்றுமட்டும் அடித்துக்கூறுவதனால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM