(நா.தனுஜா)
நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளியிட்டுவரும் நிலையில், அச்சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகத்துறைசார் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இச்சட்டமூலம் தொடர்பில் 3 விசேட தரப்பினருடன் வெகுவிரைவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருக்கும் அமைச்சர் டிரான் அலஸ், அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 2 - 3 மாதங்களுக்குள் திருத்தங்களுடன்கூடிய நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.
உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலமானது பல்வேறு எதிர்ப்புக்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து அச்சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதன்விளைவாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடுமென பல்வேறு தரப்பினரும் கரிசனைகளை வெளிப்படுத்திவரும் பின்னணியில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஊடகத்துறையுடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டிரான் அலஸ், இச்சட்டமூலம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பங்கேற்ற ஊடகத்துறைசார் பிரதிநிதிகள், நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலமானது சம்பந்தப்பட்ட தரப்பினருடனான விரிவானதும் செயற்திறன்மிக்கதுமான கலந்துரையாடல்களின்றிக் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்தும், அச்சட்டமூலத்தில் 'குற்றமாக' கூறப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கான பரந்துபட்ட வரைவிலக்கணம் மற்றும் அதன் தெளிவற்ற தன்மை குறித்தும் தமது கரிசனைகளை வெளிப்படுத்தினர்.
அதுமாத்திரமன்றி இச்சட்டமூலத்தை எவ்வித திருத்தங்களுமின்றி தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்றுவதன் மூலம் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் அவர்கள் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகியவற்றுக்காகக் காத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டியதன் அவசியம் என்னவென்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இக்கரிசனைகளை செவிமடுத்த அமைச்சர் டிரான் அலஸ், இந்த நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதுகுறித்து 2016 ஆம் ஆண்டு முதல் ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் விளக்கமளித்தார். அதேபோன்று குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத பாலியல் நடத்தைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இதனை தாம் உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்போவதில்லை என்று ஊடகத்துறைசார் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
பாதுகாப்பான நிகழ்நிலைவெளியை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி அவசியமான திருத்தங்களுடன் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், எனவே இதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை சகல தரப்பினரும் தமக்கு சமர்ப்பிக்கமுடியும் என்றும், விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்குத் தாம் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க எதிர்வாரம் அமைச்சர் டிரான் அலஸ் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், அவர் மீண்டும் நாடு திரும்பியவுடன் சிவில் சமூகப்பிரதிநிதிகள், வணிகத்துறைப் பிரதிநிதிகள் மற்றும் ஆசிய இணையக் கூட்டிணைவின் பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பினரைச் சந்தித்து நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். அதனையடுத்து அவசியமான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அடுத்துவரும் 2 - 3 மாதங்களுக்குள் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM