சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் வவுனியா ஓமந்தை உப  வன பரிபாலனத் திணைக்களத்தினால் நேற்றிரவு  கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா ஓமந்தை உப  வன பரிபாலனத் திணைக்களத்திற்கு நேற்று  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வவுனியா ஓமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன் குளம் நோக்கி சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த மூன்று இலட்சம் பெறுமதியான 13 முதிரை மரக்குற்றிகளையும் ஒரு பட்டா ரக வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

முதிரைக்குற்றிகளை கடத்த முற்பட்ட பட்டா ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம் ஓமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன்குளத்திற்கு பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்று பின்னர் கனராயன்குளத்திலிருந்து கனகர வாகனத்தில் மூலம் யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்வதாக  தெரியவருகின்றது

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதாக தெரிவித்தனர்.