ரொபட் அன்டனி
- ஊழியர் சேமலாப நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு எவ்வாறு நடைபெறுகிறது? 30 வீத வரி தெரிவை நிதியம் ஏன் நிராகரித்தது? அங்கத்தவர்களின் பண மீதிக்கு என்ன நடக்கும் போன்ற விடயங்களை இந்த கட்டுரை ஆராய்கின்றது
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் மத்திய வங்கி இரண்டு தெரிவுகளை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வழங்கியது. அதாவது ஊழியர் சேமலாப நிதியத்துக்கு திறைசேரி வழங்கிய சகல பிணை முறிகளையும் மீள பெற்றுவிட்டு புதிய பிணைமுறிகளை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு திறைசேரி வழங்கும். அதனூடாக புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. அந்த சகல கடன்களுக்கும் 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி வழங்கப்படும். அதன் பின்னர் 2038 ஆம் ஆண்டுவரை 9 வீத வட்டி வழங்கப்படும். இது முதலாவது தெரிவாகும். இரண்டாவது தெரிவாக ஊழியர் சேமலாப நிதியம் நாட்டில் செய்கின்ற முதலீடுகளில் கிடைக்கின்ற வட்டி இலாபத்தில் தற்போது செலுத்துகின்ற 14 வீதத்தை 30 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்பதாகும்.
இந்நிலையில் ஊழியர் சேமலாப நிதியம் 14 வீத வரியை 30 வீதமாக உயர்த்துவதை நிராகரித்துவிட்டு திறைசேரி உண்டியல் மற்றும் பிணைமுறி பரிமாற்றத் தெரிவை ஏற்றுக்கொண்டுள்ளது.
காரணம் என்ன?
இதற்கான காரணங்கள் என்னவென்பதை விரிவாக பார்க்கவேண்டியுள்ளது. கடந்த வருடம் இலங்கை பாரிய டொலர் நெருக்கடியை சந்தித்ததன் காரணமாக வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது அரசாங்கம் பெற்ற கடன்களை மீள் செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இலங்கைக்கான சர்வதேச கடன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சிறியளவிலான மனிதாபிமான உதவிகள் மட்டும் கிடைத்தன. இலங்கையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டு பொருளாதாரம் சரிந்தது. இந்த பின்னணியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியபோது இலங்கை தான் ஏற்கனவே கடன் பெற்ற நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இலங்கை மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்று கடன்களை பெற வேண்டுமாயின் இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு என்றால்?
கடன் மறுசீரமைப்பு எனப்படுவது இலங்கை தனக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சு நடத்தி பெறப்பட்ட கடன்களை எவ்வாறு மீள் செலுத்துவது என்பது தொடர்பான ஒரு திட்டத்தின் உருவாக்குவதை குறிக்கின்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் மூன்று கருவிகள் பிரயோகிக்கப்படலாம். அதில் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கலாம். அல்லது அந்த கடன்களுக்கான தவணை பணத்தை மீள்செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். அதாவது கடன் செலுத்துவதற்கு நீண்ட நிவாரண காலப்பகுதியை பெற்றுக் கொள்ளலாம். மூன்றாவதாக இலங்கை இந்த நாடுகளிடம் பெற்றிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடலாம். அல்லது ரத்து செய்துவிடலாம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை கோரியது யார்?
அந்தவகையில் இலங்கை இந்தியா சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அவை அதற்கு இணங்கின. அதேபோன்று சர்வதேச தனியார் கடன் வழங்குனர்களுடனும் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது உள்நாட்டில் இலங்கை பெற்றிருக்கின்ற கடன்களுக்கும் இலங்கை மறுசீரமைப்பு செய்து தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று வெளிநாட்டு சர்வதேச தனியார் கடன் வழங்குநர்கள் நிபந்தனை முன்வைத்தனர்.
அதன் காரணமாகவே இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்களை ஆரம்பித்தது. மாறாக சர்வதேச நாண நிதியம் இலங்கைக்கு இது குறித்து நிபந்தனை முன்வைக்கவில்லை. இலங்கை உள்நாட்டில் கிட்டத்தட்ட 16 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. (ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன்களை குறிக்கும். ஒரு பில்லியன் என்பது 100 கோடியை குறிக்கும்.)
மத்திய வங்கியின் திட்டம் என்ன?
அதன்படி மத்திய வங்கியே இந்த கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதால் மத்திய வங்கி அதற்கான திட்டத்தை கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதன்படி மத்திய வங்கி திறைசேரிக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்வந்தது. அது மக்களை எவ்விதத்திலும் பாதிக்காது. அதேபோன்று அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பிடமும் தனியார் கட்டமைப்பிடமும் திறைசேரி பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்யவில்லை.
‘’ வங்கி கட்டமைப்பு ஏற்கனவே தனது இலாபத்தில் கிட்டத்தட்ட 50 வீதத்தை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்துகிறது. எனவே அதில் மீண்டும் மறுசீரமைப்பு செய்ய முயற்சித்தால் வங்கி கட்டமைப்பு செயலிழக்கும். வங்கி கட்டமைப்பு செயலிழந்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகிவிடும். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வங்கி கட்டமைப்பே காணப்படுகிறது ’’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் அறிவித்திருந்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு
ஆனால் ஊழியர் சேமலாப நிதியத்திடம் திறைசேரி பெற்றுக் கொண்டுள்ள கடன்களுக்கும் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் ஊழியர் சேமலாப நிதியம் கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. . அந்தவகையில் ஊழியர் சேமலாப நிதியத்திடம் திறைசேரி பெற்றுக் கொண்டிருக்கின்ற கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. எவ்வளவு கடன்களை ஊழியர் சேமலாப நிதியத்திடம் திறைசேரி பெற்றிருக்கின்றது என்பது தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறி ஊடாக திறைசேரியானது ஊழியர் சேமலாப நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது.
எப்படி கடன் மறுசீரமைப்பு இடம்பெறுகிறது?
அதனடிப்படையில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் பெற்றுள்ள கடன்களுக்கு மறுசீரமைப்பு செய்யப்படுகின்ற பின்னணியில் அது எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது திறைசேரி ஊழியர் சேமலாப நிதியத்திடம் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி விகிதங்களை குறைக்கும் வகையிலான ஒரு கடன் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதியம் திறைசேரிக்கு திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளை பெற்று கடன்களை வழங்கியுள்ளது. திறைசேரி உண்டியல்களை பெற்று வழங்கப்படுகின்ற கடன்கள் ஒரு வருட காலத்தில் மீள் செலுத்தப்பட வேண்டும். அந்தவகையில் சேமலாப நிதியம் திறைசேரியிடம் பெற்று 2023 ஆம் ஆண்டு முதிர்வடைகின்ற சகல திறைசேரி உண்டியல்களிலும் 50 வீதமானவற்றை திறைசேரி மீளப்பெறுகின்றது. அதேபோன்று 2038 ஆம் ஆண்டு வரையான காலம் வரை முதிர்ச்சியடைகின்ற சகல பிணை முறிகளையும் மத்திய வங்கி மீளப்பெறுகின்றது. அவற்றை மீளபெற்றுவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிய பிணைமுறிகளை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு திறைசேரி வழங்குகின்றது. அதனூடாக புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட உள்ளன. அந்த சகல கடன்களுக்கும் 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டி வழங்கப்படும். அதன் பின்னர் 2038 ஆம் ஆண்டுவரை 9 வீத வட்டி வழங்கப்படும். இதுதான் ஊழியர் சேமலாப நிதியத்திடம் செய்யப்படுகின்ற கடன் மறுசீரமைப்பாகும்.
9 வீத வட்டி
அந்த அடிப்படையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு அதாவது தொழிலாளர்களுக்கு தமது மீதிக்கு 9 வீத வட்டி கிடைக்கும் என்பதை மத்திய வங்கி உறுதி செய்கின்றது. அதனால் அதற்கான எந்த விதமான சட்ட ஏற்பாடும் இல்லை என்பதே பல்வேறு தரப்பினரின் கரிசனையாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு சட்ட ஏற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
9 வீத வட்டியை ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்க முடியாதநிலை ஏற்பட்டால் திறைசேரி தலையிட்டு அதனை ஈடுசெய்ய வேண்டும் என்ற கருத்தும் மத்திய வங்கியினால் முன்வைக்கப்படுகின்றது. அதற்கு அரசாங்க தரப்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தெரிவான 30 வீத வரி என்றால் ?
ஊழியர் சேமலாப நிதியம் இந்த முதலாவது தெரிவை ஏற்றிருக்காவிடின் சேமலாப நிதியம் செய்துள்ள முதலீடுகளில் கிடைக்கின்ற வட்டி இலாபத்தில் தற்போது செலுத்துகின்ற 14 வீத வரியை 30 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற தெரிவு முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஊழியர் சேமலாப நிதியம் நிராகரித்துள்ளது.
உதாரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியம் திறைசேரிக்கு வழங்கிய கடன்கள் உட்பட தனது முதலீடுகளில் கிட்டத்தட்ட 370 பில்லியன் ரூபாவை வட்டி இலாபமாக பெற்றிருக்கின்றது. அதில் 14 வீதம் அரசாங்கத்துக்கு வரியாக செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது சுமார் 47 பில்லியன் ரூபா வரியாக செலுத்தப்பட்டிருக்கின்றது. அந்த 14 வீத வரியை 30 வீதமாக அதிகரித்தால் அது ஒரு மிகப்பெரிய தொகையாக மாறிவிடும். அது நிதியத்தின் அங்கத்தவர்களுக்கான வட்டி வீதங்களை பாதிக்கும்.
அதன் காரணமாக சேமலாப நிதியம் அந்த இரண்ண்டாவது தெரிவிவை நிராகரித்தது. தற்போது கடன்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டுக்கு ஊழியர் சேமலாப நிதியம் உடன்பட்டு இருக்கின்றது. அதுவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அங்கத்தவர்களின் பண மீதிக்கு பாதிப்பில்லை
‘’ இந்த மறுசீரமைப்பு செயல்பாட்டின் ஊடாக எந்த காரணம் கொண்டும் பொதுமக்களின் பண மீதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அத்துடன் அவர்களுக்கு ஒன்பது வீத வட்டியை வழங்குவதற்கு முழுமையாக முயற்சிக்கின்றோம் ‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிக்கிறார்.
எப்படியோ இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை தவிர்க்க முடியாது. கடன் மறுசீரமைப்பு தவிர்க்கப்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை தொடர முடியாமல் போய்விடும். தற்போது இரண்டாவது கடன் தவணைப் பணத்தை பெறுவதும் தாமதமடைந்துள்ளது. மறுசீரமைப்பில் மேலும் முன்னேற்றம் வேண்டும் என்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் முன்னெடுத்த மீளாய்வு மதிப்பீட்டையடுத்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய 16 அம்ச செயற்பாட்டு திட்டத்தையும் நாணய நிதியம் இலங்கைக்கு முன்வைத்துள்ளது.
தற்போது இலங்கையின் கடனானது மொத்த தேசிய உற்பத்தியில் 128 வீதமாக காணப்படுகிறது. அதனை 95 வீதமாக குறைக்க வேண்டும். இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியானது கிட்டத்தட்ட 80 பில்லியன் டொலர்களாகும். ஆனால் அதனையும் தாண்டியே இலங்கையின் கடன் இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM