சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதையடுத்து, சசிகலாவின் ஆதரவாளர்களில் ஒருவர் முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்ப்பு வெளியாகும்போது காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்திய சசிகலா, தனக்கான தீர்ப்பு எந்த விதத்திலும் கட்சியில் தனக்கு உள்ள செல்வாக்கைச் சரித்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றபோது, தனது தீவிர விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வாறு தேர்ந்தெடுத்தாரோ, அதைப்போலவே தனது தீவிர அபிமானியான ஒருவரையே முதலமைச்சராக அறிவிப்பது என்று சசிகலா எண்ணியுள்ளார்.

இதன்படி, கே.ஏ.செங்கோட்டையனையும் மற்றொருவரையும் சசிகலா தெரிவுசெய்திருப்பதாகவும், அவர்கள் இருவரில் ஒருவர் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இவர்களுள் செங்கோட்டையனுக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்பப்படுகிறது.