(நா.தனுஜா)
நிறைவேற்றதிகார அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்தக்கூடியவகையிலும், பல்வேறு மீறல்களுக்கு இடமளிக்கக் கூடியவகையிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அண்மையகால முயற்சியையே உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (3) சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகியவற்றின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களை உள்ளடக்கிய எமது கரிசனைகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
நிகழ்நிலை ஊடகங்கள் வாயிலான அச்சுறுத்தல்களுக்கு பெரிதும் இலக்காகக்கூடிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக தனிநபர்களுக்கும், குழுக்களுக்குமான பாதுகாப்பை வழங்கக்கூடியவாறான செயற்திட்டம் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் சர்வதேச நியமங்களுக்கும் அமைவாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
ஆனால் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் கரிசனை அதன் பெயரளவில் மாத்திரமே இருப்பது துரதிஷ்டவசமானதாகும். இச்சட்டமூலமானது நிறைவேற்றதிகார அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்தக்கூடியவகையிலும், பல்வேறு மீறல்களுக்கு இடமளிக்கக்கூடியவகையிலும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அண்மையகால முயற்சியையே பிரதிபலிக்கின்றது.
அதேவேளை நிகழ்நிலைப் பாதுகாப்புடன் தொடர்புடைய விதத்தில் 'தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்' என்ற சொற்பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான வரையறை, விரிவான அதிகாரங்களுடன்கூடிய நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், இச்சட்டத்துடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்கள் தொடர்பிலும் வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்கு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தீவிர மட்டுப்பாடு என்பன உள்ளடங்கலாக இச்சட்டமூலமானது பிரச்சினைக்குரிய பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது. அதுமாத்திரமன்றி இச்சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைத் திட்டமிட்டு இலக்குவைப்பதாக நாம் கருதுகின்றோம்.
மேலும் இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்ட தருணம் குறித்தும் நாம் கரிசனைகொள்கின்றோம். பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துடன் நிகழ்நிலைக்காப்புச்சட்டமூலமும் வெளியிடப்பட்டமையானது தற்செயலாக நடந்தவொன்றாக இருக்கமுடியாது. அத்தோடு இவ்விரு சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதில் நிலவும் அவசரம், இவை ஜனநாயகவிரோத சட்டவாக்கம் என்பதைக் காண்பிக்கின்றன. அதேபோன்று இவ்விரு சட்டமூலங்களிலும் 'தேசிய பாதுகாப்பு' என்பதன்கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள வரையறைகள் அடிப்படை சுதந்திரங்களை மட்டுப்படுத்துகின்றன.
ஆகவே இச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறும் அதேவேளை, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் பாதுகாப்பான நிகழ்நிலை இடைவெளியைப் பேணும் நோக்கில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், அனைத்துத்தரப்பினரது ஆலோசனைகளை உள்ளடக்கியதுமான சட்டவரைபைத் தயாரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM