இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் புகழப்படுபவருமான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்தத் தகவலை சச்சின் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த இரண்டு வருடங்களாகத் தயாரிப்புப் பணிகளில் இருந்து வந்தது. கடந்த ஒரு வருடமாக, ‘உங்கள் படம் எப்போது வெளியாகிறது?’ என்று சச்சினிடம் கேள்வி கேட்காதவர்களே இல்லை.

இந்த நிலையில், நேற்று தனது ட்விட்டர் கணக்கில், படத்தின் ‘ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை’ வெளியிட்டு, “என்னிடம் நீண்ட நாட்களாகக் கேட்கப்பட்டுவரும் கேள்விக்கான பதில் இதோ! உங்கள் நாட்காட்டியில் இந்த நாளைக் குறித்துக்கொள்ளுங்கள். எனது படம் 26.05.2017 வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் ஒரு போட்டியை நடத்தில் அதில் இருந்தே இந்தப் படத்துக்கான தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருந்தது. 

இதுவரை மில்க்கா சிங், மேரிகோம், தோனி ஆகியோரது வாழ்க்கை படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாலும், அவற்றில் வெவ்வேறு நடிக நடிகையரே நடித்திருந்தனர். ஆனால், சச்சினின் இந்தப் படத்தில் சச்சினே நடித்திருக்கிறார். அத்துடன், அவர் கலந்துகொண்ட போட்டிகளின் காட்சிகள் சிலவும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை, இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

‘200 நொட் அவுட்’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் என்ற ஹொலிவுட் இயக்குனர் இயக்கியிருக்கிறார். இவருடன், சிவகுமார் ஆனந்த் என்ற தமிழரும் படத்துக்கான திரைக்கதையை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.