ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை இன்றியமையாதது

Published By: Vishnu

03 Oct, 2023 | 12:47 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்தவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக எதிரவரும் பட்ஜெட்டில் அரசாங்கம் 1100 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது அந்த தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்பதற்கான நேர்மறையான அறிகுறியாகும்.

உரிய நேரத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடத்துவது செயற்பாட்டு நிலையில் உள்ள ஒரு ஜனநாயகத்தின் மையக் கோட்பாடாகும். இவ்வருட முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டபோது இந்த கோட்பாடு கேள்விக்குள்ளானது. மார்ச் மாதம் நடத்தப்படவேண்டியிருந்த அந்த தேர்தல்கள் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் இப்போது இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

அவை எப்போது நடத்தப்படக்கூடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகிறது என்றும் பணத்தை வேறு  நேவைகளுக்கு பயன்படுத்துவதே உகந்ததாக இருக்கும் என்றும் காரணம் கூறி ஊள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாமல் இருப்பதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.

 உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் காட்டும் மறுப்புக்கு எதிராக நீதிமன்றங்களில்  வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் நிறுத்திவைக்கக்கூடாது என்றும் அவற்றை நடத்துவதற்கு  வசதியாக பணத்தை விடுவிக்கவேண்டியது அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்துச் செயற்பட மறுத்த அரசாங்க உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிதி விவகாரங்களில் நீதித்துறை தீர்மானங்களை எடுக்கமுடியாது என்று காரணம் கூறி நீதிபதிகளை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள். 

தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்திவைப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு  பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் சிறப்புரிமைகளையும் மீறியிருப்பதாக அவர்கள் வாதிட்டனர்.தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து பாராளுமன்றத்துக்கு நீதிபதிகளை அழைக்கும்  தங்களது ஐயப்பாடான திட்டத்தை அரசாங்க உறுப்பினர்கள்  முன்னெடுக்கவில்லை.

தேர்தல்களுக்கு மேலாக பொருளாதாரத்துக்கு அரசாங்கம் கொடுக்கும் முன்னுரிமையின் விளைவாக தேர்தல்களுக்கான சாத்தியங்கள் தொடர்ந்து  சவால்மிக்கவையாகவே இருக்கின்றன. பொருளாதார நெருக்கடி முழுவீச்சிலானதாக இருக்கிறது. எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டிரு்கின்ற அதேவேளை மின்சாரக் கட்டணங்களும் உயர்த்தப்படவிருக்கின்றன. முன்னரை விடவும் பொருளாாரம் மெதுமெதுவாக தொடர்ந்து சுருங்கிக்கொண்டே போகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவை பெறுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பது பொருளாதாரத்தின் அபாயகரமான நிலைவரம் தொடர்பிலான ஒரு எச்சரிக்கையாகும். இலங்கையின் பொருளாதார மீடசி இ்ன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை குறிப்பாக அரசாங்க வருவாய்ப் பெருக்கத்தில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி காரணமாக நேரக்கூடிய பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பது தொடர்பிலான இலக்குகளை அரசாங்கம் அடைந்திருக்கவில்லை என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது.

அதன் கடனுதவித் திட்டத்தின் கீழான இரண்டாவது தவணைக் கொடுப்பனவு அலுவலர் மட்டத்திலான உடன்படிக்கை காணப்பட்ட பின்னர் மாத்திரமே விடுவிக்கப்படும் என்றும்  அந்த கொடுப்பனவைச் செய்வதற்கு குறித்துரைக்கப்பட்ட நேர அட்டவணை ஒன்று கிடையாது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டிருக்கிறது.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் 

தேர்தல் செயன்முறை தொடர்பில் நீதித்துறையின் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவதில் அரசாங்க உறுப்பினர்கள் காட்டிய முனைப்பு வேறு துறைகளிலும் அதன் விளைவுகளை ஏற்படுத்தியிருப்பது பெரும் துரதிர்ஷ்ட வசமானதாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தியிரக்கிறார்கள். தனிப்பட்டவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அந்த விமர்சனங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேசிய நலனுக்காக உண்மையை வெளிப்படுத்துவதற்கு வசதிசெய்வதே பாராளுமன்ற சிறப்புரிமையின் நோக்கமாகும். ஆனால், இந்த அதிகாரத்தை  அதுவும் குறிப்பாக தனிநபர்களை  அவதூறு அல்லது நிந்தனை செய்யும்போது மிகவும் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் பயன்படுத்துவது அவசியமாகும்.

பாராளுமன்ற சிறப்புரிமையின் பாதுகாப்பைக் கொண்டவர்கள் அது மிகவும் சக்திவாய்ந்த சிறப்புரிமை என்பதை விளங்கிக்கொண்டு அதை அவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவேண்டியது மிகவும் அவசியம். சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்வது அதற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகிறது என்பதுடன் சிறப்புரிமை வகிக்கின்ற முக்கிய பாத்திரம் பற்றி பரந்தளவில் நிலவும் எண்ணத்தையும் மலினப்படுத்துகிறது.

இன,மத முரண்நிலையுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணை செய்துவந்த நீதிபதியொருவர் தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானிக்கின்ற  அளவுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை இப்போது சென்றிருக்கிறது. அந்த நீதிபதியினால் வழங்கப்பட்ட அடுத்தடுத்த பல தீர்ப்புக்களை அரசாங்க அதிகாரிகள் அலட்சியம் செய்திருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

நீதித்துறையின் தீர்மானங்களும் உத்தரவுகளும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இழித்துரைக்கப்பட்டும் நிந்தனைசெய்யப்பட்டும் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

சர்ச்சைக்குரிய  குருந்தூர்மலை வழக்கில் தீர்ப்பை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் நெருக்குதல் பிரயோகிக்கப்படுவதாகவும் கூறி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கடிதம் ஒன்றில் சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கூறியிருக்கிறார்.

ஜனநாயக நாடொன்றில்  நீதித்துறை மீதான அத்தகைய நெருக்குதல்கள் அதுவும் குறிப்பாக அரசாங்கத்தின் மட்டுமீறிய நடவடிக்கைகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ள்கியிருக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு நீதித்துறை கேட்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

நாட்டில் நிலவிய ஜனநாயக சுதந்திரங்களும் போராட்டங்களுக்கான வெளியும் இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணையவெளி பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் மூலமாக மக்கள் போராட்டங்களையும் எதிர்க்கருத்துக்களையும் மௌனப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளினால் தற்போது  ஆபத்துக் குள்ளாகியிருக்கின்றன.

பொதுப் போராட்டங்களில் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை மக்களை அல்லது மக்களில் ஒரு பிரிவினரை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி கைதுசெய்வதற்கான அதிகாரத்தை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரசாங்கத்துக்கு வழங்குகிறது.

தவறான கூற்றுக்கள் அல்லது அச்சுறுத்தும் கூற்றுக்கள் அல்லது வேதனை தரும் கூற்றுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கு இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கும் சட்டமூலம் வகைசெய்கிறது. 

அந்த ஆணைக்குழுவினால் எந்தவொரு  சமூக ஊடகக் கணக்கை அல்லது இணையவெளி பிரசுரத்தை இடைநிறுத்த அல்லது  தடைசெய்ய இயலும் என்பதுடன் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு சிறைத்தண்டனையை சிபாரிசு செய்யவும் முடியும்.

மீண்டும் தேர்தல்கள்

மக்களின் சுதந்திரங்களை கட்டுப்படுத்துகின்ற வகையில் அமையும் நடவடிக்கைகளை எடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முன்னால் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்குமாறு நீதித்துறையிடம் கோரப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது முதல் அதை எதிரணி அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்துவந்தன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செயவதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வரையப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆட்சேபனைக்குரியதாக கூறிய கூறிய ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு இசைவான முறையில் மற்றியமைத்தால் மாத்திரமே இலங்கை ஏற்றுமதிகளுக்கு அதன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நீடிக்கமுடியும் என்று நிபந்தனை விதித்தது.

இது இவ்வாறிருக்க இப்போது அரசாங்கம் மேலதிகமாக அதன் ஔிவுமறைவான நடத்தைகள் தொடர்பில் மக்கள் அறியவேண்டியிருக்கும் தகவல்களை நசுக்கும் ஒரு அதிர்ச்சியான கருவியாக இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தைக் கொண்டுவந்திருக்கிறது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெரக்கடிகள் மேலும் மோசமடைந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த இரு சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னடுப்பதில் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது போன்று தெரிகிறது.

ஔிவுமறைவற்ற செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட  நிபந்தனைகளில் பலவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தவறியதால் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீதான அரசாங்கத்தின் பற்றுறுதியில் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கம் அதன் ஒப்பந்தங்கள் மற்றும் கொள்வனவுகள் பற்றிய விபரங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் ; வரி விடுமுறைகள் வழங்கப்படுவதற்கான நியாப்பாடுகளை விளக்கவேண்டும் ; வரி விடுமுறகளினால் பயனடைபவர்களின் விபரங்களை தரவேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்திருந்தது.

ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் புதிய வெளிநாட்டு முதலீடுகளைை பெறமுடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. அரசாங்க வருவாயும் விரயமாகிறது. அதனால் இலங்கையில்்தொழில்துறையை முன்னெடுப்பது சிரமம் என்ற எண்ணமும் தலைதூக்கியிருக்கிறது.

இந்த பிரச்சினைகளை உருப்படியான முறையில் கையாண்டு தீர்வுகளைக் கண்டு அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டியது அவசியமாகும். மோசமான பொருளாதார நிலைவரம் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். குறிப்பாக ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்து ஆட்சிமுறையை துப்புரவானதாக்க நாட்டுக்கு தேவைப்படுகின்ற புதிய தலைவர்களை மக்கள் தெரிவுசெய்யக்கூடியதாக தேர்தல்களை நடத்தவேண்டியது முக்கியமானதாகும்.

2024 பட்ஜெட்டில் ஜனாதிபதி தேர்தலுக்காக 11 பில்லியன்  ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருக்கின்ற போதிலும் கூட எதிர்காலத்துக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

தற்போது முன்னெடுக்கப்படும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என்பதால் ஜனாதிபதி தேர்தலை பின்போடவேண்டிய தேவை எழலாம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான  வஜிர அபேவர்தன கூறியிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தககது.

2024 பட்ஜெட்டக்கான மொத்தத் தொகை 3860 பில்லியன் ரூபாவாகும். இதில் 11 பில்லியன் ஒரு சிறிய தொகையேயாகும்.  2023 பட்ஜெட்டிற்கான தொகை 3657 பில்லியன் ரூபா.  உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேவைப்பட்ட 10 பில்லியன் ரூபாவும் கூட அந்த பட்ஜெட்டில் ஒரு சிறிய தொகையே. ஆனால் அரசாங்கம் அந்த தேர்தல்களை நடத்தாமல் அந்த தொகையை தேர்தல்களுக்கு செலவிடுவதிலும் பார்க்க அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செலவிடுவது சிறப்பானது என்று வாதிட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல்களை பின்போடும் பிரச்சினைக்கு  ஜனாதிபதி தேர்தல் வரும்போதும்  மீண்டும் ஒரு தடவை முகங்கொடு்க்கவேண்டிவரலாம். 

ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு வீதிகளை விடவும் நீதிமன்றங்கள் சிறந்த தெரிவாக அமையும். நீதிமன்றங்களையும்  நீதித்துறையையும் வலிமையானதாக மதிப்புடன் வைத்திருக்கவேண்டியது மிகமிக அவசியமாகும். நல்லாட்சியில் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு நீதித்துறை பங்களிப்பு செய்வதுடன் சமூக அமைதியையும் நிலைபேறாக வைத்திருக்கும். சமூக அமைதியை விட்டுக்கொடு்கக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54