எம்.மனோசித்ரா
கடந்த ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் சமூகத்தில் உயர் வருமானம் பெறும் தரப்பினரை தவிர்த்து, ஏனைய சகல தரப்பினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களும், வருமானம் அற்ற குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆட்பதிவு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய இலங்கையின் சனத்தொகை அண்ணளவாக இரண்டு கோடியே 19 இலட்சத்துக்கும் அதிகமாகும். மொத்த சனத்தொகையில் பிறப்பு வீதம் 13.8 % ஆகவும், இறப்பு வீதம் 6 % ஆகவும் காணப்படுகிறது. மொத்த சனத்தொகையில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8.6 சதவீதமாகும். (2012 சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளானது சமூகத்தில் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகக் காணப்படும் சிறுவர்களில் மத்தியில் மந்த போஷணையை உக்கிரமடையச் செய்துள்ளது. அண்மையில் கொழும்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்திருந்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூஸ் பிரெஞ் 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை பின்னடைவடைந்துள்ளதாகவும், அண்மையக காலங்களில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மந்த போஷணை நாட்டின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதார பிரிவினால் இவ்வாண்டின் முதல் அரையாண்டுக்கான 'தேசிய ஊட்டச்சத்து நிலைமை அறிக்கை' செப்டெம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்டது.
2022உடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் ஜனவரி - ஜூன் வரையான காலப்பகுதியில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக உடற்பருமன் ஆகியவற்றில் கணிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும், ஆனால் வவுனியா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற நிறை குறைவாகக் காணப்படும் வீதம் உயர்வடைந்துள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கான ஆய்வுக்காக குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகளால் 5 வயதுக்குட்பட்ட 14,06,213 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13,57,675 சிறுவர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை குறைவு தொடர்பான பிரச்சினைகள் 17.1 சதவீதமாகக் காணப்படுவதாகவும் , இதன் மொத்த எண்ணிக்கையில் 26.4 சதவீதம் எடை குறைவு தொடர்பான பிரச்சினைகள் நுவரெலியா மாவட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவ்அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் நிறைகுறைவானவர்கள் 23 சதவீதமாகக் காணப்படுகின்றனர்.
தோட்டப்புறங்கள், நகர மற்றும் கிராமப் புறங்களில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிறைக்கு ஏற்ற வளர்ச்சியற்ற சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் போக்கினையே காண்பிப்பிக்கின்றது. வளர்ச்சி குன்றிய சிறுவர்களின் எண்ணிக்கை நகர் புறங்களில் சராசரியாக 8 சதவீதமாகவும், கிராம புறங்களில் 10 சதவீதமாகவும், தோட்டப்புறங்களில் 25 சதவீதமாகவும் காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளிலும் இதே நிலைமையே காணப்படுகிறது. இவற்றில் பாரியளவில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
நுவரெலியா பெருந்தோட்டங்கள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 50,796 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 50, 439 சிறுவர்கள் அதாவது 99.30 சதவீதமானவர்கள் ஊட்டசத்து தொடர்பான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் வயதுக்கேற்ற எடையற்ற மற்றும் வயதுக்கேற்ற வளர்ச்சியற்ற சிறுவர்களின் வீதம் அதிகமாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாகக் காணப்படும் கொழும்பில் 5 வயதுக்குட்பட்ட 89, 784 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11.2 சதவீதமான சிறுவர்கள் மாத்திரமே வயதுக்கேற்ற எடையற்றவர்களாகவும், 5.8 சதவீதமான சிறுவர்கள் மாத்திரமே வயதுக்கேற்ற வளர்ச்சியற்ற சிறுவர்களாகவும் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தரவுகளை அவதானிக்கும் போது, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறு சிறுவர்கள் மத்தியில் காணப்படும் சுகாதார நலன் குறித்த விடயங்களில் ஏன் இன்னும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற கேள்வி ஏற்படுகிறது.
நுவரெலியா மாவட்டம் தேயிலையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரமுடைய பிரதேசமாகும். கொழுந்து பறித்தல் உட்பட பெருந்தோட்ட ம் சார்ந்த பணிகளை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதாரம் இன்றும் கீழ் மட்டத்திலேயே காணப்படுகின்றமை இவ்வாறான பிரச்சினைகளுக்கும் வழிவகுகின்றது.
தற்போதைய பாராளுமன்றத்தில் நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரும், 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் முயற்சித்தால் இந்த நிலைமையிலிருந்து நுவரெலியா மாவட்டத்தை படிப்படியாகவேனும் மீட்க முடியும்.
எவ்வாறிருப்பினும் அரசியலுக்கு அப்பால் இது சுகாதார நலன் சார்ந்த விடயம் என்பதால் சுகாதார அமைச்சு உட்பட முழு அரசாங்கமும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். வெறுமனே ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் மாத்திரம் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இவ்வாண்டில் மாத்திரமின்றி கடந்த ஆண்டுகளிலும் சிறுவர்களின் சுகாதார நலன் சார்ந்த விடயங்களில் நுவரெலியா மாவட்டம் உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது.
இந்த பிரச்சினைகளிலிருந்து நுவரெலியா மாவட்ட சிறுவர்களை மீட்பதற்கு சுகாதார அமைச்சின் குடும்பல சுகாதார பிரிவு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்பது தொடர்பில் அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வாவிடம் வினவிய போது அவர் இவ்வாறு விளக்கமளிக்கின்றார்.
'நுவரெலியா மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எடை மற்றும் வளர்ச்சி தொடர்பில் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையையே நாம் அவதானித்து வருகின்றோம். பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக பொருளாதார நிலையானது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் 50 சதவீதமானோர் பெருந்தோட்டத்துறையை சார்ந்தவர்களாவர். அத்தோடு அவர்களது கல்வி நிலையும் சிறந்த மட்டத்தில் இல்லை. இங்கு போதியளவு சுகாதார ஊழியர்கள் காணப்படுகின்ற போதிலும், உரையாடலுக்கான மொழித் தேர்ச்சி தொடர்பான சிக்கலும் காணப்படுகிறது. எனவே சுகாதார நலன் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவதிலும் சிக்கல் காணப்படுகிறது.
இங்குள்ள மற்றொரு பிரதான பிரச்சினை தாய் பிள்ளைகளுடன் வீட்டில் இல்லாமையாகும். இதனால் சிறுவர்களுக்கு முறையான பராமரிப்புக்கள் கிடைப்பதில்லை. அவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவற்றில் அதிகளவான சிறுவர்களை சிறப்பான முறையில் பரிமாரிப்பதற்கான வசதிகள் போதியளவு இல்லை. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு மிக அவசியமான தாய்ப்பாலூட்டல் வீதமும் குறைவாகவே காணப்படுகிறது. தாய்மார் தொழில் நிமித்தம் பல மணித்தியாலங்கள் தமது பிள்ளைகளை பிரிந்திருப்பதால் போதியளவு தாய்ப்பாலூட்ட முடியாத நிலைக்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறு பல்துறைசார்ந்த பிரச்சினைகளை இங்குள்ள பெற்றோரும், பிள்ளைகளும் எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலிருந்து நுவரெலியா மாவட்டத்தை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவு வழங்கல் திட்டங்கள், உணவு உட்கொள்வதற்கான ஆலோசனை வழங்கல் திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவற்றின் மூலம் பாரியதொரு முன்னேற்றம் ஏற்படவில்லை. மிகச் சிறியளவான முன்னேற்றமே இனங்காணப்பட்டுள்ளது.
எனவே சுகாதாரத்துறையினரால் கூறப்படும் விடயங்களைப் பின்பற்றி செயற்படுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். இங்கு பெற்றோரின் பங்களிப்புக்கு அப்பால் அரசாங்கம் இவ்வாறான மாவட்டங்களுக்கு முன்னுரிமையளித்து பல்துறை அணுகுமுறைக்குச் செல்ல வேண்டும்.'
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் கடந்த மார்ச்சில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்
தன்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் நெருக்கடிகள் ஆரம்பித்த போது அவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் உணவு பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து சவால்கள், வாழ்வாதாரத்தை இழத்தல் போன்றவற்றிலிருந்து மீளவில்லை. இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் மிதமான உணவு பாதுகாப்
பின்றியும், இலட்சத்து க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்றியும் இருப்பதாக அண்மையில் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக 2.9 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, நீர் என்பவற்றை பெற்றுக் கொள்வதில் சிரமத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், எனவே அவர்களுக்கு சமூக பாதுகாப்பு சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் யுனிசெப் சுட்டிக்காட்டியிருந்தது.
அந்த வகையில் இங்கு குறிப்பிடப்படும் பாதிப்புக்களில் நுவரெலியா மாவட்டத்தி லுள்ள சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர் அவதானம் செலுத்துவதோடு , அவற்றுக்கான நிரந்தர தீர்வினையும் வழங்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM