துரைசாமி நடராஜா
சர்வதேச சிறுவர் தினம் நேற்று (01) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இலங்கை சிறுவர்களின் சமகால நிலைமைகள் குறித்து நோக்குமிடத்து அதிருப்தியான வெளிப்பாடுகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. அதிலும் மலையக சிறுவர்கள் குறித்து நோக்குமிடத்து அவர்கள் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இச்சவால்களில் இருந்தும் இவர்களை மீட்டெடுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்பதனை மறுப்பதற்கில்லை
இன்றைய சிறுவர்கள் நாட்டின் நாளைய தலைவர்களாவர். நாளைய நாட்டை கட்டியெழுப்பும் மிகப்பெரும் பொறுப்பு அவர்களின் முன்னே வைக்கப்பட்டுள்ளது. சிறந்த சமூக உருவாக்கம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றபோது சிறுவர்களின் அபிவிருத்தி மற்றும் நலன்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பூப்போன்ற உள்ளத்தைக் கொண்டவர்களாக சித்தரிக்கப்படும் சிறுவர்கள் இன்று பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும்.
சிறுவர்களைக் கடத்துதல், யாசகம் பெறச் செய்தல், தொழிலுக்கு அமர்த்துதல், கல்வியை இடைநிறுத்துதல், கொடுமைப்படுத்தல், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், சட்டபூர்வமான பாதுகாவலரிடமிருந்து சிறுவர்களைக் கடத்துதல், சிறுவர்களைக் கவனிக்காமை போன்ற பல கசப்பான நிகழ்வுகளுக்கும் சிறுவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
அத்தோடு உலக நாடுகளில் இடம்பெறும் போர் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் மேலெழுந்து வருகின்றன.
இன்னும் போர் நடவடிக்கைகளில் அப்பாவி சிறுவர்கள் சிக்குண்டு உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்து வருகின்றமை கொடுமையிலும் கொடுமையாகும்.
இலங்கையில் கொரோனாவுக்கு பிந்திய காலகட்டமானது சிறுவர்கள் எதிர்கொள் ளும் நெருக்கீடுகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் 2.9 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் யுனிசெப் அமைப்பு சிறுவர்களின் நலன்கருதி காத்திரமான உதவிகள் பலவற்றையும் வழங்கியிருந்தது. இவற்றுள் அடிப்படை சுகாதார வசதிகள், பாதுகாப்பான குடிநீர் வசதிகள், பின்தங்கிய மாணவர்களின் கற்றல் அபிவிருத்திக்கான உதவிகள் எனப்பலவும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்களால் கடந்த காலத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள சில குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் சிறுவர்களும் இந்நெருக்கடியில் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வலியுறுத்தின.
சிறுவர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் 1924 இல் ஜெனிவாவில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமை காரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
1948இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனத்தில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
1959ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பத்து அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமும் சட்டவலுவற்றதாகிவிட்டது. இந்நிலையில், 1989இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சிறுவர் உரிமை பிரகடனத்தை உருவாக்கியது.
இப்பிரகடனம் 1990இல் சட்ட ரீதியான அங்கீகாரம் பெறப்பட்டு அமுலுக்கு வந்தது. இந்த சமவாயமானது, சிறுவர்கள் மதிப்புக்குரியவர்கள் என்பதை வலியுறுத்துவதுடன் சிறுவர்களை முழுமையாக பாதுகாத்து அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கான சகல அம்சங்களையும் கொண்டதாக விளங்குகின்றது.
அந்த வகையில் இலங்கை சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனினும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகின்றன. இச்சவால்கள் குறித்து நாம் பட்டியல்படுத்துகின்றபோது மலையக சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சற்று அதிகமாகவுள்ளதோடு பல்துறை சார்ந்தனவாகவும் காணப்படுகின்றன. இவற்றிலிருந்தும் சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டிய தேவைப்பாடு அதிகமாகவே காணப்படுகின்றது.
இலங்கை கட்டாய கல்விச் சட்டம் போன்றவற்றை அமுல்படுத்தி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு வலுச்சேர்த்துள்ளது. எனினும் மாணவர்கள் கல்வியினைத் தொடர்வதில் தடைகள் பலவும் காணப்படுகின்றன. சிறுவர்களை தொழிலுக்கமர்த்தும் நிலை மலையகத்தில் அதிகரித்து காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் பலவும் முன்வைக்கப்படுகின்றன. நகர்ப்புற எஜமானர்களின் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் சிறுவர்கள் உழைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் 6 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தொழில்நிலை குறித்து அண்மைக்கால தகவலொன்று பின்வருமாறு வலியுறுத்துகின்றது.
இதற்கமைய பெருந்தோட்டத்துறையில் 85.2 வீதமான ஆண்களும், 82.3 வீதமான பெண்களுமாக மொத்தம் 83.8 வீதமான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர்.
இதேவேளை 10.3 வீதமான ஆண்களும், 14.6 வீதமான பெண்களுமாக மொத்தம் 12.4 வீதமான சிறுவர்கள் ஏதேனுமொரு தொழில் புரிபவர்களாக காணப்படுகின்றனர். அத்தோடு பாடசாலைக்கும் செல்லாது, ஏதேனுமொரு தொழிலிலும் ஈடுபடாது 3.8 வீதமான சிறுவர்கள் வெறுமனே தோட்டப்பகுதிகளில் சுற்றித் திரிவதாக அதிர்ச்சி தரும் தகவலொன்று வலியுறுத்துகின்றது. இவ்வெண்ணிக்கையில் 4.5 வீதமான ஆண்களும், 3.1 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
தொழில் புரியும் சிறுவர்களின் தொழில் வகைகள் பின்வருமாறு அமைந்துள்ளன. இதற்கேற்ப வீட்டுப் பணியாளர்களாக 15.5 வீதமான ஆண்களும், 85.5 வீதமான பெண்களுமாக மொத்தம் 50.5 வீதமான சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களில் 47.3 வீதமான ஆண்களும், 2.2 வீதமான பெண்களுமாக மொத்தம் 24.8 வீதமான சிறுவர்கள் பணியாற்றுகின்றனர். நாட்கூலிகளாக 25.2 வீதமான ஆண்களும், 8.4 வீதமான பெண்களுமாக மொத்தம் 16.8 வீதமான சிறுவர்கள் பணியாற்றுகின்றனர். 3.2 வீதமான ஆண்களும், 1.2 வீதமான பெண்களுமாக மொத்த தொழில் புரியும் சிறுவர்களில் 2.2 வீதமானோர் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட தொழில்களை விட 5.7 வீதமான சிறுவர்கள் வேறு பல தொழில்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வலியுறுத்துகின்றன. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் ஊடகங்கள் என்ற வகையில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் மூலமாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர்.
20.5 வீதமான சிறுவர்கள் பெற்றோர் மூலமாகவும், 6.5 வீதமான சிறுவர்கள் ஏனைய உறவினர்கள் மூலமாகவும், 8.3 வீதமான சிறுவர்கள் தொழில் வழங்குநர்கள் மூலமாகவும் தொழிலுக்கு அமர்த்தப்படுவதாக கடந்தகால தகவல்கள் வலியுறுத்துகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.
பல சமூக பொருளாதார சமத்துவமின்மையாலும் போதியளவு கல்வி வசதியின்மையாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூலகாரணமாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
இழக்கப்படும் சந்தர்ப்பம்
பெருந்தோட்டத்துறையை பொறுத்தவரையில் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால் அவர்களது வாழ்க்கையில் பல சிறந்த சந்தர்ப்பங்களை இழக்க நேரிட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஷோபனாதேவி குறிப்பிடுகிறார். அத்தோடு சிறுவர்கள் பின்வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இளம் பருவத்தில் தொழில் வாய்ப்பு குறைவாக காணப்படும். அவர்களது குறைந்த முதலீட்டால் தொழிற்சந்தையில் குறைந்த வருமானத்தையே உழைக்கக் கூடியதாக இருக்கும். குறைந்த கல்வித்தரமானது அவர்களின் தொழிற்சார் திறனை வளர்க்கும் இயலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது. அவர்களது தலைமைத்துவமானது குறைந்த தரத்திலேயே காணப்படும். பாதிக்கப்பட்ட மனோநிலை உள்ளவர்களாகவும் சமூகத்தின் மீது வெறுப்புணர்வு உள்ளவர்களாகவும் சிறுவர்கள் வளர்கின்றார்கள். பல சிறுவர் தொழிலாளர்கள் சமூக விரோதிகளாகவும், குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்றனர் போன்ற பல்வேறு விடயங்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஷோபனாதேவி இதன்போது சுட்டிக்காட்டுகின்றார்.
தாய் அல்லது தந்தை தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதன் காரணமாகவும் உரிய பாதுகாப்பின்றி காணப்படும் பிள்ளைகளும் சவால்கள் பலவற்றையும் சந்தித்து வருகின்றமை தெரிந்ததேயாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் பிரகாரம் 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் 2023.08.29 திகதிவரை ஒரு இலட்சத்து 77,706 பேர் வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் அநேகமான மலையக பெருந்தோட்டப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இப்பெண்கள் உழைத்தனுப்பும் பணத்தை சில ஊதாரிக் கணவன்மார் பிழையான வழிகளில் செலவு செய்து வருவதும் தெரிந்ததாகும். இதேவேளை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் சிறுவர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களாலேயே துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அறிந்ததேயாகும். இது 'வேலியே பயிரை மேய்ந்த' ஒரு நிலைக்கு ஒப்பானதாகும். இத்தகைய நிலைமைகள் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்றன. இதனால் பிள்ளைகளின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூனியமாகிக்கொண்டிருக்கின்றது. வறுமை, போஷாக்கின்மை, நோய்கள் போன்ற பலவும் சிறுவர்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன.
இதேவேளை விசேட தேவை கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இவர்களின் உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்துவதிலும் சிக்கல்நிலை மேலோங்கியுள்ளது.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் விசேட தேவை கொண்ட சிறுவர்கள் அநேகமுள்ளனர். எனினும் இவர்கள் உரியவாறு இனங்காணப்படாத நிலையில் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருவதும் புதிய விடயமல்ல.
மலையகத்தின் பல கல்வி வலயங்களில் விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இதனால் இத்தகைய மாணவர்களுக்கான கல்வி உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாடசாலைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மலையக கல்வி வலயங்களில் மேற்கண்ட உத்தியோகத்தர்கள் நிய மிக்கப்பட்டு விசேட தேவை கொண்ட சிறுவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைதல் வேண்டும். அத்தோடு விசேட தேவையாளர்களுக்கு தேவையான வளங்களும் உரியவாறு கிடைக்காத ஒரு நிலையே மலையகத்தில் காணப்படுகின்றது.
இதனால் விசேட தேவையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன. விசேட தேவையாளர்களும் எமது சகோதரர்களே எனக்கருதி அவர்களுக்கான பல்வகைசார் உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் முன்வருதல் வேண்டும்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறுவர் பராயம் என்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. இந்நிலையில் அப்பராயத்தில் சுதந்திரமாக பிள்ளைகள் செயலாற்றுவதற்கு இடமளிக்க வேண்டும். அத்துமீறிய தலையீடுகளாலும் அதிகரித்த எதிர்பார்ப்புகளினாலும் சிறுவர்களின் இயல்பு நிலையை பாழ்படுத்த எவரும் முற்படுதலாகாது. தமது சிந்தனைகளை பிள்ளைகளில் திணித்து அவர்களின் ஆளுமைக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையை சிதைப்பது மிகப்பெரும் குற்றமாகும். இதைவிடுத்து அவர்களை பக்குவமாக செதுக்கி நாளைய உலகுக்கு தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM