பழையன கழிதலும் புதியன புகுதலும் இன்றைய நவீன உலகில் மகுடமாய் இருக்க, நாட்டாரியலுக்கு என்றுமே ஒரு இடம் உண்டு. அதிலும் குறிப்பாக மலையகத் தமிழர்கள் தமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல கலை கலாசார விடயங்களை தம்மோடு கைகோர்த்தபடி இன்று வரை நாட்டாரியலை பாதுகாக்கின்றனர்.
அந்த கலை வரிசையில் பொன்னர் சங்கர், காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு போன்ற நிகழ்த்துகலைகள் மேலோங்கி நிற்கின்றன. குறிப்பாக பொன்னர் – சங்கர் என்ற நிகழ்த்து கலை பற்றி பிரத்தியேகமாக நோக்குவோமாயின் சோழர் காலத்தில் எழுந்த மெய் சம்பவத்தினை அடியொட்டி எழுந்த அண்ணன்மார்கள் கதையானது கோலத்தான் கவுண்டர் பரம்பரையான நெல்லியங்கோடனின் புதல்வர்களாகிய பொன்னர், சங்கர் என்பவர்களின் வாழ்க்கை வரலாற்று சாகசங்களை கூறுவதாக அமைந்துள்ளது.
புலவர் பிச்சையின் ஓலைச்சுவடியை அடியொட்டி கவிஞர் சக்தியால் தொகுக்கப்பட்டது. அதன்பிறகு அ.பழனிச்சாமி என்பவர் பொன்னர் அழகர் கள்ளழகர் அம்மானையாக தொகுத்து காலப்போக்கில் வரகுண்ணாப் பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல் என நாமம் சூட்டப்பட்டது.
1965ஆம் ஆண்டு ஈ.சி. இராமசாமி என்ற நாட்டுப்புறவியலாளர் முதன் முதலாக இதனை ஒளிப்பதிவு செய்ய அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரேண்டயி எப்.பேக் உதவியுடன் எல்டர் பிரதர்ஸ் ஸ்டோரி எபிக் ஒப் தமிழ் (helder brother story epic of Tamil ) எனும் பெயரில் தமிழில் வெளிவந்தது. இப்படி பெருமிதம் கொண்ட இதனை இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை வரும்போது தம்மோடு ஈர்த்து வந்து சாஞ்சிமலை, பெரிய லட்சுமி தோட்டம், அல்பின், டெரிக்கிளயர், அக்கரப்பத்தனை போன்ற இன்னும் பல மலையகப் பகுதிகளில் இந்த கூத்தை இன்று வரை கோலாகலமாக அரங்கேற்றி வருகின்றனர். பல இடங்களில் இந்த கூத்து மருவி வருகின்றது. இதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும் என்பதே மலையக சமூகத்தின் நோக்கமாக இருக்கிறது.
இப்படி விளிம்பு நிலையில் இருக்கும் இக்கூத்தினை யாரும் அங்கீகரிக்காவிட்டாலும் பரவாயில்லை இதுவே எமது அடையாளம் என தலவாக்கலை மட்டுக்கலையைச் சேர்ந்த முன்னாள் கூத்துக் கலைஞர் பிச்சைமுத்து முத்தையா அண்ணாவியார் கூறுகின்றார். இந்த ஊரில் கிட்டத்தட்ட 80 வருட காலமாக இதுவே இவர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. பரம்பரையின் வழிதொட்டு கடந்த பல தசாப்தங்களாக இவ்வூரில் இந்த கூத்துக் கலையை பாரிய சவால்களுக்கு மத்தியில் இவர் அரங்கேற்றி வருகின்றார்.
உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றிய துன்பத்தின் பிடியில் இருந்த ஆதிகால மலையகத் தமிழர்களுக்கு, மாலை மயங்கி இருள் சூழும் மாசி மாதம் முழுவதும் இவ்வாறான இக்கூத்துக்கலைகளே குதூகலமாய் அமைந்தன. ஆனால் இன்று அதே துன்ப நிலை இருக்கின்ற போதும் கூத்தின் குதூகலம் மாத்திரம் குறைந்துவிட்டது. காரணம் பொருளாதாரம் எனும் தடையாகும். இதன்படி “ஒரு கூத்து செய்ய 30,000 ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. சாதாரண ஏழை மக்களுக்கு இது பெருந்தொகை” என்கிறார் அண்ணாவியார். இதேபோல கூத்தின் கதாபாத்திரங்களை ஏற்கும் ஆர். ஞானசேகரன் தெரிவிக்கையில் “இந்த கூத்துக்கு ஆடைகள் தயாரிக்க ஒரு கிழமைக்கு மேல் செல்லும். கூலியோடு மொத்தமாக 10,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுகின்றது என்கிறார். இக்கலைக்கு மக்களின் காணிக்கை வழியாக மாத்திரமே பண வரவு இருக்கின்றது.
சாதாரண தினக் கூலி தொழிலாளர்களாக இருக்கும் இவர்களுக்கு அத்தொகையானது பாரிய நிதி ஆகும். ஜெ.மோகனநாதன் என்ற கலைஞர் கூறுகையில் “நா பல தடவ கடன் பட்டுதாங்க இத செய்றேன்…. எங்களோட பாரம்பரிய கலைய எப்படிங்க விட்டுர்றது? அது இரத்தத்தோட ஊறுனது இல்லியா " என்கிறார்.
இவ்வாறு இக்கூத்துக்காக பல நாட்கள் தத்தமது வேலைகளை விடுத்தே இதனை செய்கின்றனர். இவர்களுக்கு இதனால் எவ்வித வருவாயும் இல்லை, ஆனால் தமிழர்களின் அடையாளம் தோய்ந்து போகலாகாது என்ற ஒரே நோக்கத்துக்காக இதை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இவர்களுக்குக் கிடைப்பது வெறுமனே கைதட்டும் பாராட்டும் மாத்திரமாக இருந்தாலும் அதில் மன திருப்தி கொள்கின்றனர். அதே வேளை ஒவ்வொரு வருடமும் குறித்த நேரத்தில் இக்கலையை நடத்தி வருகின்றனர். எவ்வித பொருளாதார தடைகள் வந்தாலும் நிறுத்தியதே இல்லை. அதிலும் கடுமையான கொரோனா காலப்பகுதியிலும் நெறிமுறைகளோடு இதனை செய்து உயிரோட்டம் பேணி வைத்திருக்கின்றனர் என்பது முக்கிய விடயம்.
இதே வேளை கூத்துக்கலைகளை மலையகப் பகுதிகளில் மதிக்காத தன்மையும் அதிகமாக இருக்கின்றது. வெறும் கூத்தர்கள் தானே இவர்கள் என கலைஞர்களை அவமதிக்கும் தன்மையே பலரிடமுள்ளது. ஆனால் மட்டுக்கலை தோட்டத்தில் அவ்வாறு இல்லை. இந்த கலை தம்மோடு அழிந்து விடாது அடுத்த பரம்பரையினரும் இதை முன்னெடுக்க வேண்டும் என முழுமூச்சாய் செயற்படுகின்றனர். அண்ணாவியார் முத்தையா இதற்காகவே சீடர்களை உருவாக்கி பயிற்சி வழங்குவதோடு கூத்து பயிற்சியின் போது அவ் ஊரை சேர்ந்த எல்லா நபர்களுக்கும் இதை பயிற்றுவிக்கின்றார்.
ஆர். ஞானசேகரன் தன் மகனான ஜீ.லிதுர்ஷன் என்பவரை சிறுவயதில் இருந்தே இக் கூத்திற்காக தயார்ப்படுத்தியுள்ளார். அத்துடன் ஜெ.மோகன நாதன் என்பவர் தன் புதல்வர்களான எம்.ரொபட்சன், எம்.அஜாந் என்ற இருவரையும் இதில் ஈடுபடுத்தி இன்று அவர்கள் பிரதான பாத்திரமாக திகழ்கின்றனர். இப்படி பரப்புவதோடு நிறுத்தி விடாது இக்கூத்து பெருமை பற்றி தெருக்கூத்து வழியாக சென்று இதன் மகிமையையும் அறியப்படுத்துகின்றனர். அத்தோடு பெறுநர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உள்ளது.
எம். ராஜேஸ்வரி என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த கூத்துல உள்ள கதாபாத்திரங்கள பாத்தா, உண்மையான தெய்வத்த பாக்குற மாதிரியே இருக்கு அதனால இதில் நாங்க ஒன்றித்து போகிறோம் " என்கிறார். ஜனார்த்தனன் என்ற இளைஞர் கூறுகையில் “ஏனைய ஊர் இளைஞர்களை போலல்லாது எங்கள் ஊரில் எமது குழாத்தினர் இக்கலையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.
இந்த பொன்னர் – சங்கர் கூத்துக் கலையை இவர்கள் தெய்வாம்சமுள்ள கலையாக மதிக்கின்றனர். ‘இதனாலேயே எங்கள் ஊரில் எவ்வித அசம்பாவிதங்களும் நடப்பதில்லை. ஊர் செல்வ செழிப்பாக இருக்கிறது என்கின்றனர். ஆனால் இந்த கூத்துக்காக தம்மை அர்ப்பணித்து வரும் இவர்களுக்கு கைக்கொடுத்து அங்ககீகரிக்கவோ, விசேட விருதுகளையோ நினைவுச்சின்னங்களையோ வழங்குவதற்கு கூட எந்த ஒரு தனி நபரோ அல்லது அமைப்புகளோ முன்வருவதில்லை.
இப்பிரதேசத்தை சேர்ந்த கவிஞரும் அதிபருமான வே.தினகரன் கூறுகையில்,
“இன்றைய நாட்டுப்புற கலைகளானது விளிம்பு நிலையிலேயே இருக்கிறது. கூத்துக் கலைஞர்கள் உண்மையிலேயே பாவமானவர்கள். எத்தனையோ பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் கூத்துக்களை முன்னெடுத்தாலும் இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு எவ்வித பாராட்டுக்களும் இல்லை. காரணம் இதனை பாதுகாப்பதற்கான நிறுவனப்படுத்தப்பட்ட எவ்வித சங்கமோ அமைப்போ இன்று மலையக பகுதிகளில் இல்லை. தற்கால இளைஞர்கள் எது அடையாளம் என்பதை மறந்து மாயைக்கு பின்னால் செல்கின்றனர்.
இவ்வாறான கலைஞர்கள் அழியாது இருக்கின்ற போதிலும் இவர்களை பெருமைப்படுத்தி கை கொடுக்க யாருமில்லை. இதற்கு அரசியல்வாதிகள் முன்வந்து கலாசார மண்டபங்களை அமைத்துக் கொடுப்பதோடு இவர்களுக்கு நிதி திட்டங்களையும் கொண்டு வரும் பட்சத்தில் ஏனைய பிரதேசங்களை போல எமது மலையக கூத்து கலைகளும் பாதுகாக்கப்படலாம்” என தெரிவித்தார்.
உழைக்கும் வர்க்கத்தினரின் 200 வருட நிறைவை கொண்டாடும் இக்காலகட்டத்திலேயே தமிழர்களின் அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே பாரம்பரிய அழியாத பொக்கிஷங்களாக விளங்கும் கூத்து கலைகளை பாதுகாக்க வேண்டியது எமது வாழ்வியல் கடமையாகும்.
செல்வகுமார் ரினோஷன்
ஊடக கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM