கோடீஸ்வரன் றுஷாங்கன்
இந்து சமுத்திரத்தின் நித்திலம் என வர்ணிக்கப்படும் இலங்கை தீவு, அதன் கடற்கரைகளால் மாத்திரமன்றி, காடுகள், மலைகள், ஆறுகள், வயல்வெளிகள் என்று எல்லாவிதமான சுற்றுலா ஈர்ப்புக்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு அற்புத தீவாக விளங்குகிறது.
எல்லாக் காலமும் கிட்டத்தட்ட ஒரே விதமாக இருக்கும் அதன் காலநிலை இதற்கு மேலும் அழகு சேர்த்து வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் தன்மையை அதற்குக் கொடுக்கிறது.
வரங்களைச் சாபமாக்கும் அதன் ஆட்சியாளர்களினதும், அதற்குச் சவால் விட்டவர்களினதும் இடையறாத மோதல்களால் இந்த அழகிய தீவு உருக்குலைந்து அதன் சுற்றுலா ஈர்ப்பை படிப்படியாக இழந்து, ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்று, அரகலயவுடன் முற்றாக அது முடங்கிக் கிடந்தது.
ஆனால், நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய தலைமைத்துவத்தின் தூரநோக்குடனான நகர்வுகளால் படிப்படியாக அது மீண்டும் உயர்பெற்று சுற்றுலாப் பயணிகளை மறுபடியும் ஈர்க்கத் தொடங்கிவிட்டது.
ஆனாலும், தொடர் மோதல்களால் பல தசாப்தங்களாக சிதையுண்டுபோயிருக்கும் வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை இன்னமும் முற்றாகச் சீர்பெற்றுவிடவில்லை. இன்னமும் முழுவதுமாக மீள்கட்டுமானம் செய்யப்படாத நகரங்களும், அழிவுற்ற பல கட்டுமானங்களும் வடக்கின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்குப் பெரும் சவாலாகவே இருக்கின் ன்றன.
மோதல்கள் முடிவுக்கு வந்த சிறிது காலத்திலேயே வடக்குக்கான தரைவழிப் பாதை கார்ப்பற் வீதிகளாக உயிர்பெற்றதால் அதன் சுற்றுலாத்துறை சிறிதளவு உயிர்பெறத் தொடங்கியது. முற்றாக அழிவடைந்து கிடந்த ரயில் பாதைகள் சீரான பின்னர் அது மேலும் சிலிர்த்துக்கொண்டது. பலாலி விமான நிலையம் சர்வதேச விமானநிலையமாக தரமுயர்த்தப்பட்டு சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பித்த பின்னர் சுற்றுலாத்துறை சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.
இவ்வாண்டு ஜூன் 16ஆம் திகதி காங்கேசன்துறை துறைமுகம் உத்தியோகபூர்வமாக செயற்படத் தொடங்கியபோது சென்னையிலிருந்து வருகை தந்த ‘கோடிலியா’ என்கின்ற உல்லாசப் பயணக் கப்பல் சேவை இந்த வளர்ச்சிக்கு மகுடம் சூட்டி புத்துயிரூட்டியுள்ளது.
அன்றையதினம் துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இணைந்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைமுகத்தைத் திறந்து வைத்திருந்தார். கார்ப்பட் வீதிகளை அமைத்து, ரயில் சேவைகளை ஆரம்பித்துக் காட்டியதுபோல, நீண்ட காலமாகவே ‘காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்படும், சென்னைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்’ என்றுதான் சொல்லி வந்ததை நிரூபித்துக் காட்டினார்.
காங்கேசன்துறை துறைமுகம் செயற்பட ஆரம்பித்ததுமே முதல் வரவாக வந்த ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல், தொடர்ந்து ஜூன் 23, 30ஆம் திகதிகளில் இங்கு வருகை தந்து, அதன் பின்னர் ஆகஸ்ட் 11, 18, 25ஆம் திகதிகளிலும், செப்டெம்பர் 1, 8, 15ஆம் திகதிகளிலும் என 9 தடவைகளாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகளை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து அவர்களில் 6ஆயிரம் பேர் வரையிலானோரை யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கச் செய்தது.
சென்னையை மையமாகக் கொண்ட ‘கோடிலியா’ என்கின்ற இந்த உல்லாசப் பயணக் கப்பலின் இலங்கைக்கான சேவையை, இலங்கையின் ஹெய்லிஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான கிளாரியன் ஷிப்பிங் நிறுவனத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். சுற்றுலா பயணிகளை உள்ளூர் பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டும் பணியை ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் வோக்கர்ஸ் டுவர்ஸ் நிறுவனத்தினர் பொறுப்பேற்று நடத்தியிருந்தனர்.
11 அடுக்குகளில், விசேட தங்கும் அறைகள், உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்கள், நீச்சல் தடாகங்களைக் கொண்ட ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல், திங்கட்கிழமைகளில் சென்னையிலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கடலில் பொழுதைக் கழித்துவிட்டு, புதனன்று அம்பாந்தோட்டை, வியாழன் திருகோணமலை என தரித்து, பிரதி வெள்ளிக் கிழமைகளிலும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்திய சுற்றுலாப்பயணிகளை காவி வந்தது.
தொடர்ச்சியான 9 பயணங்களிலும் மொத்தமாக 8,113 சுற்றுலாப்பயணிகளை அது காங்கேசன்துறைக்கு அழைத்து வந்தது. இந்த ஆண்டின் இறுதிப் பயணமாக அமைந்த செப்டெம்பர் 15ஆம் திகதியன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு நிலையினால் சுற்றுலா பயணிகள் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கப்படாதபோதிலும், முதல் 8 தடவைகளிலும் 5,648 இந்திய சுற்றுலாபயணிகள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்க ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் வாய்ப்பளித்தது.
வடக்கு மாகாணத்துக்கு எதிர்பாராத விதமாக திடீரென வந்த ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் சுற்றுலா பயணிகளை வரவேற்று உபசரிக்க ஆரம்பத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்காதபோதும், பின்னர் இதுபற்றி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயம் மூலம் அறிந்து கொண்டு துரிதமாக செயற்பட்ட வட மாகாண ஆளுநரின் நடவடிக்கையால், சுற்றுலா பயணிகளை வரவேற்று உபசரித்து பயண வழிகாட்டி சேவை வழங்கும் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் விடுத்த பணிப்புரையின் பிரகாரம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ‘கோடிலியா’ சுற்றுலா பயணிகளை வரவேற்று உபசரிக்கும் ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டது. மாவட்டச் செயலகம், தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை என்பன இணைந்து, வலிகாமம் வடக்கு முன்னாள் பிரதேச சபை வளாகத்தில் உருவாக்கிய சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்கான விசேட வரவேற்பு மையம், சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய பல்வேறு வசதிகளையும் அங்கு வழங்கியது.
வலி வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடமாடும் மலசல கழிவு கூட வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த விசேட மையத்தில், சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் உணவு மற்றும் உற்பத்திப் பொருள்கள், கைப்பணிப் பொருள்களை விற்பனை செயற்வதற்கான காட்சிக் கூடங்கள், முச்சக்கரவண்டி, சிறிய ரக சொகுசு கார்கள், வான்கள் பெரிய வான்கள் என முழுமையான போக்குவரத்து வழிகாட்டி சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு முறையும் ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் மூலம் வந்த சுற்றுலாபயணிகள், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து ஆலயங்களான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை, நகுலேஸ்வரம், நல்லூர் கந்தசுவாமி கோவில், மருதனார்மடம், ஆஞ்சநேயர் ஆலயம் என்பவற்றுக்கும், யாழ்ப்பாணக் கோட்டை, சங்கிலியன் மந்திரிமனை, மணிக்கூட்டுக் கோபுரம், காரைநகர் கசூரினா கடற்கரை, யாழ் .பிரதான சந்தை என பல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்று இடங்களைப் பார்வையிட்டு பொருள் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டின் இறுதிச் சேவையாக அமைந்த செப்டம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற சேவையின்போது யாழ்ப்பாணத்துக்கு அதுவரையில் வருகைதந்த 6 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகளை நன்றியோடு வரவேற்றுக் கொண்டாடும் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக அன்றையதினம் காணப்பட்ட கடல் கொந்தளிப்பு நிலை காரணமாக சுற்றுலா பயணிகள் கப்பலைவிட்டு இறங்க அன்று அனுமதிக்கப்படாதபோதிலும், திட்டமிட்டபடி யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவரின் பங்கேற்புடன் ‘கோடிலியா’ சுற்றுலா பயணிகளின் யாழ். வரவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜா கலந்து சிறப்பித்து, இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளை வரவேற்று உபசரிக்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்த வடக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாப் பணியகம், தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், போக்குவரத்து சேவையை வழங்கிய முச்சக்கரவண்டி, கார் மற்றும் வான் சாரதிகள், சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்த உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார்.
மேலும், மழை காலத்தின் பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் என்று இங்கு தெரிவித்த அவர், அதுமட்டுமன்றி, விரைவில் நாகபட்டினம் –- காங்கேசன்துறை விசேட கப்பல் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தியையும் அங்கு அறிவித்திருந்தார். இறுதியாக அரங்கேறிய வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் பயிலப்பட்டுவரும் பாரம்பரிய ஆடல் கலையான ஒயிலாட்டம் இந்த நிகழ்வை மேலும் அழகுபடுத்தியது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச விமான நிலையமாக தலைநிமிர்ந்து வரும் பலாலி விமான நிலையம், அதே அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டுவரும் காங்கேசன்துறை துறைமுகம், சென்னை ‘கோடிலியா’ உல்லாசப் பயணக் கப்பல் மூலம் யாழ். வந்து சென்ற சுற்றுலாபயணிகள், விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் பயணிகள் கப்பல் சேவை என்று, இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டுவரும் பல்வேறு முயற்சிகளும், வடக்கின் சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் அமைந்துள்ளமை மகிழ்ச்சியான விடயமே.
வடக்கு மாகாணம் சற்றும் எதிர்பாராத விதமாக இந்தியாவிலிருந்து வந்து சென்றிருக்கும் சுற்றுலாபயணிகள், வடக்கின் சுற்றுலாத்துறையை மிக அவசரமாக மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தை அலாரம் அடித்து விழிப்பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ‘கோடிலியா’ காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வருகைதரத் தொடங்குவதுடன், இன்னுமின்னும் வடக்கை நோக்கிப் படையெடுக்கவிருக்கும் உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாபயணிகளை வரவேற்று, உபசரித்து, அவர்கள் மூலம் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித ஏற்பாடுகளை மேற்கொள்வது வடக்கின் சுற்றுலாத்துறை சார்ந்த அனைவரதும் பொறுப்பாகும்.
சுற்றுலா யாழ்
பயணிகள் வந்தவர்கள்
ஜூன் 16 519 421
ஜூன் 23 420 360
ஜூன் 30 938 805
ஆகஸ்ட் 11 901 744
ஆகஸ்ட் 18 1,214 1,007
ஆகஸ்ட் 25 584 523
செப்டெம்பர் 1 1241 997
செப்டெம்பர் 8 903 791
செப்டெம்பர் 15 1393
மொத்தம் 8,113 5,648
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM