சிவலிங்கம் சிவகுமாரன்
நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அட்டன் நகரமானது, நகர உட்கட்டமைப்பு வசதிகளில் இன்னும் அதே நூறு வருடங்கள் பின்தங்கியே உள்ளது. சனத்தொகை மற்றும் கட்டட அதிகரிப்புக்கேற்ற நீர் வழிந்தோடும் வடிகாண்கள் அமைக்கப்படாமை கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடமில்லாமை, இ.போ.ச மற்றும் தனியார் பஸ் நிலையங்களை சுற்றியுள்ள பஸ் தரிப்பிட பாதைகள் சேதமுற்று மழைக் காலங்களில் வெள்ள நீர் நிரம்புகின்றமை இப்படி பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன.
இ.போ.ச பஸ் நிலையமானது மிக மோசமான நிலையில் பயணிகள் அமர்வதற்குரிய ஆசன வசதிகள் இல்லாது கழிவுகள் நிறைந்ததாக பல வருடங்கள் அப்படியே காட்சியளிக்கிறது.
அட்டன் டிப்போவுக்கு சொந்தமாக 85 பஸ்கள், அட்டனிலிருந்து மஸ்கெலியா, பொகவந்தலாவை, கொழும்பு, தலவாக்கலை, நுவரெலியா, கண்டி, கதிர்காமம், மட்டக்களப்பு ஆகிய பிரதான நகரங்களுக்கும் ஏனைய உள்ளூர் மார்க்கங்களிலும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
புத்தாண்டு காலங்களில் கொழும்பு – அட்டன் மார்க்கத்தில் மாத்திரம் வாரம் ஒன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.
மேலும், சிவனொளிபாதமலை பருவகாலத்தில் ஆறு மாதங்களுக்கு அட்டன் – நல்லதண்ணீர் மார்க்கத்தில் அதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறித்த ஆறு மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நிரந்தர வருமானத்தைக்கொண்டுள்ளது அட்டன் டிப்போ. இருப்பினும் எக்காலத்தில் அட்டன் டிப்போ நிர்வாகமானது பஸ் நிலையத்தையோ அல்லது பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பாதைகளையோ சீர் செய்ய முன்வருவதில்லை. அது குறித்து கேட்டால் வருமானம் இல்லையென்ற பதிலே பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. பஸ் நிலைய பிரதேசம் மிக மோசமாக சேதமடைந்து காணப்பட்டதையடுத்து அட்டன் – டிக்கோயா நகரசபையானது மூன்று கட்டங்களாக அவ்விடத்தை சீர்செய்து வருகின்றது. இதற்காக சபையானது சுமார் ஐம்பது இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் அட்டன் டிப்போவுக்கு எத்தனை பஸ்கள் உள்ளன, பஸ் நிலையம் அமைந்துள்ள இடம் யாருக்கு உரித்தானது, நீண்ட தூர மார்க்கத்தில் எத்தனை பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன, அதிக வருமானம் வருகிறதென்றால் ஏன் இது வரை யாழ்ப்பாணத்துக்கு பஸ் சேவை ஒன்றை ஆரம்பிக்கவில்லை, எப்போது ஆரம்பிக்கப்படும்? போன்ற கேள்விகளை முன்வைத்து நாம் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக விண்ணப்பித்திருந்தோம். அதன் அடிப்படையில் இக்கட்டுரை இங்கு எழுதப்படுகின்றது.
தகவல்கள் விபரம்
தற்போது அட்டன் பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது (ஸ்ரீலங்கம) மேற்படி இடத்தை பராமரிக்கும், சீர்படுத்தும், புனருத்தாரணம் செய்யும் அதிகாரத்தை அட்டன் டிப்போ கொண்டுள்ளது. எனினும் நிதி பற்றாக்குறை காரணமாக டிப்போ நிர்வாகமானது அட்டன்– டிக்கோயா நகர சபையிடம் பஸ் நிலைய புனருத்தாரன பணிகளுக்கு நிதி உதவிகான கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதன் படி தற்போது புனருத்தாரன பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதியாக 2018ஆம் ஆண்டு அட்டன் – டிக்கோயா நகரசபையால் சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பகுதியில் திருத்தப்பணிகளை மேற்கொண்டது.
மொத்தமாக 85 பஸ்கள் – மாத வருமானம் ஒன்பது கோடி
அட்டன் டிப்போவுக்கு சொந்தமான 85 பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்களிலிருந்து கிடைக்கும் மாத வருமானமாக 9 கோடி ரூபாய் வரை கிடைத்து வருவதாக டிப்போ நிர்வாகம் தகவல் வழங்கியுள்ளது.
கடந்த ஐந்து வருட வருமானம்
இதே வேளை 2017ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை அட்டன் டிப்போவுக்கு கிடைத்த வருமானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் வழங்கப்பட்டிருந்தது.
ஆண்டு வருமானம் (ரூபாய்களில்)
2017 470,864,192.50
2018 520,164,445.50
2019 525,364,722.00
2020 352,663,538.50
2021 316,068,497.00
2022 1,068,745,366.00
இந்த அட்டவணையின் மூலம் நாம் சில முடிவுகளுக்கு வரலாம். 2017ஆம் ஆண்டிலிருந்து அட்டன் டிப்போவின் வருமானமானது படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.
2017இல் வருட வருமானம் 47 கோடியே 86 இலட்சமாக இருந்துள்ளது. இதுவே 2019ஆம் ஆண்டு 52 கோடியே 53 இலட்சமாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் எரிபொருள் விலை உயர்வோ பஸ் கட்டண அதிகரிப்போ குறிப்பிடும்படியாக இல்லை. ஆனால் 2018ஆம் ஆண்டு பஸ் நிலைய பிரதேசத்தின் சீரமைப்புப் பணிகளை டிப்போவானது அட்டன் – டிக்கோயா நகரசபையின் தலையில் சுமத்தியுள்ளது. அவ்வாண்டு நகர சபை ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாவை இதற்காக செலவழித்துள்ளது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் டிப்போவின் வருட வருமானம் குறைந்தமைக்கு கொரோனா தொற்று மற்றும் நாடு முடக்கப்பட்டமை, இடைவெளியை பேண குறைந்தளவான பயணிகள் பஸ்களில் ஏற்றப்பட்டமை என பல காரணங்கள் விளங்குகின்றன.
எனினும் 2022ஆம் ஆண்டு டிப்போவின் வருமானம் நூறு கோடியை தாண்டியுள்ளதை இங்கு அவதானிக்கலாம். ஆனால் இந்த காலகட்டங்களில் பஸ் நிலைய பிரதேசம் மிக மோசமாக சேதமுற்று மழைக்காலங்களில் குளங்களை போன்று மழை நீர் நிரம்பி நின்றமையை பயணிகள் மற்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தூர மார்க்கங்களுக்கான பஸ்கள்
அட்டன் டிப்போவுக்கு சொந்தமான 25 பஸ்கள் தூர மார்க்கங்களில் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் 23 பஸ்கள் கொழும்புக்கும் ஏனைய இரண்டும் கதிர்காமம் மற்றும் மட்டக்களப்புக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு ஏன் பஸ் சேவை இல்லை?
தூர மார்க்கங்களில் ஈடுபடும் பஸ் சேவைகளில் அட்டன் டிப்போவுக்கு அதிகளவான வருமானம் கிடைக்கின்றது. மிக முக்கியமாக கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பஸ்களின் மூலம் நாளொன்றுக்கு 15 இலட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கின்றது. எனினும் அதிகமானோர் செல்லும் மார்க்கமான யாழ்ப்பாணத்துக்கு ஒரு பஸ்ஸை அட்டன் டிப்போ இதுவரையிலும் சேவையில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டவில்லை.
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் மலையக மாணவர்கள் , பத்தனை கல்வியியற்கல்லூரி பயிலுனர் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், அட்டன் பகுதியை அண்டி வாழ்ந்து வரும் யாழ்ப்பாண சமூக மக்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தனியார் பஸ் மாத்திரமே அட்டனிலிருந்து சேவையில் ஈடுபடுகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு இங்கிருந்து புறப்படுகின்றது. இது அரை சொகுசு பஸ் என்பதால் கட்டணங்களும் அதிகமாகும்.
இந்த மார்க்கத்தில் ஏன் இதுவரை பஸ்கள் ஈடுபடுத்தப்படவில்லையென்ற கேள்விக்கு, போதியளவான பஸ்கள் இல்லை என்றும் நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக இம்மார்க்கத்தில் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டனவா என்ற கேள்விக்கு ஆம் என்றும் அவை அட்டன் டிப்போ பஸ்கள் இல்லையென்று பதிலளித்துள்ள தகவல் வழங்கும் அதிகாரி, கம்பளை மற்றும் யாழ் டிப்போ பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று பதில் வழங்கியுள்ளார்.
மேலும் அனுராதபுர பிரதேசத்தில் வைத்து பஸ் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் இவை ஒரு வாரத்தோடு நிறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக இயந்திர வலு கொண்ட பஸ் மற்றும் போதுமான சாரதி,நடத்துநர் வளங்கள் கிடைக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணத்துக்கு பஸ் சேவைகளை ஆரம்பிக்கலாம் என டிப்போ தெரிவிக்கின்றது. இம்மார்க்கத்தில் பஸ் சேவைகளை ஆரம்பிக்க உரிய வளங்களை வழங்குமாறு அட்டன் டிப்போவானது போக்குவரத்து அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்ததா என கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதற்கு பதில் வழங்கியுள்ள டிப்போ, 07/04/2023 அன்று திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானால் போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு அதற்கு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்கியுள்ளது. அதில் அட்டன் – யாழ் மார்க்கத்தில் பஸ் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டுள்ளது.
சீர் செய்யும் பணிகளில் அட்டன் – டிக்கோயா நகரசபை
அட்டன் இ.போ.ச டிப்போவின் வருமான விபரங்கள் இவ்வாறிருக்க போதிய நிதி இல்லையென டிப்போ நிர்வாகமானது அட்டன் – டிக்கோயா நகரசபையின் நிதியினூடே பஸ் நிலையம் மற்றும் பஸ் தரிப்பிட பகுதியை சீர்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. குறித்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 40 வருடங்களை நெருங்கும் நிலையில் கூரைகள் பயணிகள் தலையில் விழும் அபாயத்தை உணர்ந்து நகரசபை அவற்றை அற்புறப்படுத்தியுள்ளது. இந்த பஸ் நிலைய கட்டிடத்துக்கு வர்ணப்பூச்சு செய்யும் பணியையும் நகர சபையே செய்து வருகின்றது. கூரை தகடு ஒன்றை மாற்றுவதற்குக் கூட அக்கறையில்லாது இருக்கும் டிப்போ எங்ஙனம் பஸ் தரிப்பிட வீதியை சீர்செய்யும்?
நகர சபையின் நிதி ஒதுக்கீடு
அட்டன் – டிக்கோயா நகரசபையின் செயலாளர் டி.வி.பி. பண்டார இது குறித்து கருத்துத்தெரிவிக்கையில், ‘ மக்கள் நலனில் அக்கறையிருந்தால் அதிகாரிகள் எந்த வகையிலாவது அவர்களுக்கு உதவலாம். தற்போதைய பஸ் நிலையம் மற்றும் வளாகத்தை கவனத்தில் கொண்ட நான், இது குறித்து ஆளுநரிடம் பேசினேன். ஏனென்றால் பயணிகளின் துன்பத்தை எவரும் கண்டு கொள்ளவில்லை.
அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்தது. இதன் படி மூன்று கட்டங்களாக நாம் இந்த சீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். பஸ் நிலைய வளாகத்தை சீர்படுத்துவதற்கு முதற்கட்டமாக 17,56046.34 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 1627432.85 ரூபாயும் மூன்றாம் கட்டமாக பஸ் நிலைய வடிகாண் திருத்தத்துக்கு 1522958.86 ரூபாவுமாக சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமது மாத வருமானம் இருபது இலட்சத்துக்கும் குறைவாகும். சபையில் பயன்படாமல் உள்ள நிதியை அனுமதி பெற்று இதற்கு ஒதுக்கியுள்ளோம். மட்டுமின்றி நகர எல்லைப்பகுதிகளில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான பதினொரு வேலைத்திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என்றார்.
மாதமொன்றுக்கு ஒன்பது கோடி ரூபாய் வருமானம் பெறும் அட்டன் டிப்போவானது நிதி பயன்பாடு தொடர்பில் எவ்வாறான திட்டமிடல்களை செய்து வருகின்றது என்பது ஆராய வேண்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் நோக்கமாக ‘பயணிளுக்கு சிறந்த போக்குவரத்து வழங்குநராக இருத்தல்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதன்படி அட்டன் டிப்போ செயற்படுகின்றதா என்பது சந்தேகமே. தரவுகளையும் தகவல்களையும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினாலும் இது குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதை இவ்வாறான அதிகாரிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதே கசப்பான உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM