இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

02 Oct, 2023 | 09:09 AM
image

ஆர்.பி.என்

* கனடாவின் மண்ணில் சீக்கிய பிரிவினைவாதமா?

* பின்லேடனை அமெரிக்கா பழிவாங்கவில்லையா?

* இஸ்ரேலின் "கடவுளின் கோபம்" எதிரிகளை எவ்வாறு பந்தாடியது?

இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் உருவாகியுள்ள பதற்றம் ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கனடாவில் உள்ள தெற்காசிய புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் இது பெரும் பேசு பொருளாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக கனடா, இந்தியா என அணிதிரண்டு சூடான வாதங்கள், பேச்சுக்கள் இடம் பெற்று வருகின்றன. மறுபுறம் இது இனங்களுக்கிடையே பிளவுகளையும் அரசியல் துருவப்படுத்தலையும் ஆழப்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இரு நாடுகளும் பரஸ்பரம் பயண எச்சரிக்கைகளை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வகையான பின்னணியில் கனடாவின் முக்கிய செய்தித்தாள்களில் ஒன்றாக விளங்கும் குளோப் அன்ட் மெயிலின் ஆசிரியர் குழு இந்த விடயத்தில் "முழு உண்மையை" பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. 

இந்தியாவும், கனடாவும் ஏட்டிக்குப் போட்டியாக தெரிவித்து வரும் கருத்துக்கள் இரு நாடுகளின் உறவிலும் பாரிய விரிசல்களை உருவாக்குவதற்கு அப்பால், இரு நாடுகளிலும் வாழும் மக்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலுக்கு வழிவகுத்துள்ளது. 

குறிப்பாக கனடாவில் வாழும் இந்தியர்கள் விசா சேவையை பெற்றுக் கொள்வதில் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.  மேலும், இந்த நெருக்கடி துரிதமாக தீருமா? இல்லையா?   என்பதில் உறுதியான முடிவை காண முடியாதிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள், தொழிவாய்ப்பைத்தேடி கனடா சென்றவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரே நேரடி பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளார்கள். 

இந்திய அரசின் கொள்கை அல்ல

இதன் தொடர்ச்சியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் நியூயோர்க்கில் கூறியிருக்கும் கருத்துக்கள் முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும். காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே "சாத்தியமான தொடர்பு" இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டு தொடர்பில்,   இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நியூயோர்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் உரையாடிய போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குக்கு பதிலளிக்கையில், 'இது இந்திய அரசின் கொள்கை அல்ல:' என்று கூறியதுடன் இது தொடர்பில் இந்தியா, ஒட்டாவாவிடம் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும்,"உங்களிடம் ஏதேனும் குறிப்பிடத்தக்க பொருத்தமான விடயங்கள் இருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் அதை திறந்த மனதுடன் பார்க்கத் தயாராக இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிஜ்ஜாரின் கொலை தொடர்பான விசாரணையில் கனடாவுடன், இந்தியா ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் வலியுறுத்தி உள்ள நிலையில் இந்திய   வெளியுறவு    அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன. 

கனடா எந்த விதமாகக் கூறினாலும், தமக்கு எந்த குறிப்பிட்ட ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவினைவாத சக்திகள், குற்றம், வன்முறை, தீவிரவாதம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதை கனடா உண்மையில் கண்டறிந்துள்ளது என்பதையும் பாராட்ட வேண்டும். அவர்கள் அனைவரும் மிக மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர்” என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தொடர்ந்து கருது தெரிவித்த அவர், கனடாவில் இருந்து செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற அமைப்புகளின் தலைமையைப் பற்றிய நிறைந்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். அவர்களை ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரியுள்ளோம் பயங்கரவாத தலைவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசியல் காரணங்களால் இது மிகவும் அனுமதிக்கப்படுகிறது என்பதே எங்கள் கவலை.  உண்மையில் எமது இராஜதந்திரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் எமது தூதரகங்கள் தாக்கப்படும் அபாயங்கள் உள்ளன. மற்றும் 'எங்கள் அரசியலில் அவர்களின் தலையீடுள்ளது' அத்துடன், ஜனநாயகங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன என்று கூறுவது போல் பல சமயங்களில் நியாயப்படுத்தப்படுகிறது,” என்றார்.

கனடாவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், ஜெய்சங்கர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் (UNGA) இம்மாதம் செப்டெம்பர் 26 ஆம் திகதி கருத்துகளை முன்வைத்திருந்தார்.  ஒரு வகையில் அது கனடா மீது ஒரு மறைமுக தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. "பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை தொடர்பில் ஒரு நாட்டின் நடவடிக்கையை தீர்மானிக்க "அரசியல் வசதியை" அனுமதிக்கக் கூடாது என்றும் ஜெய்சங்கர் கூறியிருந்தார். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கமாக கனடா விளங்குகிறது என்பதே இந்தியாவின் வெளிப்படையான குற்றச்சாட்டாகும்.

ஜி -7 நாடுகளை குறிவைக்கும் ஜெய்சங்கர்

ஒரு கட்டத்தில் ஜி -7 நாடுகளை குறிவைப்பது போன்றும்   ஜெய்சங்கரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.  அதாவது, “விதிகளை உருவாக்குபவர்கள் பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை என்பவற்றுக்கு மதிப்பளிப்பதுடன், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பது, குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் கூறினார். “கனேடிய மண்ணில் ஒரு கனேடிய பிரஜை கொலை செய்யப்பட்டமை வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு ஈடுபாடும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்" என்று ட்ரூடோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜெய்சங்கரின் கருத்துக்கள் பல்வேறு தரப்பினரதும் அதிக கவனத்தை ஈர்த்தது.  ஐ.நா தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜெய்சங்கர், காலத்துக்கு காலம் அனைத்து பேச்சுகளின்போதும் ஐ.நா. சாசனத்திற்கு கௌரவம் செலுத்தப்படுகிறது. எனினும், சில நாடுகள் நிகழ்ச்சி நிரலை தமக்கு ஏற்ற வகையில் வடிவமைக்க முயல்கின்றன மற்றும் விதிமுறைகளை வரையறுக்க முயல்கின்றன. இது காலவரையின்றி தொடராது தொடரவும் முடியாது.” என்றார். 

இவற்றுக்கு மத்தியில் இந்த தகவலை வழங்கிய நாடு எது என்ற கேள்விக்கு பல்வேறு தரப்பும் அமெரிக்காவை சுட்டிக்காட்டும் போக்கை காணலாம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதில் அமெரிக்கா பலத்த கில்லாடி என்பது தெரிந்த விடயமே.

ஐந்து கண்கள் வலையமைப்பு (The Five Eyes (FVEY) is an intelligence alliance comprising Australia, Canada, New Zealand, the United Kingdom, and the United States.)

"பைவ் ஐஸ் அலையன்ஸ்" ஐந்து கண்கள் அமைப்பு “FVEY” என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் மின்னணு தகவல்தொடர்புகளை கண்காணிக்கும் கூட்டு உளவுத்துறை வலையமைப்பு ஆகும்.  இந்த வலையமைப்பில்  

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடங்கும். 2013 ஆம் ஆண்டில் "ஐந்து கண்கள் அமைப்பு” சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. இதற்குப் பிரதான காரணம் அமெரிக்காவைச் சேர்ந்த எட்வர்ட் ஸ்னோவ்டென் 

என்பவர் அதன் செயல்பாடுகள் குறித்த இரகசிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டார்.

ஐந்து கண்கள் வலையமைப்பு என்பது 1946 ஆம் ஆண்டின் அமெரிக்க, பிரிட்டன் உடன்படிக்கையின் விளைவாகும். மற்றும் இது உலகின் மிகப் பழமையான உளவுத்துறை கட்டமைப்பாகும். கடந்த காலத்தில், பல்வேறு அரசியல் நலன்களுக்கு சேவை செய்து, பல நாடுகளுக்கு இடையே வெளிநாட்டு தொடர்புகளை கண்காணிக்க இது பயன்படுத்தப்பட்டது. இன்று, ஐந்து கண்கள்   உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்தொடர்புகளை கண்காணிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், ஐந்து கண்கள் அமைப்பு உறுப்பு நாடுகளின் குடிமக்களைக் கண்காணிக்கும் அதன் ஆரம்ப தொடக்கத்திலிருந்து சீராக முன்னேறி, ஒரு சர்வதேச உலகளாவிய கண்காணிப்புத் திட்டமாக வளர்ந்துள்ளது. முழு மக்கள் தொகையின் தரவையும் கண்காணிக்கும் திறன் கொண்டது.

செயற்கைக்கோள்கள், தொலைபேசி வலையமைப்புக்கள் மற்றும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் போன்ற உள்கட்டமைப்புகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள், தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்தொடர்புகளை இடைமறித்து ஐந்து கண்கள் தகவல்களைச் சேகரிக்கிறது. 

மைக்ரோசொப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக், பால் டாக், யூடியூப், ஏஓஎல், ஸ்கைப் மற்றும் அப்பிள் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பயனர் தரவுகளின் பதிவுகளையும் ஐந்து கண்கள்   பெறுகிறது. ஒவ்வொரு உறுப்பு நாட்டிலும் மூன்று முதல் ஐந்து அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மனித நுண்ணறிவு, பாதுகாப்பு நுண்ணறிவு, புவி நுண்ணறிவு மற்றும் சிக்னல் நுண்ணறிவு உள்ளிட்ட ஒன்று முதல் இரண்டு விடயங்களுக்கு ஒவ்வொரு நிறுவனமும் பொறுப்பாகும்.

ஐந்து கண்கள் வலையமைப்பின் தோற்றம் மற்றும் வரலாறு

ஐந்து கண்கள் வலையமைப்பு 1941 ஆம் ஆண்டு அட்லாண்டிக் சாசனத்தின் விளைவாக உருவானது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகத்திற்கான நேச நாட்டு இலக்குகளை வகுத்தது. 1943 ஆம் ஆண்டில், அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகியன ஒரு கூட்டு உளவுத்துறை ஒப்பந்தத்தை உருவாக்கின. பின்னர் கனடா, நோர்வே, டென்மார்க், மேற்கு ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை குறைந்த ஈடுபாடு கொண்ட மூன்றாம் தரப்பினராக தற்காலிகமாக சேர்க்கப்பட்டன. 

1955 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வரிசையில் அதன் தற்போதைய, இறுக்கமான பிணைக்கப்பட்ட ஐந்து கண்கள் கொண்ட நாடுகளாக உருவானது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் 1950 களில்,

பனிப்போர் உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்டன மற்றும் சோவியத் யூனியன், சீன மக்கள் குடியரசு மற்றும் கிழக்குத் தொகுதி நாடுகளின் தகவல்தொடர்புகளை கண்காணித்தது. ஐந்து கண்களின் நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.

வியட்நாம் போர், போலந்து போர், வளைகுடா போர், ஈரான் பிரதமர் முகமது மொசாடெக் பதவி கவிழ்ப்பு, பாட்ரிஸ் லுமும்பாவின் படுகொலை,சிலி ஜனாதிபதி சால்வடார் அலெண்டே பதவியில் இருந்து அகற்றப்பட்டது, தியனன்மென் சதுக்க போராட்டத்தின் போது சீன எதிர்ப்பாளர்களுக்கு உதவுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பவை குறிப்பிடத்தக்கவை.  

ஐந்து கண்கள் வலையமைப்பின் செயல்பாடு பற்றி ஓரளவு மக்கள் அறிந்திருந்த போதிலும், தரவு சேகரிப்பின் முழு அளவைப் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை மற்றும் புதிய வெளிப்பாடுகள் பொதுமக்களின் தனியுரிமை அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உணரவைத்தன. எனினும், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக தங்கள் கண்காணிப்பின் அவசியத்தை பராமரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டில், பிரிட்டனில் புலனாய்வு அதிகாரங்களை சட்டம் வரையறுத்தது. இது பிரித்தானிய உளவுத்துறை சமூகத்தின் மின்னணு கண்காணிப்பு சட்ட வரம்புகளை விரிவுப்படுத்தியது. 

ஐந்து கண்கள் வலையமைப்பினால் குறிவைக்கப்படும் நிறுவனங்கள்

ஐந்து கண்கள் கூட்டணியால் குறிவைக்கப்படும் தனிநபர்கள், அமைப்புகள் வேறுபட்டவை. இந்த பட்டியலில் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தொலைத்தொடர்பு இயக்குனர்கள், செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அடங்கும். 

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, குழந்தைகள் நிதியம், மேம்பாட்டுத் திட்டம், சர்வதேச அணுசக்தி நிறுவனம், கூகுள், யாகூ, கடன் அட்டை, விசா அட்டை, விமான சேவை, ரஷியன் ஏர்லைன்ஸ், அல் ஜசீரா (ஊடகக் குழு) உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்புக்கான சமூகம் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம், ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் என்பவையும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கனடாவின் மண்ணில் சீக்கிய பிரிவினைவாதம்   

"ஐந்து கண்கள்" வலையமைப்பால் பெறப்பட்ட உளவுத்துறை தகவல், கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளரின் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று கனடாவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது என கனடாவுக்கான அமெரிக்க தூதர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளமை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் ஒன்றில் ஐந்து கண்கள் வலையமைப்பு நேச நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத்துறை தகவலில், இவ்விவகாரம் இருந்தமை, கனடாவை பிரதமர் அறிக்கையிட வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த பகிரப்பட்ட உளவுத்துறை அமெரிக்காவிலிருந்து வந்ததா? என்பது குறித்து தெளிவில்லை. முகமூடி அணிந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாத ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் புதுடெல்லி இருக்கக்கூடும் என்று "நம்பகமான குற்றச்சாட்டுகளை" அதிகாரிகள் விசாரித்து வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்தே இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் கடந்த வாரம் சீர் குலைத்தன.

இந்தியா இந்த கூற்றுகளை கடுமையாக மறுத்துள்ளது அவற்றை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக "கனடா குறிப்பிட்ட தகவல் எதுவும் இல்லை" என்றார்.

இரு நாடுகளும் மூத்த இராஜதந்திரிகளை பரஸ்பர நடவடிக்கைகளில் வெளியேற்றியுள்ளன. இது அமெரிக்காவின் முக்கிய பங்காளிகளுக்கு இடையே மோசமான பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பை உயர்த்தியுள்ளது. கடந்த வாரம் கனேடிய குடிமக்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியபோது, கனடாவில் இராஜதந்திரிகளுக்கு எதிரான "பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்" என்று கூறியது தொடர்பாக சர்ச்சை மேலும் அதிகரித்தது. 

கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன் தொடர்ந்து கூறுகையில், குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா தனது கவலையை தெரிவித்ததாகவும், அதன் விசாரணையில் கனடாவுடன் ஒத்துழைக்குமாறு புதுடில்லியை கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும், "அவை உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அது சர்வதேச ஒழுங்கு விதிகளை மிகக் கடுமையாக மீறவதாக அமையும்" என்றும் தூதர் தெரிவித்துள்ளார்.  

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர், சிபிசிக்கு அளித்த பேட்டியில், இந்து கண்கள் உறவு "முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும், கனடாவிடம் "மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த உளவுத்துறை உள்ளது என்றும் கூறியதுடன், இது நம்மை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்குகிறது" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தகவலின் ஆதாரங்களை கூற மறுத்துவிட்டார்.

இந்திய அரசாங்கத்தை நாங்கள் அழைக்கிறோம் 

ஐக்கிய நாடுகள் சபையின் கனடா மிஷன் கடந்த வியாழனன்று பிரதமர் ட்ரூடோ பேசுகையில், இந்தியா "முழு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். “எங்களுடன் இணைந்து பணியாற்ற இந்திய அரசாங்கத்தை நாங்கள் அழைக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கும், நீதி அதன் போக்கைப் பின்பற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்”என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு தனி சீக்கிய தாயகத்தை உருவாக்கும் நோக்கில், சீக்கிய பிரிவினைவாத தீவிரவாதத்தை கையாள்வதில் கனடா செயலற்று இருப்பதாக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. படுகொலை செய்யப்பட்ட நிஜ்ஜார் காலிஸ்தானின் உருவாக்கத்திற்கு வெளிப்படையான ஆதரவாளராக இருந்தார். காலிஸ்தானுக்கான அழைப்பை இந்தியா தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்திய தேசிய புலனாய்வு துறை அவர் "காலிஸ்தான் உருவாக்கத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமூகத்தை தீவிரமயமாக்க முயற்சிப்பதாக" குற்றம் சாட்டியது.

வெளிநாடுகளில் உள்ள பல சீக்கிய அமைப்புகள் இந்திய அரசாங்கம்  காலிஸ்தான் அமைப்பை  பயங்கரவாதத்துடன் ஒப்பிடுவதாகக் கூறுகின்றன. மேலும், காலிஸ்தானின் உருவாக்கத்திற்காக அமைதியான முறையில் தொடர்ந்து வாதிடுவோம் என்று கூறுகின்றன. 

பிற நாடுகளில் தமது எதிரிகளை வேட்டையாடிய நாடுகள் 

பிற நாடுகளில் தமது எதிரிகளை வேட்டையாடிய நாடுகளையும், அவை எவ்வாறு சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பிழைத்தன என்பதையும் பார்ப்போம்.  அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல நாடுகள் கடந்த காலங்களில் மற்ற நாடுகளில் ‘குறிவைத்து கொலை செய்யும்‘ நிகழ்வுகளை அரங்கேற்றி அவற்றை நேரடியாகவும் ஏற்றுக் கொண்டும்  இருக்கின்றன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக நேரடியான கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை.

கடவுளின் கோபம் 

1972 இல் மியூனிக் ஒலிம்பிக்கில் பாலஸ்தீனிய போராளிகளால் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்க இஸ்ரேலால் நடத்தப்பட்ட இரகசிய படுகொலை  தான் ஆபரேஷன்  வெரத் ஆஃப் காட்  (கடவுளின்  கோபம் ) “Wrath of God” எனப்படுவதாகும். 

இஸ்ரேல் வரலாற்று ரீதியாக ஃபத்தா, பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி எல் ஓ), பாலஸ்தீன விடுதலைக்கான முன்னணி அமைப்புகளின் தலைவர்களை குறி வைத்திருந்தாலும், இஸ்ரேலின் இத்தகைய படுகொலைகளின் அதிர்வெண் உலகில் வியத்தகு முறையில் அமைந்தது. 

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான் தலைமையிலான ஒரு இரகசிய இஸ்ரேலியக் குழு, "  'பிளாக் செப்டெம்பர்" என்று வர்ணிக்கப்பட்ட முனிச் கொலைகளை திட்டமிட்டு நடத்திய ஃபத்தாவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவரையும் படுகொலை செய்ய அங்கீகரித்ததாகக் கூறப்படுகிறது.  

கோட் ஆஃப் காட் ஹிட் ஸ்குவாட் என்ற குறியீட்டு பெயரைக் கொண்ட அமைப்பு இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனமான மொசாட்டின் உறுப்பினர்களால் உருவானது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) சிறப்பு நடவடிக்கைக் குழுக்களால் ஆதரிக்கப்பட்டது. இந்த குழு பல ஆண்டுகளாக முனிச் படுகொலையில் திட்டமிட்டு அல்லது பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டறிந்து கொன்றது.

இஸ்ரேல் விளையாட்டு வீரர்களைக் கொன்ற எட்டு பாலஸ்தீனிய போராளிகள், மேற்கு ஜேர்மன் அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் இருந்த சமயம், கடத்தப்பட்ட லுஃப்தான்சா ஜெட் விமானத்தின் குழுவினருக்கு ஈடாக பணயக் கைதிகளை பரிமாற்றம் செய்த  முயற்சியின் போது  மூவர் விடுதலை செய்யப்பட்டனர். அதேவேளை மேலும் ஐவர்   பணயக் கைதிகளை பரிமாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்த போது பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகினர்.

1972 ஆம் ஆண்டு அக்டோபரில் பி.எல்.ஓ அமைப்பாளரும் யாசர் அராஃபத்தின் உறவினருமான வேல் ஸ்வைட்டரை தாக்கி வெரத் ஆஃப் காட் குழு முதலில் கொன்றது. அவரது ரோம் அடுக்குமாடி கட்டிடத்தின் லாபியில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்ததாக பாரிஸில் உள்ள பி.எல்.ஓ  பிரதிநிதியான மஹ்மூத் ஹம்ஷாரி இலக்கு வைக்கப்பட்டார்.

1972 டிசெம்பரில் இத்தாலிய பத்திரிகையாளர் போன்று, ஹம்ஷாரியுடன் ஒரு தொலைபேசி நேர்காணலை   வெரத் ஆஃப் காட் உறுப்பினர் திட்டமிட்டார்.  பின்னர், அவரது வீட்டிற்குள் நுழைந்து வெரத் ஆஃப் காட் வெடிமருந்து நிபுணர்கள் அவரது தொலைபேசியில் வெடிகுண்டைப் பொருத்தினர். நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் ஹம்ஷாரி அழைக்கப்பட்டார். அவர் தொலைபேசி அழைப்பை பெற்ற சமயம்  வெடிகுண்டு தொலைவில் இருந்து ரிமோர்ட் மூலம் இயக்கப்பட்டது.  அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

சந்தேக நபர்களான பசில் அல்-குபைசி, ஹுசைன் அபாத் அல்-சிர், ஜைத் முச்சாசி மற்றும் முகமது பௌடியா ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கொல்லப்பட்டனர்.  1973 இல் இஸ்ரேலிய பரசூட் குழு, பாலஸ்தீன விடுதலைக்கான முன்னணி அமைப்பின் ( PFLP )

தலைமையகத்தை தாக்கியது. இதன்போது, முஹம்மது யூசுப் அல்-நஜ்ஜார், கமல் அத்வான் மற்றும் கமல் நாசர் ஆகியா முக்கியஸ்தர்களை குறிவைத்து, இறுதியில் அவர்கள் மூவரையும் கொன்றது.

பின்னர் 1973 ஆம் ஆண்டில், வெரத் ஆஃப் காட் குழு நோர்வேயில் அதன் இலக்குகளில் ஒன்றை தவறாக அடையாளம் கண்டு, நோர்வேயின் லில்லி ஹாமரில் ஒரு அப்பாவி நபரை தவறாகக் கொன்றது. நோர்வே அதிகாரிகள் ஐந்து மொசாட் செயல்பாட்டாளர்களைக் கைது செய்து தண்டனைக்கு வழிவகுத்தது. அத்துடன், ஐரோப்பா முழுவதும் மொசாட்டின் விரிவான முகவர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை கண்டறிய வழிவகுத்தது. இதனால் சர்வதேச அழுத்தத்துக்குப் பதிலளிக்க வேண்டிய நிலை மொசாட்டுக்கு உருவானது. அதேவேளை, 1972 இல் மியூனிக் ஒலிம்பிக்கில் படுகொலை செய்யப்பட்ட 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் இஸ்ரேலின் மொசாட் குழுவால் பழி வாங்கப்பட்டனர்.  

பின்லேடனும் அல் கொய்தாவும்    

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அன்று, கிழக்கு அமெரிக்காவில் நான்கு விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்கள் மூன்று விமானங்களை நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மற்றும் வேர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள பென்டகன் கட்டிடங்களில் மோதி பாரிய சேதத்தை உண்டுபண்ணினர். நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வயல்வெளியில் விபத்துக்குள்ளானாது. இந்த கொடூரமான தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

9/11 தாக்குதல்கள் பின்லேடனின் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டது என்பதை அமெரிக்க உளவுப்படையான FBI அறிந்து கொண்டது. நான்கு விமானங்களை கடத்தி விபத்துக்குள்ளாக்கிய 19 பேரும் அல் கொய்தாவினால் பயிற்சி பெற்றவர்கள், மேலும் பின்லேடன் இறுதியில் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் தனது பங்கை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து நடந்த 9/11 விசாரணை அதன் வரலாற்றில் மிகப் பெரியமைல் கல்லாக அமைந்தது. 

இந்தத் தாக்குதல்கள் FBI யில் தொலைநோக்கு மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதை அதன்பட்டியலில் முதன்மையாக்கியது. 2001 

ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அன்று, புதிதாகத் தொடங்கப்பட்ட மிகவும் "வேண்டப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் "ஒசாமா பின்லேடன் சேர்க்கப்பட்டார். 

அமெரிக்காவும் பிற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் அவரையும் ஏனைய அல்கொய்தா பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க இராணுவ நடவடிக்கைகளில் இணைந்தன. ஆனால் பின்லேடன் அவர்களின் பிடியிலிருந்து தப்பித்தார். 

ஆகஸ்ட் 2010 இல், ஒசாமா பின்லேடன் வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு வளாகத்தில் வசிப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிட்டியது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2

ஆம் திகதி அன்று, ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவின் பேரில், சிறப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

பின்லேடன் எவ்வாறு பிடிக்கப்பட்டார் 

இஸ்லாமிய போராளிக் குழுவான அல்-கொய்தாவின் நிறுவனரும் முதல் தலைவருமான ஒசாமா பின்லேடன், 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தானிய நகரமான அபோதாபாத்தில் உள்ள அவரது வளாகத்தில் "சீல் டீம் சிக்ஸ்" எனப்படும்  அமெரிக்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

"ஒபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, சிஐஏ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. சீல் டீம் சிக்ஸ்க்கு கூடுதலாக, "நைட் ஸ்டாக்கர்ஸ்" என்று அழைக்கப்படும் அமெரிக்க 160வது சிறப்பு செயற்பாட்டு ஏவியேஷன் ரெஜிமென்டின் உதவியும் பெறப்பட்டது.

இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களில் 24 கடற்படை சீல்களை உள்ளடக்கிய இந்த விசேட நடவடிக்கை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அங்கீகரிக்கப்பட்டது. அதேவேளை, சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை முழுமை பெற 40 நிமிடங்கள் எடுத்தன. சம்பவத்தினம் 1 மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் மகன் ஒருவர் உட்பட மூன்று ஆண்களும், வளாகத்தில் இருந்த ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கப் படைகள் பின்லேடனின் உடலை அடையாளம் காண்பதற்காக ஆப்கானிஸ்தானுக்குத் கொண்டு சென்றன. 

பின்னர் 850 மைல்கள் (1,370 கிமீ) பறந்து அரபிக் கடலுக்கு சென்று அங்கு அவர் இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார். இதனை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் குழுவினர் அமெரிக்காவில் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தனர். 

கொலைக்குப் பின்னர், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராசா கிலானி, சிரேஷ்ட நீதிபதி ஜாவேத் இக்பால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, தாக்குதலின் சூழ்நிலைகளை விசாரித்தார். இதன் விளைவாக அபோதாபாத் கமிஷன் அறிக்கை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் "கூட்டு தோல்வியை" வெளிப்படுத்தியது. இது பின்லேடன் ஒன்பது ஆண்டுகளாக பாகிஸ்தானில் மறைந்து வாழ வழிவகுத்தது எனலாம். 

ஊடகவியலாளர் ஜமால் காசோகி படுகொலை 

அதேபோன்று ஈராக் அணுஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றும் கூறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா இறுதியாக சதாம் ஹுசைனையும் கொன்றது. சவூதி அரேபியாவும் தனது எதிரிகளை பழி தீர்க்கும் விடயத்தில் தனது மறைமுக செயல்பாட்டை மேற்கொண்டதை மறுப்பதற்கில்லை. சவூதி அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அமெரிக்காவுக்கு தகவல்களை பரிமாறியதாக குற்றம்சாட்டி ஊடகவியலாளர் ஜமால் காசோகி, துருக்கி தலைநகர் இஸ்தாம்புலில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார். இந்த கொலைக்கு சவூதி மன்னர் மீது குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் பின்னர் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. 

இந்திய உளவு பிரிவு 

'ரோ' என்று சுருக்கமாக அழைக்கப்படுவது (Research and Analysis Wing) (R&AW) (இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஆகும். இதன் முதன்மை செயல்பாடு வெளிநாட்டு உளவுத்துறை, பயங்கரவாத எதிர்ப்பு, கண்காணிப்பு, இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு மூலோபாய நலன்களை முன்னேற்றுதல் ஆகியவை ஆகும். இது இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளது.'ரோ' அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது.

அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்சனைகள்? அவற்றின் பின்னனி என்ன? அரசியல் என்ன? எதிரி நாடுகளின் இராணுவ ரகசியங்கள் என்ன?  பயிற்சிகள் என்னென்ன? எப்படித் திட்டமிடுகிறார்கள் என அனைத்தையும் இதுவே வியூகம் வகுக்கும்.

இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு தொடங்குவதற்கு முன்பு, வெளிநாட்டு உளவுத்துறை சேகரிப்பு முதன்மையாக உளவுத்துறை பணியகம் (IB) பொறுப்பாக இருந்தது. இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

1933 ஆம் ஆண்டின், இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த உலகின் அரசியல் கொந்தளிப்பை உணர்ந்து. இந்தியாவின் எல்லைகளில் உளவுத் தகவல்களை சேகரிப்பது உட்பட உளவுத்துறை பணியகத்தின் பொறுப்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டன.1947 இல், சுதந்திரத்திற்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் வெளியேறியதால் பயிற்சி பெற்ற மனித வளம் தேவைப்பட்டது. மேலும்1962 சீன - இந்தியப் போரின் போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, வெளிநாட்டு உளவு சேவைக்கப்பால் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு பிரத்யேக உளவுத்துறையை நிறுவ உத்தரவிட்டார்.

1965 இல் இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் அது மேலும் வளர்ச்சியுற்று,1966 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தனித்துவமிக்க உளவு நிறுவனம் என்ற கருத்துடன்  உறுதியான வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. இன்று உலகில் குறிப்பிடத்தக்க   உளவுத்துறை நிறுவனங்களில் இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான 'ரோ' முக்கிய இடத்தில் உள்ளது. 

இராணுவ உறவுகளை பாதிக்கவில்லை

இதேவேளை, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை "பாதிக்கவில்லை" என்று கனடாவின் உயர்மட்ட ஜெனரல் செவ்வாயன்று புதுடில்லியில் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டில்லியில் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்தோ-பசிபிக் இராணுவத் தலைவர்களின் மாநாட்டின் ஓரங்கமாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட 

கனேடிய இராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் "இது அரசியல் மட்டத்தில் எமது இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் சுதந்திரமான விசாரணைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும் அவர் கூறினார்.

"ஆனால் எங்கள் இரு படைகளுக்கும் இடையே, இவ் விவகாரம் எங்களைப் பாதிக்கவில்லை" என்று ஸ்காட் கூறினார். இந்தியாவின் இராணுவத் தளபதியிடம் பேசினேன்.  "இது ஒரு அரசியல் பிரச்சினை என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். மேலும், இந்த மாநாட்டில் தற்போது பங்கேற்கும் மற்ற 30 நாடுகளில் நாங்கள் ஒத்துழைக்கக் கூடிய, பயிற்சி அளிக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறியும் வாய்ப்புகளைத் தேடும் போது, எங்கள் உறவில் எந்தத் தலையீடும் இல்லை. ஒன்றாக மற்றும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதன் மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நாம் அனைவரும் பங்களிக்க முடியும்." என்றார்.

ஒரு நாட்டின் இராணுவம் அரசியலில் தனது மூக்கை நுழைக்காதவரை அந்த நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப் படமாட்டாது என்பதே யதார்த்தம். அதனையே இங்கு இரு இராணுவ தளபதி களினதும் கூற்றுகள் எடுத்து விளக்குகின்றன. எவ்வாறு பார்த்தாலும் குறித்து இரு நாடுகளினதும்   இழுபறி நிலை கூடுமானவரை விரைவாக முடிவுக்கு வர வேண்டியது அவசியம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54