பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

Published By: Vishnu

01 Oct, 2023 | 07:13 PM
image

ஆர்.ராம்

  • “பயங்கரவாதத்தை எதிர்ப்பதை இலக்காகக் கொண்டு அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை பறித்தெடுக்கும் வகையில் பயங்கரமான முன்மொழிவுகள்”

பயங்கரவாதச் செயல்களிலிருந்தும், இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்பட்டவையும் பயங்கரவாதத்துடன் இணைந்தவையுமான வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் பயங்கரவாதம் என்ற தவறாகவமைகின்ற குறித்தசில குறித்துரைக்கப்பட்ட செயல்களிலிருந்தும் இலங்கையின் தேசியப் பந்தோபஸ்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்காக ஆயத்தஞ்செய்வதற்கு இலங்கை ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும்; பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறேதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளைக் கண்டுபிடிப்பதற்காகவும், அடையாளங்காண்பதற்காகவும், பற்றுவதற்காகவும், கைது செய்வதற்காகவும், தடுத்து வைப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும், அவருக்கெதிராகக் குற்றவழக்குத் தொடுப்பதற்காகவும் மற்றும் அவரைத் தண்டிப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானவொருமாக திருத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்  நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த 15ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

1979ஆண்டு  ஜுலை 19ஆம் திகதி தற்காலிக சட்டமாக  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் 1982ஆம் ஆண்டில் 10ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு நான்கு தசாப்தங்;கள் முடிவடைந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இந்த சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு  வாக்குறுதி வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தாமல் 44ஆண்டுகளாக இன்னமும் நடைமுறையிலுள்ளது. 

சட்டமொன்று அமுலில் உள்ளமையானது பொதுப்படையான விடயமாக இருந்தாலும், அந்தச் சட்டத்தினை பயன்படுத்தி ஆரம்பத்தில் தமிழர்களையும், அதன்பின்னர் முஸ்லிம்களையும் தற்போது சிங்கள மக்களின் முற்போக்கு குரல்களையும் பதம்பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அதற்குப் பிரதியீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதற்கான முனைப்புக்கள் கையிலெடுக்கப்பட்டுள்ளன. தற்போது மூன்றாவது தடவையாக உத்தேச சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ள போதும், எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. இதனை மனித உரிமைகள் பற்றிய துறைசார்ந்த சட்டத்தரணிகளான அம்பிகா சற்குணநாதன் மற்றும் பவானி பொன்சேகா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளர்களில் ஒருவரும்  மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில்

“முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, நடைமுறையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் மோசமான தன்மைகளையே வெளிப்படுத்துகின்றது.

குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதிகாரங்களை மேலும் வழங்குவதோடு, கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், உள்ளிட்டவற்றுக்கு முற்றாக எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

அதுமட்டுமன்றி, கைது செய்யப்படுகின்ற பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரச படைகளுக்கு கைது செய்தல், தடுத்து வைத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்கி அரச படைகளின் ஊடாக அடக்குமுறையை பிரயோகிப்பதற்கான ஏதுநிலமைகளையும் இன்னமும் கொண்டிருக்கின்றது. 

முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில், ஓரளவு முன்னேற்றகரமான விடயங்களாக இருப்பவையாக, பயங்கரவாத குற்றங்களை இழைப்பவர்களுக்கு மரணதண்டனை குறித்துரைக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அவரை இடமாற்றம் வேண்டும் என்ற உள்ளடக்கம் தற்போது நீதிவான் நீதிமன்ற நீதிபதி சித்திரவதை நடைபெறுகின்றது என்ற சந்தேகத்தை கொள்கின்றபோது தடுத்து வைத்திருக்கும் இடத்தை மாற்றுதவதறகான உத்தரவை பிறப்பிக்க முடியும் என்ற சந்தேகத்தைக் கொள்கின்றபோது மாற்றம் அடைந்திருக்கின்றது.

தடுப்பாணையை  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் வெளியிட முடியும் என்று காணப்பட்ட அதிகார உள்ளடக்கம் தற்போது பொலிஸ் மா அதிபர் அல்லது அவருடைய சார்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியைக் கோரவேண்டுமென மாற்றப்பட்டிருக்கின்றது.

பிரிவு 85இன் பிரகாரம் ஒரு இடத்தினை தடைசெய்யப்பட்ட இடமென பிரகடனம் செய்யப்படுமாயின் அதற்கு காலவரையறையானது ஆரம்பத்தில் இல்லாதபோதும் தற்போது முதலில் 7நாட்களுக்கும் அதற்கு அப்பால் நீடிப்பதற்கு நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெறவேண்டியுள்ளது.

அதேநேரம், இச்சட்ட மூலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்படும் ஆளொருவர் மீதான வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற விடயம் நீக்கப்பட்டுள்ளதோடு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஒருவருடத்திற்;குள் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படாது விட்டால் பிணையில் செல்வதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட காலத்திற்கு வழக்கு விசாரணைகள் நீடிக்கும் நிலைமைகள் ஏற்படுகின்றது. 

இதனைவிடவும், பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றபோது, அவரது சட்டத்தரணி அவரை நேரில் பார்வையிடுவதற்கும், இரகசியமான தகவல்களை பரிமாற்றுவதற்குமாக காணப்பட்ட நிலைமைகள் உத்தேச முன்மொழிவில் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, சட்டத்தரணியொருவர் நேரில் பார்வையிடுவது ஒழுங்குபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஒழுங்குவிதிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரேயே அறிவிக்கப்படும் என்பதால் அதன் உள்ளீடுகள் பற்றிய கேள்விகள் எழுவதோடு அந்தரங்கத் தகவல் பரிமாற்றத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் என்ற நிலைமைகளும் உள்ளன.

தற்போது காணப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் 19,20,21ஆம் சரத்துக்களில் குறிப்பிட்டுள்ளவாறாக பொலிஸாருக்கு காணப்படுகின்ற அதிகாரங்கள் அரச படைகளுக்கு (இராணுவம் உள்ளிட்ட) அதிகாரங்களை வழங்குவதாக அவ்வாறே பேணப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அரச படைகள் பிரஜைகளை கைது செய்வதற்கும், விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்குமான அதிகாரங்களைக் கொண்டுள்ளமையானது தொடர்ந்தும் அரச படைகளின் ஊடாக அதிகாரங்களை பிரயோகிப்பதற்கான நிலைமையை வெளிப்படுத்தியுள்ளது” என்று தனது கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளார். 

மாற்றுக்கொள்கை நிலையத்தினுடைய சிரேஷ்ட ஆய்வாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான பவானி பொன்சேகா தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளமையால் அது, அடிப்படை உரிமைகள், பிரஜைகளின் சுதந்திரங்களில் எவ்விதமான தாக்கங்களை செலுத்தியுள்ளது, நிறைவேற்று அதிகாரம் எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை நேரயாக உணரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திலும் அவ்விதமான நிலைமைகளில் எவ்விதமான மாற்றங்களையும் காண முடிந்திருக்கவில்லை. 

மாறாக, வெளிப்படைத் தன்மையின்றி தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு வருகின்றபோது, கடந்தகாலத்தினை விடவும், நிறைவேற்று அதிகாரத்திற்கு அதிகாரங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு மோசமான நிலைமைகள் ஏற்படுவதற்கான சூழல்களே உருவாகியுள்ளன.

திருத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் பயங்கரவாதக் குற்றம் என்பதற்கான வரையறைகள், நீண்ட விளக்கமறியல் காலம் உட்பட எந்தக் குற்றச்சாட்டும் இன்றி நீண்டகாலமாக காவலில் வைக்க அங்கீகாரம் வழங்குதல், நீதித்துறை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரங்கள் போன்ற சிக்கலான உள்ளடக்கங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன.

திருத்தப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் தண்டனையின் ஒரு வடிவமாக மரண தண்டனையை நீக்கப்பட்டமை தடுப்பு உத்தரவு தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டமை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம். இரண்டு மாதங்களுக்குத் தடுப்பு உத்தரவை வழங்குவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்பதை மிகைப்படுத்துதல் பயங்கரவாதத்துக்கான குற்றங்களை மிகைப்படுத்துதல் போன்ற சிக்கலான விடயங்கள் தொடர்ந்தும் நீடிப்பதோடு, குற்றச்சாட்டுகளை சுமத்தாமலே நீண்டகாலத்திற்கு தடுப்பில் வைத்தல், விளக்கமறியலை நீடித்தல் போன்றன நிலைமைகளும் காணப்படுகின்றன. 

நீதித்துறை மற்றும் மனித உரிமைகளுக்குத்தீங்கு விளைவிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போதுள்ள இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் விதத்திலும் அரச படைகளுக்கு அதிகாரங்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, அரச படைகள் கைது செய்வதற்கும், தடுப்பில் வைத்துக்கொள்வதற்குமான சட்ட அங்கீகாரங்களையும் பெற்றுக்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது.

 அரகலய போன்ற மக்கள் புரட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் ஆட்சி முறைமை மாற்றம் போன்றவற்றுக்கான கோரிக்கைகள் அதிகமாக முன்னிறுத்தப்பட்டுள்ள போதிலும், அமைப்புகளைத் தடைசெய்வதற்கான ஏற்பாடுகள், கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் ஆகியவற்றை வெளியிடுவதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக கைதிகள் தடுத்து வைக்கப்படுதல், சிறைகளிலும், தடுப்புக்களிலும் சித்திரவதைகள், மரணங்கள் நிகழ்தல் மற்றும் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் கலாசாரம் ஆகியன தொடர்ச்சியாக நாட்டில் காணப்படுகின்ற நிலையில் உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முழுமையாக மீறப் பெறுவதே பொருத்தமான செயற்படாக இருக்க முடியும். அத்துடன் புதிய சட்டம் பற்றிய பரந்துபட்ட கலந்துரையாடல்களும் அவசியமாகின்றன” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54