கார்வண்ணன்
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு கனடாவில் தஞ்சமடைந்திருப்பது, அரசாங்கத்தைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.
இவரது இந்த முடிவு, நீதித்துறை சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்தியிருப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவாதச் செயற்பாடு அரசாங்கத்தினால் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதையும் சர்வதேச அரங்கில் வெளிக்காட்டியிருக்கிறது. தண்டனையில் இருந்து தப்பித்தல், மற்றும் நீதித்துறை சுதந்திரம் மீதான அரசியல் தலையீடுகள் குறித்து அதிர்ச்சியுடன் இலங்கையை பார்க்கும் நிலையை சனல் 4 ஆவணப்படம் ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்கு முன்னரே, நீதித்துறை சுதந்திரத்துக்கு, குறிப்பாக தமிழ் நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு, ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தலை வெளிப் படுத்தியிருக்கிறது. முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல்.
அவர் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை கொண்ட பாராளுமன்றமும், அதே சிந்தனை வழி வந்த அரச நீதித்துறைக் கட்டமைப்பும் தான்.
ஏற்கெனவே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனும், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், அரசியல் தலையீடுகளினால் விடுதலை செய்யப்பட்டார் என அசாத் மெளலானா தெரிவித்திருந்தார்.
இந்த விடுதலை விவகாரத்தில் நீதித்துறை மீதான அரசியல் தலையீடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் ஓய்வதற்கு முன்னரே, முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் இடம்பெற்றிருக்கிறது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியான அவர், தொல்பொருள் சட்டங்களுக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்வதற்கு தடைவிதித்திருந்தார்.
அவரது அந்த உத்தரவை மீறி பௌத்த பிக்குகளும், இராணுவத்தினரும், பொலிஸாரின் உதவியுடன், விகாரைக் கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தனர்.
அந்தக் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிவுக் கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் தான், அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், நீதிபதி சரவணராஜா அங்கு ஆய்வு செய்யச் சென்ற போது, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அங்கு சென்று, விசாரணைகளில் தலையிட முயன்றார். ஆனால் நீதிபதி சரவணராஜா அதனை அனுமதிக்கவில்லை. இது நீதிமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஆய்வு மட்டுமே என்று கூறி அவரை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
இதனை அடுத்து பாராளுமன்றத்தில் இனவாதத்தைக் கக்கி , அச்சுறுத்தல் விடுத்தார் சரத் வீரசேகர.
சிங்கள பௌத்தனான தன்னை ஒரு தமிழ் நீதிபதி எப்படி வெளியேற்றலாம், தடுத்து நிறுத்தலாம் என்றெல்லாம் அவர் பேரினவாத திமிரை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றியிருந்தார்.
தமிழ் நீதிபதிகள் பக்கசார்புடன் செயற்படுகின்றனர் என்றும் அவர் விமர்சித்திருந்தார். அவருக்குப் பக்கப் பாட்டுப் பாடி, தமிழ் நீதிபதிகளை ஏனைய இனத்துவேசம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு எச்சரித்திருந்தனர்.
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து- நீதிபதி நாட்டை விட்டு வெளியேறவில்லை. பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அச்சுறுத்தப்பட்டு இரண்டரை மாதங்களுக்குப் பின்னரே அவர் நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட பகிரங்க அச்சுறுத்தல்களால் பயந்து போயிருந்த நீதிபதி சரவணராஜா கடந்த 21ஆம் திகதி உயர்மட்டத்தினரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அதன்போது, நீதிபதி சரவணராஜா குருந்தூர்மலை விகாரை கட்டுமானத்துக்கு தடைவிதித்து பிறப்பித்த கட்டளை உள்ளிட்ட பல உத்தரவுகளை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தாரென செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி விட்டு கனடாவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.
இலங்கையில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறி ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
பொதுமக்கள், போராளிகள், மாத்திரமன்றி, படையினரும், பொலிஸாரும் கூட அவ்வாறு வெளியேறிச் சென்றிருக்கிறார்கள்.
இப்போது தான், நீதிபதி ஒருவர் உயிருக்கு அச்சுறுத்தல், அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறி, வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்த விவகாரம் உள்நாட்டிலும் சரி, சர்வதேச அரங்கிலும் சரி. சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், இந்த அச்சுறுத்தலும் அழுத்தங்களும் பாரதூரமானது. பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், நீதிபதி ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, கனடாவில் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம், நீதிபதிகளுக்குக் கூட பாதுகாப்பில்லாத நாடு என்ற பிரச்சினை மேல் எழுந்திருக்கிறது.
தமிழ் நீதிபதி ஒருவர் இவ்வாறான நிலையை எதிர்கொண்டிருக்கிறார் என்பது, இலங்கையில் இனவாதம், பேரினவாதம் எந்தளவுக்கு அச்சுறுத்தலுக்கு உரியதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
இவையெல்லாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மாத்திரமன்றி, அமெரிக்கா போன்ற நாடுகளின் முடிவுகளிலும் தாக்கம் செலுத்தப் போகின்ற விடயமாக இருக்கப் போகிறது.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விடயம், பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருப்பது பற்றியதாகும்.
பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் செயலமர்வு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் தலைவரான சரத் வீரசேகரவுக்கு மட்டும் வீசா மறுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான காரணத்தை அவர் கேட்டும் பதில் கிடைக்காத நிலையில்,அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கேட்குமாறு சபாநாயகரிடம் முறையிட்டிருக்கிறார்.
ஆனாலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரிக்கலாமே தவிர அவர்களின் முடிவில் தங்களால் தாக்கம் செலுத்த முடியாது, அவர்களின் முடிவுக்கு இணங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச.
ஏற்கனவே கடற்படையில் இருந்த போது, தாம் அமெரிக்காவுக்கு செல்ல விசா வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அது மறுக்கப்பட்டது என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.
நீதிபதி சரவணராஜாவை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அச்சுறுத்தியது சரத் வீரசேகர தான்.
அவர், பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, தமிழ் நீதிபதிகளை மாத்திரமன்றி, சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட கேவலமாக விமர்சித்திருக்கிறார், இனக்குரோத உணர்வுடன் அச்சுறுத்தல்களை விடுத்திருக்கிறார்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு உதவுகின்ற அமெரிக்கா போன்ற நாடுகள், இவையெல்லாவற்றையும் கவனத்தில் எடுக்காமல் இருக்கும் என்று சரத் வீரசேகர போன்றவர்கள் நம்பிக் கொண்டிருந்தால் அது தான் முட்டாள்தனம்.
அமெரிக்காவை, மோசமாக விமர்சித்த சரத் வீரசேகர போன்றவர்கள், ஏன் அமெரிக்க விசாவுக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
எவ்வாறாயினும் சரத் வீரசேகரவுக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டதற்கும், நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தப்பட்டு அவர் நாட்டை விட்டு தப்பியோடும் நிலை ஏற்பட்டதற்கும் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதுமாத்திரமன்றி சட்டமா அதிபர் திணைக்களமே நீதிபதிகளின் தீர்ப்புகளில் தலையீடு செய்கின்ற நிலை நீதித்துறை சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் நீதித்துறை சுயாதீனம் என்பது எந்தக் காலகட்டத்திலும் இருந்ததே இல்லை. அதனால் தான், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நம்பிக்கையீனத்தினால் தான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இலங்கையின் பெயரை சர்வதேச அளவில் கெட்டுக் குட்டிச் சுவராக்கியதும், நீதித்துறையின நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தியதும், சிங்கள பௌத்த பேரினவாதமும் அதன் ஆட்சி அமைப்புகளும் தான்.
இந்த நிலைமையை ரணில் விக்கிரமசிங்க போன்ற ஆட்சியாளர்களால் கூட மாற்றியமைக்க முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம், இலங்கைக்கு பல பாடங்களைக் கற்பிக்கப் போகிறது.
சிங்கள பௌத்த பேரினவாதம் இதற்காக அதிக விலைகளை கொடுக்கும் நிலை ஏற்பட்டாலும் அது ஆச்சரியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM