சத்ரியன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்திய பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், இப்போது, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டால் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று தடம் மாறத் தொடங்கியிருக்கிறார்.
எம்பிலிப்பிட்டிய சென்.மைக்கல்ஸ் தேவாலயத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின்னர், பேராயர் மல்கம் ரஞ்சித் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்தார்.
உள்நாட்டில் முறையான பக்கசார்பற்ற விசாரணை சாத்தியமில்லை என்பதால் தான், சர்வதேச விசாரணை தேவை என்று, அவர் அப்போது கூறியிருந்தார்.
சர்வதேச விசாரைணையை கோருவதை விட வேறு வழியில்லை என்று கூறியிருந்த பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், இப்போது ஏன், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டால் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூற முற்படுகிறார்? இது ஆராயப்பட வேண்டிய விடயம்.
பேராயர் இந்தக் கருத்தை வெளியிட முன்னரே, அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ, நம்பகமான உள்நாட்டு விசாரணை நடந்தால், சர்வதேச விசாரணை அவசியமானதல்ல என்ற தொனியில் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சனல் 4 ஆவணப்படம் வெளியான போது இருந்த உணர்வு மற்றும் நிலைப்பாட்டில் இருந்து பேராயர் தரப்பு அல்லது கத்தோலிக்கத் திருச்சபை இப்போது விலகிச் செல்லத் தொடங்கியிருக்கிறது.
அதற்கான காரணம் என்ன?
சனல் 4 ஆவணப்படம் வெளியாகியதும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முக்கியமாக வலியுறுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
அவர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தது.
அவர் ஆட்சியில் இருந்தபோது தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன.
அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது, நாட்டில் தாக்குதல் இடம்பெற உள்ளதை அறிந்திருந்தார் என்றும், தாக்குதல்கள் நடந்த பின்னரும் உடனடியாக நாடு திரும்ப தவறினார் என்றும், இருவேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதற்காக, மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், சனல் 4 ஆவணப்படம், இந்த தாக்குதலை ராஜபக் ஷவினருக்கு நெருக்கமானவர்களின் அரசியல் சதி என்று வெளிப்படுத்தியது, மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமானது.
அது அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பாற்றக் கூடியது. அதனால் தான் அவர், உடனடியாகவே சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அவரும் தடுமாறத் தொடங்கி விட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய, மைத்திரிபால சிறிசேன, சர்வதேச தொழில்நுட்ப உதவியுடன் நம்பகமான உள்நாட்டு விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா அதிகாரியிடம் கூறியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்காக அவர் முன்வைத்த காரணம், சர்வதேச விசாரணையை நடத்தினால், புலம்பெயர் தமிழர்கள், அதனை காரணமாக வைத்து போர்க்கால சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்துவார்கள் என்பது தான்.
அதாவது, போர்க்கால சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணை வந்து விடக் கூடாது என்பதில், மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்.
போரின் இறுதி நாட்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் இருக்கவில்லை. அந்தக் கட்டத்தில் அவர் நாட்டில் இருப்பது பாதுகாப்பில்லை என்பதால் தான் அவர் வெளிநாடு சென்றதாக அப்போது பரவலாக ஒரு கதை நிலவியது.
மஹிந்த ராஜபக் ஷ வெளிநாட்டில் தங்கியிருந்த நிலையில், இறுதிப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, மைத்திரிபால சிறிசேன தான், பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தாம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போதும், தம்மிடம் எதுபற்றியும் கலந்துரையாடப்படவில்லை என்றும், எல்லா முடிவுகளையும் கோட்டாபய ராஜபக் ஷவே எடுத்தார் என்றும் மைத்திரிபால சிறிசேன அப்போது நழுவினார்.
இது உண்மையா பொய்யா என்பது வேறு விடயம்.
போர்க்கால சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அப்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் கூட, பதிலளிக்க வேண்டிய நிலை வரலாம்.
அதற்காக அவர் சர்வதேச விசாரணையை எதிர்க்கிறாரா அல்லது, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து, இராணுவத்தினரைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறாரா என்று தெரியவில்லை.
எது எவ்வாறாயினும் அவர் சர்வதேச விசாரணையை தற்போது விரும்பவில்லை என்பது தான் உண்மை.
பேராயர் மல்கம் ரஞ்சித்தும், போர்க்கால மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்த்தவர். பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார். இப்போது அவரும் நம்பகமான விசாரணை நடந்தால், சர்வதேச விசாரணை தேவையில்லை என்கிறார்.
இரண்டு பேருமே, போர்க்காலத்தில் குற்றமிழைத்தவர்கள் விசாரிக்கப்படுவதை, தண்டிக்கப் படுவதை விரும்பவில்லை. அவ்வாறான சர்வதேச விசாரணைகள் நடப்பதை விரும்பவில்லை.
சர்வதேச விசாரணைகளால் நாட்டைப் பாதுகாத்த படையினர் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சுகிறார்கள்.
அவ்வாறாயின், உள்ளக விசாரணை நம்பகமான முறையில், நீதியான முறையில், வெளிப்படையான முறையில் இடம்பெற வேண்டும்.
போர்க்கால சம்பவங்கள் குறித்து, நம்பகமான, வெளிப்படையான விசாரணைகளுக்கு உள்நாட்டில் வாய்ப்பே இல்லை என்பது, இந்த 14 ஆண்டுகளில் நிரூபணமாகி விட்டது.
இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பல்வேறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய எவரும் முறைப்படி விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.
நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதில் கூட, இதுவரை ஆட்சியில் இருந்த எவரும், அக்கறை செலுத்தவில்லை. அதனால், இனி உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாத நிலை உருவாகி விட்டது.
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புகளின் மீது காணப்படும் அரசியல் செல்வாக்கும், நம்பகமான விசாரணைகள் சாத்தியமில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, சனல் 4 ஆவணப்படத்தில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பிள்ளையான் எனப்படும், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்குப் பின்னால் நிகழ்ந்த பல விடயங்களை அசாத் மௌலானா வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுவும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பெரிதும் பாதிக்கச் செய்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற்றால், சர்வதேச விசாரணை தேவையில்லை என்று பேராயரும், சர்வதேச தொழில்நுட்ப உதவி இருந்தால் போதும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருப்பது வேடிக்கை தான்.
அவ்வாறான சூழலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தான் சந்தேகம்.
அதேவேளை, எம்பிலிப்பிட்டிய தேவாலயத்தில் பேராயர் உரையாற்றிய அதே நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஓமல்பே சோபித தேரர், குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறைமை நாட்டில் இல்லாவிட்டால் சர்வதேச விசாரணை அவசியம் என்று கூறியிருக்கிறார்.
குற்றவாளிகள் தப்பிக்கும் முறைதான் இலங்கையில் இருக்கிறது. குற்றவாளிகளை தண்டனையில் இருந்து தப்பிக்கும் நடைமுறை தான் இங்கு உள்ளது.
இவ்வாறான நிலையில், சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாதது என்பதே உண்மை. சர்வதேச விசாரணை அவசியம் என்பதையே ஓமல்பே சோபித தேரர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.
ஆனால் பேராயரும், மைத்திரியும், யாரைக் காப்பாற்றுவதற்காக தங்களின் நிலைப்பாட்டை மாற்ற முனைகின்றனர்.?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM