(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதியின் அதிகாரத்தை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் வரைக்கும் இல்லாமலாக்கக் கூடாது என ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்ததார்.

இன்று அரசாங்கத்தின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதியே தலையிட வேண்டியிருக்கின்றது. அதனால் ஜனாபதியின் அதிகாரத்தை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் வரைக்கும் இல்லாமலாக்க கூடாது என்பதுவே எமது நிலைப்பாடாகும்.

அலரிமாளிகையில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமையவே நிதி குற்றப்புலனாய்வு பிரிவினர் செயற்படுகின்றனர். அதனால் சட்டத்தின் ஆதிபத்தியம் நிறைவேற்று அதிகாரிகளால் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டிய பல விடயங்கள் இன்று பிரதமரின் தேவைக்கேற்பவே இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று நாட்டில் யாரையாவது கைதுசெய்வதென்றாலும் எந்த குற்றத்துக்காக கைதுசெய்வதென்றாலும் அது தொடர்பாக பொலிஸ் திணைக்களமோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களமோ தீர்மானம் எடுப்பதில்லை. மாறாக  அலரி மாளிகையில் இருக்கும் குழுவே அதுதொடர்பாக தீர்மானம் எடுக்கின்றது.

சோசலி மக்கள் முன்னணி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்ததார்.