லத்தீப் பாரூக்
2011 இல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய யுத்தம் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடையவும் அந்த நாட்டின் மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலையவும் காரணமாக அமைந்தது. பெற்றோலிய வளம் மிக்க அந்த நாடு இன்று ஒரு வெற்று பூமியாக மாற்றப்பட்டுள்ளது.
அண்மையில் லிபியாவில் டேர்னா பிரதேசத்தில் 20 ஆயிரம் உயிர்கள் பலியாகவும் மேலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போகவும் காரணமாக இருந்த பெரு வெள்ளத்துக்கு இந்த ஆக்கிரமிப்பு யுத்தமும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக சில தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 2010/11 அரபு வசந்த போராட்டத்தின் போது லிபியா மக்களும் அரசியல் சுதந்திரத்துக்காக விழித்தெழுந்தனர். மக்களின் இந்த உரிமைக் குரல்களுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக லிபியாவின் அன்றைய சர்வாதிகார ஆட்சியாளர் முவம்மர் கடாபி அந்த மக்கள் எழுச்சியை நசுக்க முனைந்தார்.
அது லிபிய மக்களுக்கும் லிபிய அரசுக்கும் இடையிலான ஒரு உள்வீட்டு பிரச்சினையாகத் தான் இருந்தது. ஆனால், இந்த நெருக்கடி நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்ட நேட்டோ அமைப்பு தேவையின்றி அந்த உள்நாட்டு பிரச்சினையில் மூக்கை நுழைத்தது. இதனால் மோசமான குண்டு வீச்சுக்கு இழக்கான லிபியாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். நாட்டின் உட்கட்டமைப்பு முற்றாக நாசமாக்கப்பட்டது. அழகிய அந்த நாடு கிட்டத்தட்ட ஒரு கொலைக்களமாக மாற்றப்பட்டது.
இந்தக் குழப்பங்களின் நடுவே அவர்கள் லிபியா தலைவர் கடாபியையும் துரத்திச் சென்று கொன்றனர். அதன் பிறகு அந்த நாட்டை இரு கூறுகளாகப் பிரித்து அங்கு மேலும் குழப்பங்களையும் அரசியல் ஸ்திரமற்ற நிலையையும் உருவாக்கினர். இன்றும் அந்த நிலைமைதான் அங்கு தொடருகின்றது.
அமெரிக்க – நேட்டோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாசகார சக்திகளால் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற முஸ்லிம் நாடுகளை அழித்து சின்னாபின்னமாக்குகின்ற சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகத் தான் இது முன்னெடுக்கப்பட்டது. ஈராக் - சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் ஏனைய பலம் பொருந்திய செல்வம் மிக்க முஸ்லிம் நாடுகளையும் அழித்து இஸ்ரேலை அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது தான் இதன் இலக்கு.
2011 இல் பராக் ஒபாமா தலைமையின் கீழான அரசு தான் நேட்டோவுடன் லிபியாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக லிபியாவை ஆட்சி செய்த கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டி அந்த நாட்டை அழித்தது. ஆத்திரத்தில் வீசப்பட்ட குண்டுகள் அந்த நாட்டில் மோசமான சிவில் யுத்தத்தை ஏற்படுத்தி இன்றும் அது தொடருகின்றது. இதனால் ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் செல்வம் மிக்க நாடாக இருந்த லிபியா இன்று வெற்று பூமி ஆக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களுக்கு அமெரிக்கா அவசர நிதி உதவிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு அனுப்பப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிச்சயமாக அந்தத் தொகை அவர்கள் 2011 இல் லிபியாவுக்கு எதிரான யுத்தத்துக்கு செலவிட்ட 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவோ அல்லது அதற்கு கிட்டிய ஒரு தொகையாகவோ அல்லது தற்போது ரஷ்ய, உக்ரேன் யுத்தத்துக்கு செலவிடப்பட்டுவரும் தொகைக்கு கிட்டியதாகவோ அமையப் போவதில்லை.
லிபிய யுத்த நிவாரணத்துக்காக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள வேண்டுகோளில் கோரப்பட்டுள்ள தெகை 71 மில்லியன் டொலர்கள் மட்டுமே. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளோடும் உக்ரேன் யுத்தத்துக்காக செலவிடப்பட்டு வரும் தொகையோடும் ஒப்பிடுகையில் இது ஒரு சொற்பத் தொகை.
ஒரு வகையில் ஐக்கிய நாடுகளும் லிபிய அழிவுக்கு பொறுப்பேற்க வேண்டும். 2011 மார்ச் 17ல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை லிபியா மீதான நடவடிக்கைக்கு அதரவளித்தது. (ரஷ்யாவும் சீனாவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்கவும் இல்லை) இதன்படி லிபியாவின் பெங்காஸி நகரம் உட்பட சகல நகரங்களிலும் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் எதையும் செய்யும் அதிகாரம் பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த யுத்தம் மூலம் லிபியாவின் அதிபர் கடாபி உட்பட 25,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் மற்றும் புலனாய்வு பிரிவு சி.ஜ.ஏ. என்பனவற்றாலும் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளாலும் பயிற்றுவிக்கப்பட்டு கூலிக்கு அமர்த்தப்பட்ட கூலிப் படையினரால் கடாபி மிக மோசமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தக் கூலிப்டையைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சி.ஜ.ஏ.யால் நேரடியாகப் பொறுப்பேற்கப்பட்டு கப்பல் வழியாக சிரியாவுக்கு அழைத்து வரப்பட்டு சிரியா ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.
லிபியா மீதான அமெரிக்க நேட்டோ குண்டு வீச்சு அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் பெருவாரியான பெற்றோலிய வளம் மற்றும் வாயு வளம் என்பனவற்றின் மீகு குறிவைத்து செயற்படும் பல்வேறு வெளிநாட்டு சக்திகளால் ஆதரிக்கப்படும் போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், இன்று ஆபிரிக்காவின் மிகப் பெரிய சிவில் யுத்தமாக உருவெடுத்துள்ளன. லிபியா இன்று, பெங்காஸியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கிழக்குப் பிராந்திய நிர்வாகம், தலைநகர் திரிப்போலியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மேற்குப் பிராந்திய நிர்வாகம் என இரு கூறுகளாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளது.
இதில் கிழக்கு பிராந்திய ஆட்சி கலீபா அப்தார் என்பவரின் தலைமையில் செயல்படுகின்றது. முன்னர் ஒரு காலத்தில் இவர் அமெரிக்காவின் உளவு சேவையான சி.ஜ.ஏ. யின் ஒரு சொத்தாக மதிக்கப்பட்டவர். இப்போது அவர் பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சகாவாக மாறி உள்ளார். டேர்னா பிராந்தியத்தை எப்போதுமே சந்தேகக் கண் கொண்டு நோக்கியவர். காரணம் அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளினதும் அமெரிக்க உளவாளிகளினதும் நடவடிக்கைகள் அதிகம் காணப்பட்டன.
தாக்குதல்கள் மூலம் சேதம் அடைந்த அந்தப் பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைக்கவோ ஸ்திரப்படுத்தவோ எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அந்த நகருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்த இரண்டு பிரதான நீர்த்தேக்கங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
வழமையாக வரண்டு போய் காணப்படும் டேர்னா நகரை ஊடறுத்துச் செல்லும் நதியின் படுகை பெருமழை காரணமாக ஊற்றெடுத்து வெள்ளம் ஏற்பட்ட போது அதை தாங்கவோ அல்லது தடுக்கவோ, ஏற்கெனவே கண்ணுக்குத் தெரியும் வகையில் பெரும் வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நீர்த்தேக்கங்களால் முடியவில்லை. இதுவே மாபெரும் அழிவுக்கு வழியமைத்தது என்று தற்போது தெரிய வந்துள்ளது.
அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் வீசிய டேனியல் என்ற புயல் காரணமாக பிரதான இரண்டு நீர்த்தேக்கங்களும் மிக மோசமாக சேதமடைந்தன.
இந்தப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கான சராசரி மழை வீழ்ச்சி ஒரு சில மணிநேரங்களில் பொழிந்தது. இந்த கனமழை கொள்ளளவை தாங்க முடியாமல் நீர்த்தக்கங்களில் சுவர்கள் இடிந்து வீழ்ந்தன. இந்த அணைகளைத் தவிர வேறு எந்த நீர் தடுப்பு பாதுகாப்பும் இல்லாத சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழும் நகரம் முற்றாக நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த மனிதப் பேரழிவுக்கு மூல காரணமாக அமைந்தது ஒபாமா மற்றும் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகமும் நேட்டோ குண்டு வீச்சும் தான் என்பது பற்றி அமெரிக்க மற்றும் மேற்குலக ஊடகங்கள் எதுவும் பேசாமல் வாய்மூடி மௌனம் காத்தன. இவ்வளவு நடந்தும் அரசியல் ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ வொஷிங்டனின் யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதும் கவலைக்குரியதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM