நமது அரசியல் நிருபர்
2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் என்பதை உணர்ந்து தேசிய அரசியலில் அனைத்து மட்டத்தினரும் மிகவும் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை கோரும் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கோரிக்கை நிறைவேறாவிடின் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவு கிடையாது என்ற தகவலையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.
மறுபுறம் புதிய அரசியல் கூட்டணியை நோக்கி நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பல ஆர்வம் செலுத்தியுள்ளன. இவ்வாரத்தில் முக்கிய அறிவிப்புகள் புதிய அரசியல் கூட்டணியிலிருந்து வெளியாக உள்ளன. இவ்வாறானதொரு அரசியல் சூழலில் முக்கிய நாடுகள் பல கொழும்பின் நகர்வுகளை மிகவும் கூர்மையாக அவதானித்து வருகின்றமையையும் கவனிக்க முடிகிறது.
அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினார். பொதுவாக ஜனாதிபதி ஒருவர் வெளிநாடு சென்று நாடு திரும்புகையில் அவரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் விமான நிலையம் செல்வது இலங்கையில் வழக்கமாகியுள்ளது. ஆனால் ஜனாதிபதி ரணிலை வரவேற்க அவ்வாறு எவரும் விமான நிலையத்திற்கு சென்றிருக்கவில்லை.
நாடு திரும்பிய ஜனாதிபதி, அன்றைய தினம் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் நிலைமைகள் குறித்த முன்னேற்றங்களை கேட்டறியும் நோக்கில் மத்திய வங்கி, நிதி அமைச்சு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்திருந்தார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டிருந்தமையினால் இருவார காலமாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களை அறிவது முக்கியம் என்பதை உணர்ந்தும், இறுதி பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர் தன்னை தயார்ப்படுத்தும் வகையிலும் ஜனாதிபதி அனைத்து அதிகாரிகளையும் ஞாயிற்றுக்கிழமை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைகள் குறித்து ஜனாதிபதிக்கு இதன் போது அதிகாரிகள் விளக்கமளித்தனர். 'குறிப்பாக அரசாங்கத்தின் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே மேலும் வரி விதிப்புக்கான யோசனைகளையே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்' என்பதை அதிகாரிகள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டடினர்.
'மேலும் மக்கள் மீது சுமைகளை சுமத்த இயலாது. ஏற்கனவே பெரும் பொருளாதார சுமைகளை மக்கள் சுமக்கின்றனர். அரசின் வருமா னம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை குறித்து நாணய நிதியத்திற்கு விளக்கமளிக்க உள்ளேன். எதுவாக இருந்தாலும் இனியும் வரிகளை அதிகரிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்' என்று ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
இவ்வாறு சில மணி நேரம் நீண்ட கலந்துரையாடலை நிறைவு செய்த ஜனாதிபதி மறுநாள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலுக்கு தயாரானார்.
அமைச்சரவை கூட்டம்
கடந்த வார அமைச்சரவை கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தேச செலவினங்கள் குறித்து முழுமையான உள்ளடக்கம் நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள திகதி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தினார். நாட்டை அபிவிருத்தி இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களும் அனைத்து தரப்புகளிடமிருந்தும் கிடைக்க வேண்டும் என்பதை இதன் போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்கள் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தும் வகையில் இனிவரும் நாட்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி தனது அலுவலகத்திற்கு சென்றார்.
அமைச்சர்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர்கள், ஐ.நா. பொதுச் சபை கூட்டம் மற்றும் ஜி77 மாநாடு குறித்த தகவல்களை கேட்டறிய ஆர்வம் செலுத்தினர்.
'சமுத்திர நாடுகளின் மாநாடு மற்றும் கியூபாவில் சீனா குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தலை பன்னாட்டு இராஜதந்திரிகளும் வரவேற்றிருந்தனர். குறிப்பாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் வரவேற்றிருந்ததாக வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டதாக' ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தன அங்கிருந்த அனைவரையும் நோக்கி குறிப்பிட்டார்.
'சீனா என்பது உலகின் பலமிக்கதொரு நாடு. இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் பிரதானமான நாடும் சீனா தான். எனவே சீனாவை விட்டு விலகி எம்மால் செல்ல இயலாது' என்று இதன் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
'ஆம். அது உண்மை தான். மூன்று பிரதான கூட்டங்களில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் ஜனாதிபதி எடுத்துரைத்திருந்தார். மறுபுறம் இலங்கைக்கு மாத்திரமே நான் சார்புடையவன், வேறு எந்தவொரு நாட்டிற்கும் இல்லை என்று ஜனாதிபதி கூறியமை மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது' என பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த கூறுகையில் அனைவரும் தலையசைத்து அதனை அமோதித்தனர்.
'ஏன், இலங்கை இவ்வளவு விரைவாக கடனை திருப்பி தந்துவிடும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்ற விடயத்தை பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்திருந்தார். பொருளாதாரம் உட்பட அனைத்து வகையிலும் வீழ்ச்சிகண்டு தோல்வியடைந்திருந்த இலங்கை இவ்வளவு விரைவில் எழுச்சி பெறும் என்று உலகில் எந்தவொரு நாடும் நம்பியிருக்கவில்லை. ஆனால் நாம் வெற்றி பெற்றுள்ளோம்' என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இங்கு குறிப்பிட்டார்.
'உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்க ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருவது உண்மையா?' என்று இதன்போது ஜனாதிபதியை நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் மதுர வினாவினார்.
'ஆம்...ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கூடிய விரைவில் நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதே எனது நோக்கமாகவுள்ளது. பல உலக நாடுகளின் தலைவர்கள் அந்த நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். குறிப்பிட்ட சிலவற்றுக்கு நான் செல்வதற்கும் ஏனையவற்றுக்கு பிரதிநிதிகளை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக' ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
புதிய அரசியல் கூட்டணி
ஆளும் கட்சிக்குள் உருவெடுத்துள்ள மாற்று அரசியல் புதிய கூட்டணி மீது நம்பிக்கை கொண்டுள்ள பல அரசியல் கட்சிகள், புத்திஜீவிகளின் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கள் என பல தரப்புகள் ராஜகிரிய அலுவலகத்துடன் கலந்துரையாடுவதை கடந்த வாரத்திலும் அவதானிக்க முடிந்தது.
இதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 20 அமைப்புகள் புதிய கூட்டணியில் இணைவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளன. இவற்றுள் 10 அமைப்புகள் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்திருந்தவையாகும்.
இவற்றுள் பல்கலைக்கழக கல்விசாரா சங்கம், விவசாய ஆய்வு உற்பத்தி உதவியாளர்கள் சங்கம், தொழில் பயிற்சி அதிகாரச் சபை ஊழியர் சங்கம், தபால் ஊழியர் சங்கம், மகாவலி ஊழியர் சங்கம், அரச அச்சக ஊழியர் சங்கம் மற்றும் கலாசார கலைகள் சங்கம் உட்பட பல சங்கங்களும் அமைப்புகளும் புதிய கூட்டணிக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
ஊடக சந்திப்புக்கு தயாராகும் முக்கியஸ்தர்கள்
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தொழிற்சங்க இணைப்பாளர்கள் இருவர் புதிய கூட்டணியில் விரைவில் இணைய உள்ளதாக ராஜகிரிய அலுவலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த இரு முக்கிய இணைப்பாளர்களும் கடந்தவாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, சிறிபால அமரசிங்க, சுகீஷ்வர பண்டார ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இருவாரத்திற்குள் குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தொழிற்சங்க இணைப்பாளர்கள் இருவரும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தமது ஆதரவை புதிய கூட்டணிக்கு வழங்குவதை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
சு.க முக்கியஸ்தரின் கொழும்பு இல்லத்தில் சந்திப்பு
மறுபுறம் புதிய அரசியல் கூட்டணியினர் சில பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறானதொரு சந்திப்பு கொழும்பு 7இல் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அந்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய உறுப்பினர்கள் 30 பேர் கலந்துகொண்டிருந்தனர். மிகவும் இரகசியமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய இரு இளைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர். இங்கு பேசப்பட்ட விடயங்கள் மற்றும் பங்குப்பற்றியவர்கள் குறித்த தகவல்கள் முழு அளவில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஆளும் கூட்டணியில் சு.க.வுக்கும் இடம்
தேசிய அரசியல் பரப்பில், தவறான காய் நகர்த்தல்களினால், இன்று திக்கு தெரியாமல், நிற்கும் நிலைக்கு தயாசிறி ஜயசேகர விழுந்துள்ளதாக தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரை வெளியேற்றியதும், சஜித்திடம் அடைக்கலம் புக முடியுமென நினைத்தாலும், அவருக்கு அங்கேயும் வரவேற்பு கிடைக்கவில்லை.
சஜித் விரும்பினாலும் அவரது குருநாகல் பகுதி உறுப்பினர்கள் விரும்புவதாக தெரியவில்லை. ஜே.வி.பி.யும் இடம் கொடுக்காது. ரணில் பக்கம் இவர் செல்ல, அங்கே ஏற்கனவே சென்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான நிமல் ஸ்ரீபால, அமரவீர, துமிந்த திசாநாயக்க ஆகியோர் பழைய பகை காரணமாக தடை போடுகிறார்கள். மேலும் அகிலவிராஜ் காரியவாசமும், தயாசிறி வருவதை விரும்பவில்லை. ரணில் அமைக்கப்போகும் மகா கூட்டணியில் பெயர் சொல்லும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடம் பெறப்போவது இப்போது ஏறக்குறைய உறுதி.
மைத்திரிபாலவுக்கும் வேறு வழி இல்லை. ரணிலுக்கு, மைத்திரிபாலவை பிடிக்காவிட்டாலும்கூட ஒரு கட்சி கூட்டணி என்பதற்காக அவரை தற்சமயம் சகித்துக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் தெரிகிறது. தயாசிறிக்கு கடைசியில் சஜித் காலில் விழுவதைத் தவிர வேறு வழி இல்லை.
தவறான காய் நகர்த்தல்களினால், திக்கு தெரியாத நிலைக்கு தள்ளப்படும் இன்னும் இருவர்தான், சம்பிக்க, பொன்சேகா ஆகியோர். அவர்களது நெருங்கிய ஆதரவாளர்கள் அதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
தேசிய பரப்பில், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரின் தலைமையிலான கூட்டணிகளில்தான் இவர்கள் இணைய முடியும். இவர்கள் நினைத்த மாதிரி இவர்களால் இன்னொரு அணியை அமைத்து ஒன்றும் சாதிக்க முடியாது என இவர்கள் இப்போது உணர்ந்து வருகின்றனர்.
அமைச்சரவை மாற்றம்
நிலைமை இவ்வாறிருக்க புதிய கூட்டணியின் செயல்பாடுகளை முழு அளவில் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பசில் ராஜபக் ஷ
பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இன்றளவில் ஜனாதிபதி புதிய கூட்டணி விடயத்தில் தலையிடவில்லை. எனவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதிக்கு அடுத்து வரும் தேர்தல்களில் வழங்காமலிருக்க பஷில் தரப்பு தீர்மானித்தது.
எனினும் இந்த தீர்மானம் இறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கை அரசியலை பொறுத்தவரையில் இறுதி நேரத்தில் எதுவென்றாலும் நடக்கலாம். இன்று பகை பேசுபவர்கள் தேர்தல் வருகையில் கூட்டணியமைத்து ஒன்றாக போட்டியிடலாம். எவ்வாறாயினும் தற்போது அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து பசில் தரப்பு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இதனடிப்படையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என்பது பசில் ராஜபக் ஷவின் கோரிக்கையாக உள்ளது.
அதாவது பசில் ராஜபக் ஷ ஜனாதிபதிக்கு அனுப்பிய பெயர் பட்டியலில் உள்ள ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சீ.பி. ரத்நாயக்க, எஸ்.பி. திசாநாயக்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
2024 வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவு
இவ்வாறு அமைச்சு பதவிகள் வழங்கினால் மாத்திரமே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –- செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற தகவல் ஜனாதிபதி ரணிலின் காதில் போடப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகள் உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற விடயமும் இங்கு காணப்படுகின்றது. எனவே அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடம் என்பது அனைத்து அரசியல் மட்டங்களிலும் பேசப்படும் பொருளாகியுள்ளது. அதனை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள பசில் ராஜபக் ஷ தரப்பு மும்முரமாக செயல்படுகின்றது.
சீன கப்பல்
தேசிய அரசியல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்கின்ற நிலையில், சீனாவின் அதி நவீன ஷியான் 6 என்ற ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டதை தொடர்ந்து இலங்கை பல்வேறு இராஜதந்திர நெருக்கடிகளுக்களை எதிர்கொண்டது. சீனாவின் தேசிய தினம் இன்று இடம்பெறவுள்ளமையினால், அதனை முன்னிறுத்தி ஷியான் 6 ஆய்வுக் கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் சீன கப்பலின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்தன. இதனடிப்படையில் கப்பலின் வருகையை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை தாமதப்படுத்துமாறு சீனாவிடம கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் மற்றுமொரு கப்பல்
ஷியான் 6 கப்பல் வருகை தொடர்பிலான சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் மற்றுமொரு ஷியாங் ஹோங் 6 என்ற ஆய்வு கப்பலை சீனா எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மேலும் இராஜதந்திர நெருக்கடிகளுக்குள் இலங்கை சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா– மைத்திரி இடையே உருவாகும் புதிய உறவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் ஹொரகொல்லவில் உள்ள அவரது சமாதியில் கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் தலைமையில் நடைபெற்றதோடு, அவரது சகோதரியான சுனேத்திரா பண்டாரநாயக்கவும் பங்கேற்றிருந்தார்.
இவர்களுடன், பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரவெல்கம, ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
இந்நிகழ்வில் முக்கியமாக, முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவருமான மைத்திரிபால சிறிசேன குறித்த விடயம் தான் பேசு பொருளாகியுள்ளது.
இவர், நினைவுதின நிகழ்விற்கு திடீரென வருகை தந்தமை அனைவருக்கும் ஆச்சரியமளிக்கவும், அவர் சந்திரிகா அம்மையாருக்கு வணக்கம் தெரிவித்து, தேரர்களை வணங்கிவிட்டு, சந்திரிகா அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில் பிரதமருக்கான ஆசனம் இருக்கவும் அதற்கு அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பிரதமர் வருகை தர சற்று தாமதமாகவும், மைத்திரிபால சந்திரிகாவுடன் உரையாட ஆரம்பித்தார். முதலில் வானிலை சாதகமாக அமையுமா என்று சந்திரிகாவைப் பார்த்து மைத்திரி கேட்டார். அப்போது, ஒருபோதும் எமது தந்தையின் நினைவு நிகழ்வின்போது மழை பெய்யாது என்று பதிலளித்த சந்திரிகா, இன்றும் மழை பெய்யாது என்றார். அப்போது மைத்திரி சிறு அளவில் மழை பெய்யுமோ தெரியாது என்றார். அதற்கு மழை பெய்யாது என்று சந்திரிகா உரத்த குரலில் பதிலளிக்கவும் மைத்திரி புன்னகையுடன் நிறுத்திக்கொண்டார்.
உண்மையில், சந்திரிகா தரப்பில் மீண்டும் சுதந்திரக் கட்சியை தம்வசப்படுத்துவதற்கான முனைப்புக்கள் சில முன்னெடுக்கப்பட்டன. அதில் நேரடியாக தலைமையை பெற முடியாது விட்டாலும், தயாசிறியை தலைமைப் பதவிக்கு கொண்டு வந்து அதன் பின்னர் குமார வெல்கமவின் நவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டை ஏற்படுத்தி கூட்டின் தலைமையைப் பெறுவதன் ஊடாக ஆதிக்கம் செலுத்துவதன் ஊடாக மீண்டும் அரசியலில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பது தான் சந்திரிக்காவின் திட்டமாம்.
இதனை, அடிப்படையாக வைத்து தான் சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிகழ்வில் சந்திரிகாவை அழைப்பதற்கும் அதனை குருநாகலில் பாரிய அளவில் முன்னெடுப்ப தற்கும் திட்டமிட்டிருந்தார் தயாசிறி.
இதனை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட மைத்திரி, அதிரடியாக தயாசிறியை நீக்கிவிட்டு, இப்போது சந்திரிகாவுடன் கைகோர்ப்பதற்கு தீர்மானித்துள்ளாராம். இதன் ஆரம்பமாகவே தற்போது பண்டாரநாயக்க வின் நினை வேந்தலில் பங்கேற்று சந்திரிகா வுடன் சுமூகமான நிலைமையை ஏற்படுத்த முனைந்திருக்கின்றாராம்.
2015இல் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கிய தில் சந்திரிகாவின் வகிபாகம் அளப்பரியது. பின்னர் ராஜபக் ஷக்களுக்கு மைத்திரி அதிகா ரங்களை வழங்கியதால் மைத்திரியின் மீது கடுமையான கோபமடைந்திருந்தார் சந்திரிகா.
ஆனால், இவையெல்லாவற்றையும் அவர் தற்போது ஒதுக்கி வைத்துவிட்டு மைத்திரியை அரவணைக்க தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மைத்திரியும் தன்னுடைய தலை(மை)யை தக்க வைத்துக் கொள்வதற்கு சந்திரிகாவுடன் கைகோர்க்கும் தீர்மானத்தினை எடுத்திருக்கிறாராம்.
சபாநாயகரை நாடப்போகும் ரெலோ, புளொட்
சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் தற்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கோரிக்கையொன்றை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. குறிப்பாக, தமிழரசுக் கட்சியினால் தொடர்ச்சியாக புளொட், ரெலோ தரப்பினருக்கு உரையாற்றுவதற்கு உரிய நேர ஒதுக்கீடு வழங்கப்படாத நிலைமை கள் நீடிப்பதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் தான், தற்போது நேர ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விடயங்களை கவனித்து வருகின்றார். எனினும், ரெலோ, புளொட்டிடம் நான்கு உறுப்பினர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்களுக்கான நேர ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தாம் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாகி விட்டதாகவும் தமக்கான நேர ஒதுக்கீட்டை பிறிதாக ஒதுக்கீடு செய்து தருமாறும் கோரிக்கை விடுப்பதற்கு இப்போது ரெலோ, புளொட் முனைகின்றன.
Photo caption:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் ஹொரகொல்லவில் உள்ள அவரது சமாதியில் கடந்த 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உட்பட்டோர் கலந்து கொண்டிருந்த போது....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM