கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை குற்றம்சாட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் இனப்படுகொலை என்ற ஒன்று இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
காலிஸ்தான் பிராந்திய சுதந்திரத்துக்காக செயற்பட்டு வந்த ஹர்தீப் சிங் படுகொலை தொடர்பில் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் இந்திய ஊடகமான ஏ.என்.ஐ. செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறியிருக்கின்றார்.
தீவிரவாதிகளுக்கான பாதுகாப்பு நிறைந்த சொர்க்க பூமியாக கனடா மாறியிருக்கின்றது. இந்தியா தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படுத்தியுள்ள கருத்து எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர் எவ்வித ஆதாரங்களுமற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற மிக மோசமான பொய்யைக்கூறியதன் மூலம் இதனையொத்த விடயத்தையே கனேடியப் பிரதமர் இலங்கைக்கும் செய்திருந்தார். எமது நாட்டில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குள் தலையிட்டு கனேடியப் பிரதமரின் செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இலங்கை விடயத்திலும் கனேடிய பிரதமர் பொய்யுரைத்துள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இவ்வாறான செயற்பாடு இனப்படுகொலை என்றே வர்ணிக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலைக்கான தீர்மானம் கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது அதனை நினைவுகூர்ந்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விசேட அறிக்கையொன்றினை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் 14 வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நாம் இன்று நினைவுகூருகின்றோம். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை உள்ளடங்களாக யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல்போயிருந்தனர் . மேலும் பலர் அங்கவீனமுற்றுள்ளதுடன் இடம்பெயரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் விளைவாக பாதிக்கப்பட்ட, தப்பிப்பிழைத்தோர், அவர்களின் அன்புக்குரியோர், மற்றும் இந்த வன்முறைகளின் விளைவாக ஏற்பட்ட வலியுடன் வாழ்வோருக்கான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம் என்று இந்த அறிக்கையில் கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கனடாவில் பல வருடங்களாக நான் சந்தித்த நபர்கள் உள்ளடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட கனேடிய தமிழர்களின் கதைகள் மனித உரிமைகள், சமாதானம், மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விட்டுக்கொடுத்துவிட முடியாது என்பதற்கான நினைவூட்டல்களாக திகழ்கின்றன. ஆகையினால் மே 18ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாக பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கடந்த வருடம் கனேடிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் இலங்கையர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் முன்னிறுத்திய செயற்பாடுகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் உடனடியாகவே வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆதாரங்களற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டு இலங்கையர்களை துருவமயப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அன்று விசனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஸை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு கண்டனமும் தெரிவித்திருந்தார்.
இந்த பின்னணியில்தான் தற்போது கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான முறுகல் நிலையை பயன்படுத்தி மீண்டும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனேடியப் பிரதமர் இலங்கை விவகாரத்திலும் பொய்யுரைத்ததாகவும் இனப்படுகொலை இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கமானது அக்கறை செலுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு பொறுப்புக்கூறல் விடயம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் இதுவரை பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால்தான் தற்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை கோரப்பட்டு வருகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை உள்ளக ரீதியிலான பொறிமுறையின் கீழ் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் காணாமல்போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களை திருப்திப்படுத்த முடியவில்லை.
தற்போது உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணத்துக்குமான அலுவலம் தொடர்பான சட்டமூலமும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. உண்மை,மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விவகாரமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை திருப்திபடுத்துமா என்ற சந்தேகம் மேலெழுந்திருக்கின்றது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் உள்நாட்டில் நீதி வழங்கப்படவில்லை. இதனால்தான் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடுகள் காணப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே கனடாவின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையில் 40 ஆயிரம் பேர் வரையில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனைவிட இழப்புக்கள் அதிகம் என்று கருதப்பட்டு வருகின்றது. இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் காணமலாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புக்களை சந்தித்த தமிழ்மக்கள் நீதியை கோரி நிற்கின்ற போது அதற்கான நடவடிக்கைகளை எடுக்காது வெறும் விதண்டாவாதங்களை தெரிவிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி உரிய காலத்தில் வழங்கப்பட்டிருந்தால் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்காது. கனேடிய அரசாங்கமானது இந்த விடயம் தொடர்பில் தலையீடு செய்யவேண்டிய சூழல் உருவாகியிருக்கமாட்டாது. இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய நிலைமை கனடாவுக்கு ஏற்பட்டிருக்கமாட்டாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமையினால்தான் கனடாவிலுள்ள தமிழ் மக்களின் அழுத்தங்கள் காரணமாக கனேடிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ, கோட்டாபய ராஜபக் ஷ ஆகியோருக்கு கனடா பயணத்தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போதும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் கனடா உட்பட சர்வதேச நாடுகள் அக்கறை செலுத்திவருகின்ற நிலையில் அதற்கு எதிராக வெளிவிவகா அமைச்சர் அலி சப்ரிஉட்பட்டோர் கருத்துக்களை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.
பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்க முன்வந்தால் இத்தகைய சர்வதேச அழுத்தங்கள் இல்லாது போகும் என்பதை வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோர் உணர்ந்துகொள்ளவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM