சந்திரமுகி 2 - விமர்சனம்

30 Sep, 2023 | 04:21 PM
image

தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : ராகவா லோரன்ஸ், 'வைகைப்புயல்' வடிவேலு, பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர்.

இயக்கம் : பி. வாசு

மதிப்பீடு : 2.5/5

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்துக் காண்போம்.

மிகப் பெரும் தொழிலதிபர் ராதிகா சரத்குமார்.‌ அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத வகையில் தீ விபத்து, சாலை விபத்து என அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக விளக்கம் பெற அவர்கள் தங்களுடைய பாரம்பரிய குருஜியிடம் கேட்க.. அவர் உங்களுடைய குலதெய்வத்திற்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சென்று வழிபாடு நடத்தி வந்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார்.

அனைத்து குடும்ப உறுப்பினர்கள் என்றால் இந்த வீட்டிலிருந்து வேற்று மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து இரு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு விபத்தில் இறந்த அந்த குடும்பத்தின் வாரிசுகளும் அவசியம் வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த இரண்டு பிள்ளைகளின் பாதுகாவலனாக ராகவா லோரன்ஸ் அறிமுகமாகிறார். 

இவர்கள் அனைவரும் குலதெய்வ ஆலயத்திற்கு அருகில் இருக்கும் வடிவேலுக்கு சொந்தமான சந்திரமுகியின் ஆவி குடி கொண்டிருக்கும் அரண்மனை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களின் சேட்டை மற்றும் ஆர்வம் காரணமாக அந்த இடத்தில் ஆவியாக இருக்கும் சந்திரமுகியும், அதே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் வேட்டையனின் ஆவியும் வெளியே வருகிறது.

இதற்குப் பின்னர் அவர்கள் என்ன பாதிப்புக்கு ஆளானார்கள்? குலதெய்வ ஆலயத்தில் வழிபாடை நடத்தினார்களா ? இவர்களின் அரண்மனையில் தங்கியிருக்கும் சந்திரமுகி மற்றும் வேட்டையனின் ஆவி மற்றும் ஆத்மா என்ன ஆனது?  இதுதான் இப்படத்தின் திரைக்கதை.

ராகவா லோரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினியை ஆங்காங்கே நினைவுபடுத்துகிறார். ராகவா லோரன்ஸ் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக நிறைவு செய்து ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரமுகி கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகை கங்கனா ராணாவத், தன் இளமையான அழகையும், கவித்துவமான நாட்டியத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் ஜோதிகாவுடன் ஒப்பிடும்போது குறைவு.

ராகவா லோரன்ஸின் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். அவரே இந்த நட்சத்திர உயர்வை எதிர்பார்த்திருக்க மாட்டார். இருந்தாலும் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

கவனம் ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமிமேனன் சபாஷ் பெறுகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  'வைகைப்புயல்' வடிவேலுவின் நகைச்சுவை குபீர் சிரிப்பை வரவழைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ரகம்.

நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருந்தும் முதல் பாதியில் ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இரண்டாம் பாதியில் சந்திரமுகியை அறிமுகப்படுத்தி, அவர் தொடர்பான காட்சிகளை நேர்த்தியாக செதுக்கி படைப்பை வெற்றி பெற வைத்து இருக்கிறார் இயக்குநர் பி வாசு.

ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம், படத்தொகுப்பு, உடை தேர்வு என அனைத்து துறைகளை சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் ஒன்றிணைந்து உழைத்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

சந்திரமுகி 2- சுமார் மூஞ்சி சந்திரமுகி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right