(நா.தனுஜா)
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் இராஜினாமா தொடர்பில் தீவிர கரிசனையையும், அவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பில் கடும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வையும் ஆதரிப்பதாகக்கூறும் இந்த அரசாங்கம் அடிப்படையில் தோல்வியடைந்ததன் விளைவே இதுவென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்குத் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருப்பதாகவும், தற்போது அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.
உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதியொருவர் பதவியைத் துறந்து, நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதானது நாட்டின் நீதித்துறை முகங்கொடுத்திருக்கும் அச்சுறுத்தலைக் காண்பிப்பதாகவும், இது வன்மையான கண்டனத்துக்குரியது எனவும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுகுறித்துக் கருத்த வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன், ரி.சரவணராஜா கூறியதாக பத்திரிகைகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மையானவையாக இருந்தால், இது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும் என்று குறிப்பிட்டார்.
'ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் நீதிபதி சரவணராஜாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமா அதிபரும் அழுத்தம் பிரயோகித்ததாகக் கூறப்படுகின்றது. அதுமாத்திரமன்றி அவருக்கெதிராக சிங்கள இனவாதிகளாலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது குறித்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதவிவகிக்கும் அதிகாரியொருவரின் பேஸ்புக் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது. அப்பதிவு அரச கட்டமைப்புக்களில் இனவாதம் எவ்வாறு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 'நீதிபதி சரவணராஜாவை புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்துவந்ததாகக் கூறப்படும் விடயம் எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில் இன்றளவிலே சிவில் சமூகப்பிரதிநிதிகளும், நீதியைக்கோரி கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் புலனாய்வுப்பிரிவினரின் தொடர் கண்காணிப்புக்களுக்கு உள்ளாகிவருகின்றனர். அதேபோன்று நீதிபதிக்கு சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகித்ததாகக் கூறப்படும் விடயம் உண்மையெனில், அதற்கான அதிகாரம் சட்டமா அதிபருக்கு இல்லை. எனவே இது நீதித்துறை மீதான அரச கட்டமைப்பின் ஆதிக்கத்தைக் காண்பிக்கின்றது' என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
அதேவேளை, நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமாவை 'பேரிழப்பு' என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கெனன், 'நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வையும் ஆதரிப்பதாகக்கூறும் இந்த அரசாங்கம் அடிப்படையில் தோல்வியடைந்ததன் விளைவே இதுவாகும். இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதற்கான சூழல் மற்றும் பாதுகாப்பு கிட்டும் வரையில், நாட்டில் நிலையான சமாதானம் அடையப்படுமென எதிர்பார்க்கமுடியாது' என்று விசனம் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ கூறியதாவது:
'நீதிபதியொருவர் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறுவதென்பது சட்டத்தின் ஆட்சியை முழுமையாகக் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. அதேபோன்று குருந்தூர் மலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுமாறு சட்டமா அதிபர் நீதிபதி சரவணராஜாவுக்கு அழுத்தம் பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது மிகப்பாரதூரமான விடயமாகும். ஏனெனில் ஏற்கனவே 11 பேர் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் ஒஃப் த ப்ளீற் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்குவதில் சட்டமா அதிபரின் வகிபாகம் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனவே அப்பின்னணியில் தற்போதைய சம்பவத்தை அணுகும்போது இது உண்மையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே சட்டமா அதிபர் அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்படுவாராயின், அதனை சீரமைக்காமல் நாட்டின் நீதித்துறையை சீர்செய்யமுடியாது. அதேபோன்று பதவி விலகிய நீதிபதி ஒரு தமிழர் என்பதால், இவ்விடயத்தை இனவாதப்போக்கிலோ அல்லது அசட்டையாகவோ அணுகுவதைவிடுத்து, இதுகுறித்து நீதியை நிலைநாட்டுவதற்கு சகலதரப்பினரும் ஒன்றிணையவேண்டும்' என அறைகூவல் விடுத்தார்.
மேலும், இச்சம்பவத்தை 'கண்டறியப்படாத, சிகிச்சையளிக்கப்படாத, ஆழமாகப் பரவிய புற்றுநோயின் மற்றுமொரு மாதிரி' என்று வர்ணித்துள்ள கலாநிதி அசங்க வெலிகால, உண்மையான முனைப்பை அடிப்படையாகக்கொண்ட மறுசீரமைப்புக்களின் மூலமே ஸ்திரத்தன்மையை அடையமுடியும் என்றும், அதுவே 'கட்டமைப்பு மாற்றம்' என அடையாளப்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM