(நெவில் அன்தனி)
வெளிப்படைத்தன்மையுடன் கடமைகளைப் புரிந்து, கால்பந்தாட்ட சம்மேளனத்தை சிறப்பாக வழிநடத்தி, கால்பந்தாட்டத்தில் புதிய யுகத்தை தோற்றுவிப்பதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் தனது குழு அமோக வெற்றியீட்டியதைத் தொடர்ந்து யூ.எல். ஜஸ்வர் தெரிவித்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் (FFSL) தேர்தலில் யூ.எல். ஜஸ்வர் தலைமையிலான குழுவினர் 25 வாக்குகள் வித்தியாசத்தில் தக்ஷித்த சுமதிபால குழுவினரை வெற்றிகொண்டனர்.
இலங்கை மன்றத்தில் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் ஜஸ்வர் தலைமையிலான குழுவினருக்கு 45 வாக்குகளும் தக்ஷித்த சுமதிபால குழுவினருக்கு 20 வாக்குகளும் கிடைத்தன.
ஜஸ்வர் குழுவினரின் வேட்பு மனுவில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் ஜஸ்வர் இரண்டாவது தடவையாக தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
இந்தத் தேர்தலில் 65 லீக்குள் வாக்களித்ததுடன் செலுத்தப்பட்ட அனைத்து வாக்குகளும் செல்லுபடியானதாக தேர்தல் குழுவினர் அறிவித்தனர். பொலிஸ் கால்பந்தாட்ட லீக் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜஸ்வர், 'இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் இது ஒரு மகத்தான வெற்றி. ஏனெனில் புதிய யாப்பு விதிகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த முதலாவது தீர்மானம் மிக்க தேர்தலில் பெரும்பான்மையுடன் எமது குழுவினர் வெற்றியீட்டியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கிராமங்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கொண்டு செல்லும் எமது திட்டத்தில் இணையுமாறு அவ்வப்போது அழைப்பு விடுத்திருந்தோம். இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தை 45 லீக் பிரதிநிதிகள் வழங்கியுள்ளனர். அதனை நாங்கள் செவ்வனே நிறைவேற்றுவோம்' என்றார்.
'கடந்த காலங்களில் எமக்கு எதிராக குற்றுச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எம்மீது வீணாக சேறு பூசப்பட்டது. அத்துடன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அவை அனைத்திற்கும் நான் விரைவில் பதில் அளிப்பேன். இப்போதிருந்து வெளிப்படைத்தன்மையுடன் எமது கடமைகளைத் தொடர்வோம். சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்புவோம் என்ற உறுதிப்பாட்டை வழங்குகின்றேன்.
'அதனைவிட கிராமம் தோறும் கால்பந்தாட்டத்தை விஸ்தரித்து தேசிய கால்பந்தாட்டத்தை உயரிய நிலைக்கு கொண்டுசெல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறோம். அத்துடன் தடைப்பட்டிருக்கும் உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளை விரைவில் ஆரம்பிப்போம்.
'கால்பந்தாட்ட நிர்வாகத்தில் மிகவும் அனுபவம்வாய்ந்த பலர் எனது குழுவில் இருக்கின்றனர். அவர்களில் தலைமை தாங்கியவர்களும் ஆளுமைமிக்கவர்களும் இருக்கின்றனர். அவர்களுடனும் ஊடகங்கள் மற்றும் லீக்குகளுடனும் இணைந்து கால்பந்தாட்டத்தில் ஒரு புதிய யுகத்தை தோற்றுவிப்போம்' என ஜஸ்வர் மேலும் கூறினார்.
புதிய நிருவாகத்தின் உடனடி திட்டம் என்னவென கேட்டபோது,
'உலகக் கிண்ண கால்பந்தாட்ட முன்னோடி தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி எதிர்வரும் 12ஆம் திகதி பங்குபற்றவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது எமக்கு தெரியவில்லை. இரண்டாம் கட்டப் போட்டி இலங்கையில் நடைபெறவேண்டும். அதனால் நிறைய விடயங்களை ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது.
(உலகக் கிண்ண முன்னோடி தகுதிகாண் சுற்றில் இலங்கை 12ஆம் திகதியும் 17ஆம் திகதியும் யேமனை இரண்டு கட்டப் போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ளது)
'அதேபோன்று கிராம
ப்புற பாடசாலைகளில் கால்பந்தாட்டத்தையும் தடைப்பட்ட பிரதான கழக மட்ட கால்பந்தாட்டப் போட்டிகளையும் விரைவில் ஆரம்பிப்பதே எமது நோக்கம். அத்துடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து ஊடகங்களுக்கும் நாட்டிற்கும் விரைவில் அறிவிப்போம்' என்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் மேன்முறையீட்டுக் குழுவின் தீர்மானம் கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டது குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என ஜஸ்வரிடம் வினவியபோது,
'உண்மையைக் கூறுவதென்றால், எதிர்தரப்பில் போட்டியிட்ட எவருக்கும் எதிராக நாங்கள் மேன்முறையீடுகளையோ முறைப்பாடுகளையோ செய்யவில்லை. அந்தத் தீர்மானம் எப்படி அமைந்தாலும் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். கடந்த தேர்தலில் எனக்கு நேர்ந்தது என்னவென்பதை சகலரும் அறிவர். விளையாட்டுத்துறை அமைச்சின் கடைசி நேர தீர்மானம் காரணமாக எனக்கு வெளியேற நேரிட்டது. எவ்வாறாயினும் எனது கடமைகளை சரிவர ஆற்ற எல்லாம் வல்ல இறைவன் எனக்கு மீண்டும் வரம் அருளியுள்ளார். என்னைப் பொறுத்தமட்டில், விளையாட்டுத்துறை அமைச்சிடம் மேன்முறையீடு செய்யாமல் தகுதி உடைய சகலருக்கும் போட்டியிட அனுமதிக்க வேண்டும். தேர்தல் மூலம் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை அமைத்துக்கொடுக்கவேண்டும்' என்றார் ஜஸ்வர்.
இதேவேளை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனோ தன்னை வாழ்த்தியதாகக் குறிப்பிட்ட ஜஸ்வர், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக பீபா தலைவருடன் இன்னும் இரண்டு தினங்களில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.
இலங்கை கால்பந்தாட்டத்தில் புதியவரான தக்ஷித்த 20 லீக்குகளின் வாக்குகளைப் பெற்றதுபற்றி என்ன கருதுகிறீர்கள் எனக் கேட்டபோது, 'கால்பந்தாட்டத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே 20 வாக்குகள் அவருக்கு சென்றுள்ளது. அந்த 20 லீக்குகளுக்கு அவரால் ஏதேனும் செய்ய முடியுமானால் எங்களுக்கும் அது நல்லது. அதனை நாங்கள் விரும்புகிறோம். கால்பந்தாட்டத்திற்கு புதியவர் ஒருவர் வருகைதந்து நாட்டிற்கு, கிராமத்திற்கு, விளையாட்டுக் கழகங்களுக்கு ஏதெனும் செய்யமுடிந்தால் அதனை நானும் வரவேற்கிறேன். எல்லாவாற்றுக்கும் மேலாக பிரிவினை வேண்டாம், எங்களோடு இணைந்து கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய முன்வாருங்கள் என்பதே எனது வேண்டுகோளாகும்' என ஜஸ்வர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இந்தத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றதாக அவர் கூறினார்.
தேர்தலில் வெற்றிபெற்ற ஜஸ்வர் குழு விபரம்
யூ.எல். ஜஸ்வர் (தலைவர்), ரஞ்சித் ரொட்றிகோ, டொக்டர் வீ. மனில் பெர்னாண்டோ, எஸ்.டி. நாகாவத்த, கே.எம்.எம்.பீ. கருணாதிலக்க (நால்வரும் உதவித் தலைவர்கள்), ஏ.டபிள்யூ. அப்துல் கபார், ஜகத் டி சில்வா, சய்வ் யூசுவ், எம்.ஐ.எம். அப்துல் மனாப், இந்திக்க தேனுவர, எம்.சி.எம். ரிஸ்வி, சீ. தீபிகா குமாரி (8 பேரும் உறுப்பினர்கள்).
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM