பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம் செலுத்துகிறது - பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் பேட்டி

29 Sep, 2023 | 02:00 PM
image

(மா. உஷாநந்தினி)

"இன்றைய விலையேற்றங்கள் நூல்களிலும் தாக்கம் செலுத்துகின்றன. விலையேற்றப்பட்ட நூல்களை வாங்குமளவுக்கு பொருளாதார வசதி பலருக்கு இல்லை. 

இந்நிலையில், அரசாங்கம் முன்பு போல வரிகளை குறைத்தால் நூல்களின் விலைகளை எம்மால் குறைத்து விற்க முடியும். ஆனால், அதற்கும் சாத்தியமில்லை" என இலங்கையின் முன்னிலை புத்தக நிறுவனமான பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் தெரிவித்துள்ளார்.

வாசிப்பதற்கு ஏராளமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், இன்றைய சூழலில் அவற்றை பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் நிலையில் பெரும்பாலான வாசகர்கள் இல்லை... குறிப்பாக, தமிழ் வாசகர்கள்.

தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும் வருகையும் புத்தகங்கள் மீதான நாட்டமும் குறைந்திருப்பதால்தான் கொழும்பு நகர புத்தக கண்காட்சிகள் மற்றும் புத்தக சந்தைகளில் மிகக் குறைந்தளவிலேயே தமிழ்ப் புத்தகங்கள் அங்கம் வகிப்பதாகவும் விற்பனையாவதாகவும் சில நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இம்முறை கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான பத்து நாட்களும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெற்று வருகிறது.

இதில், பாடசாலை பாடப் புத்தகங்கள், பொது நூல்கள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும்  கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விலைக்கழிவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலான நூல்கள் உள்ளடக்கப்படுகின்ற போதிலும், அவற்றில் சிங்கள நூல்களே ஏராளம். அடுத்த நிலையில் இருப்பவை ஆங்கில நூல்கள்.  

ஆனால், தமிழ் நூல்களின் எண்ணிக்கையும் தமிழ் புத்தகக் கடைகளின் பங்களிப்பும் மிக குறைவாக காணப்படுகின்றமை, வருடந்தோறும் நிகழும் இப்புத்தக கண்காட்சிகளில் உள்ள மிகப் பெரும் குறைபாடாகிறது.

கொழும்பு புத்தக கண்காட்சியில் தமிழ் நூல்களின் வரவும் விற்பனையும், தமிழ் வாசகர்களின் வருகையும் மந்தகதியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறபோதும், இம்முறை வாசகர்களின் தேடலுக்கேற்ப ஓரளவு திருப்திகரமாக தமிழ் நூல் அடுக்குகளையும் கடை அமைப்புகளையும் காண முடிகிறது என இலங்கையின் போர்க்காலச் சூழல்களின்போது ஏற்பட்ட ஆறாத வடுக்களையும் தாங்கிக் கடந்து, இன்று புத்தக விற்பனையிலும் பதிப்பகத்துறையிலும் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக இயங்கிவரும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் வீரகேசரியோடு பகிர்ந்துகொண்டதாவது :

இம்முறை கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் உங்களது நிறுவனத்தினூடாக எவ்விதமான நூல்கள் விற்பனைக்கு வருகின்றன?

கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் முதலிய இலக்கிய வடிவங்களிலான ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் இந்திய எழுத்தாளர்களின் நூல்கள், பாடசாலை பாட நூல்கள், கற்றல் உபகரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பதிப்பகங்களுக்கு உரித்துடைய வெளியீடுகளும் இவற்றில் அடங்குகின்றன.

தமிழ் நூல்கள் கொழும்பு புத்தக கண்காட்சிகளில் அதிகமாக இடம்பெறாததற்கு என்ன காரணம்?

அனைத்து வகையான தமிழ் நூல்களையும் தம் வசம் வைத்திருக்கும் புத்தக நிறுவனங்கள் கொழும்பில் மிகக் குறைவு.

அத்தோடு, இந்த கண்காட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சூழல் இல்லை. காரணம், இங்கு சிங்கள புத்தகங்களின் பதிப்புகளும் சிங்கள வெளியீடுகளும் சிங்கள புத்தக கடைகளும் நிறைய உள்ளன.

கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட சிங்கள புத்தக கடைகளுக்கு மத்தியில் மூன்று, நான்கு தமிழ்  புத்தக கடைகளே உள்ளன. அவையும் தாமாக முன்வந்து கண்காட்சியில் கடைகள் போடுகின்றனவே தவிர, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தமிழ் கடைகளை நாடி வாய்ப்பளிப்பதில்லை.

அதுமட்டுமன்றி, இன்றைய பொருளாதார வீழ்ச்சி நிலையில் இந்தியாவிலிருந்து தமிழ் நூல்களை இறக்குமதி செய்து, அவற்றை விற்பதும் சிக்கலானது.

கப்பல் போக்குவரத்து, சுங்க நடவடிக்கைகள், வங்கி நடைமுறைகள், அரச வரிகள் போன்றவற்றுக்கான கட்டணங்களை செலுத்தியே இந்திய நூல்களை பெறவேண்டியுள்ளது.

இதனால், வாசகர்கள் விரும்புகிற சில இந்திய புத்தகங்களை சில வேளைகளில் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதேவேளை எங்களிடம் போதியளவு இந்திய நூல்களும் இருக்கவே செய்கின்றன.

அடுத்து, இன்றைய விலையேற்றங்கள் நூல்களிலும் தாக்கம் செலுத்துகின்றன. விலையேற்றப்பட்ட நூல்களை வாங்குமளவுக்கு பொருளாதார வசதி பலருக்கு இல்லை.

இந்நிலையில், அரசாங்கம் முன்பு போல வரிகளை குறைத்தால் நூல்களின் விலைகளை எம்மால் குறைத்து விற்க முடியும். ஆனால், அதற்கும் சாத்தியமில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் பெருந்தொகைக்கு தமிழ் நூல்களை பெற்று, அவற்‍றை நாங்கள் விற்றாலும், வாசகர்கள் அதிக பணம் கொடுத்து வாங்குவதில்லை. இதனால் புத்தகசாலையை கொண்டு நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது.

ஒரு புத்தக கண்காட்சிக்கு கடை போடுவதென்றால், அதற்கு பெருந்தொகையினை செலவழிக்க வேண்டியுள்ளது. எனினும், கண்காட்சி மூலம் நூல்களை விற்று செலவழித்த பணத்தை ஈட்டுவதென்பது இன்னுமின்னும் கடினம்.

மேலும், இந்த கண்காட்சியில் தமிழ் புத்தக பதிப்பாளர்களின் பங்களிப்பும் திருப்தியாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.  

புத்தக கண்காட்சிகளுக்கான தேவை என நீங்கள் கருதுவது?

மக்களிடையே வாசிப்புப் பழக்கம்  படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், நூல் வாசிப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் புத்தகங்கள் வாங்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நூல்களை விருப்போடு நாடிய முந்தைய கால வாசகர்கள் போன்று இல்லாவிட்டாலும், முற்றிலும் இல்லையென்று கூற இடமின்றி  வாசகர்களின் வருகையையும் பார்க்க முடிகிறது.

சமூக வலைத்தளங்களால் நூல்களை தேடி வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கருதுகிறீர்களா?

முற்றாக இக்கருத்தை ஏற்க முடியாது.

சுய முன்னேற்றம், இறை நம்பிக்கை, சிந்தனைகள் தொடர்பான நூல்களை நாளுக்கு நாள் எல்லா சமயத்தவர்களும் வாங்கி வாசிப்பதை பார்க்க முடிகிறது.

அதேபோல 'பொன்னியின் செல்வன்' திரைப்பட வெளியீட்டுக்கு பிறகு யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வரும் சோழ மன்னர்களின் வரலாறு தொடர்பான பதிவுகள் பெருகிவிட்டதால் தமிழ் மன்னர்களின் வரலாறுகள் சார்ந்த தேடுதலில் ஈடுபடும் தரப்பினர் அதிகரித்துவிட்டனர். அதற்காகவே பழங்கால மன்னர்கள், அரச வம்சத்தினர் தொடர்பான வரலாற்று நூல்களின் வருகையும் அதிகரித்துவிட்டது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட வரலாற்று நாவல்கள் பல விற்றுத் தீர்ந்திருக்கின்றன. இதை அனுகூலமாக நாம் பார்க்க வேண்டும்.

இந்திய நூல்களின் வருகையால் ஈழத்து நூல்களுக்கான தேடலும், விற்பனையும் குறைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்களே...

அப்படியில்லை.

ஈழத்து புத்தகங்களுக்கான வாசகர் வீச்சு குறைவு என்றாலும் கனிசமான நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஈழத்து நூல்களுக்கென்றே தனித் தேடலுண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் ஈழத்து நூல்களை தேடிக் கேட்டு பெற்றுச் செல்கின்றனர்.

அத்தோடு, ஈழத்து நூல்கள் பல இந்தியாவிலேயே வெளியிடப்படும் நிலையில், ஈழத்து எழுத்தாளர்கள் தமது நூல்களை இந்தியாவிலும் கூட சந்தைப்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது.

இக்கண்காட்சி மூலம் தமிழ் எழுத்தாளர்கள் எவ்விதம் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்?

ஸ்ரீலங்கா புத்தக வெளியீட்டாளர்கள் சங்கமானது தமிழ் புத்தகங்களுக்கு பரிசுகளோ ஊக்குவிப்போ வழங்குவதில்லை. தமிழ் நூல்களை நிலைப்படுத்த முயற்சிக்கவும் தயாராக இல்லை. இவ்விடயம் தொடர்பில் நாங்கள் முன்பிருந்தே சங்கத்துக்கு வலியுறுத்தி வருகிறோம்.  

தமிழ் நூல்களுக்கு உரிய அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை  நூல்கள் சார்ந்த தமிழ் அமைப்புகளே முன்னெடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற அமைப்புகள் உள்ளன. எனினும், கொழும்பில் புத்தகங்கள் சார்ந்த தமிழ் அமைப்புகளோ தமிழ் வாசகர் கூட்டமோ இல்லை.

யாழ்ப்பாணத்திலும் புத்தக கண்காட்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

புத்தக பதிப்பாளர் சங்கம் யாழில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்துவது வழக்கம். எனினும், கொவிட்டுக்குப் பின்னர் கண்காட்சி நடைபெறவில்லை.

அடுத்த வருடம் மே மாதம் புத்தக கண்காட்சியை நடத்த தீர்மானித்துள்ளோம்.

அங்கே பெரிய இடப்பரப்பு இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட சில பதிப்புகள், புத்தக விற்பனை நிறுவனங்கள் மாத்திரமே பங்கெடுக்கும். அவற்றில் சில பதிப்பகங்கள் தங்களது வெளியீடுகளை மட்டுமே விற்பனை செய்வதுமுண்டு.  

நீங்கள் இந்த கண்காட்சியூடாக தமிழ் எழுத்தாளர்களை எவ்விதம் ஊக்கப்படுத்துகிறீர்கள்?

எழுத்தாளர்களின் புத்தகங்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். ஆனால், கண்காட்சியில் அவர்களது நூல்களை விற்பனைக்கு வைக்குமளவுக்கு, நூல்களை வாங்க வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

காரணம், ஜனரஞ்சகமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உட்பட ஜெயகாந்தன், முத்துலிங்கம், ஜெயமோகன், சுஜாதா, சாண்டில்யன் போன்ற பிரபல மற்றும் இந்திய எழுத்தாளர்களின் நூல்களையே வாசகர்கள் விரும்பி வாங்குகின்றனர். இருப்பினும், ஈழத்து புத்தகங்களும் விற்பனையாகின்றமை கவனத்துக்குரியது.  

நூல் கொள்வனவை வாசகர்களிடையே ஊக்குவிக்க என்ன செய்யலாம்?

ஒரு புத்தகம் வாங்குவதற்காக வாசகர்கள் கொழும்புக்கு வந்துதான் வாங்க வேண்டும் என்றில்லாமல், இலங்கையில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் புத்தகக் கடைகள் அமைந்திருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு குறிப்பிட்ட ஒரு கடையை தேடிப் பிடித்து வாங்கும் நிலைமை இருக்கக்கூடாது.

தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தமிழ் நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமைப்பொன்றை உருவாக்கி, செயலாற்ற வேண்டும். அதனூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் தனியாக தமிழ் புத்தக கண்காட்சிகளை நடத்த வேண்டும். அப்போதுதான் அதிகமான தமிழ் நூல்கள் வாசகர்களை விரைவில் சென்றடையும். 

முன்பு அரசாங்கமானது பள்ளிக்கூடம், பொது நூலகங்கள், அரச நிறுவனங்களுக்கு பெருந்தொகை நிதியளித்து, புத்தகங்களை வாங்க ஊக்குவித்தது. ஆனால், கடந்த ஐந்தாறு வருடங்களாக இந்த சலுகை இல்லை. அதனால் புத்தக சந்தைப்படுத்தலும் குறைந்துவிட்டது. வாசகர்களும் தங்கள் பொருளாதார பிரச்சினைகளை மீறி, புத்தகங்களை வாங்கி வாசிக்கும் நிலையில் இல்லை. இன்றைய நாட்டுச் சூழல் அப்படி!

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இன்றைய பொருளாதார வீழ்ச்சி நிலைமையில் அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாடு போன்று தமிழ் வாசகர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக பதிப்பாளர்களும் நூல் விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் உணவுத் தேவைகளை நிறைவேற்ற போராடும் மக்கள் வாசிப்புத்திறன் கொண்டவர்களாக இருப்பினும், நூல்களை வாங்க பணம் செலவழிப்பதை விடுத்து, உணவுத் தேவை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு என்றே அதிகமாக சிந்திக்கின்றனர்.

அத்தோடு, நூல்களை வாங்க எத்தனிப்பவர்கள், விற்பனை நிலையங்களில் போதியளவில் தமக்கான தெரிவுகள் இல்லை என்றும்  கூறுகின்றனர்.

போதிய எண்ணிக்கையில் வாசகர்கள் இன்மை, பொருளாதார சிக்கல்கள், விலை அதிகரிப்புகள், தமிழ் நூல்கள் மற்றும் வாசகர்கள்  குறித்து கவனம் செலுத்த அமைப்புகள் இல்லாமை, அரசு சலுகைகள் வழங்காமை, வரி விதிப்பு போன்ற காரணங்களால் தமிழ் நூல் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளமை தெரிகிறது.

எனவே, அரசும் சில சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக, விலையேற்றங்களை கட்டுப்படுத்தி, தமிழ் அச்சுப் பதிப்புத்துறைக்கும் பயனுள்ள திட்டங்களை வகுக்க வேண்டும். புத்தக சந்தைகளை உருவாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமும் தமிழ் வாசகர்களை தமிழ் நூல்களின் பக்கம் ஈர்த்து, வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09
news-image

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப மக்களுடனான நம்பிக்கையை மீளக்கட்டியழுப்பவேண்டும்

2023-11-28 11:36:20
news-image

அரச வருமான இலக்கை அடைவதன் சவால்கள்

2023-11-27 17:53:39
news-image

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை...

2023-11-27 17:49:39
news-image

சந்தையில் பால்மா விலையை தீர்மானிக்கும் உரிமை...

2023-11-27 15:08:57
news-image

மீண்டும் தேவைப்­படும் கூட்டு

2023-11-26 18:46:59