விநாயகரின் ஆறுபடை வீடு

27 Sep, 2023 | 03:34 PM
image

தமிழர்களுக்கு காவல் தெய்வமாகவும், அருள் புரியும் அருளாளராகவும், 'தமிழ் கடவுள்' என்றும் முருகனை போற்றி வணங்குகிறோம்.

முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறு இடங்களில் அருள் புரியும் ஆறுமுகப்பெருமானை தான் ஆறுபடை வீடு என குறிப்பிட்டு கொண்டாடி வருகிறோம். எம்முடைய மண்ணிலும் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கிறது என்று சுட்டிக் காட்டுவோர்களும் உண்டு.

முருகப்பெருமானை போலவே அவரது சகோதரரும், முழு முதல் கடவுளுமான விநாயகப் பெருமானுக்கும் ஆறுபடை வீடு உண்டு.

இது தொடர்பாக ஆன்மீகப் பெரியோர்கள் பலவித கருத்தியல்களை தெரிவித்தாலும், எம்முடைய முன்னோர்கள் விநாயகப் பெருமானுக்கு ஆறுபடை வீடு என ஆறு ஸ்தலங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.‌ இது தொடர்பான விவரங்களை தொடர்ந்து காண்போம்.‌

‌திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி அல்லது பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய ஆறு இடங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் யானை முகத்தோனைத் தான் அறுபடை வீடு என எம்முடைய முன்னோர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அள்ளல் போம் விநாயகரைத் தான் முதல் படைவீடு என்றும், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆழத்து விநாயகரை இரண்டாம் படை வீடு என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டாம் படை வீட்டில் வீற்றிருக்கும் ஆழத்து விநாயகருக்கு தனி சிறப்பு உண்டு. அதாவது இங்கு விநாயகப் பெருமானுக்கு பிரத்யேக கொடி மரமும், பிரத்யேக திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் தோன்றுவதற்கு முன்னரே விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டு, சிவபெருமானின் அருள் கிடைத்து வருகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கள்ள வாரண பிள்ளையாரை மூன்றாம் படை வீடு என்றும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்கு நுழையும் முன் இருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் தான் நான்காம் படை வீடு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஐந்தாம் படை வீடு விநாயகர் குறித்து ஆன்மீக பெரியோர்களிடத்தில் இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அதனால் இந்துக்களின் புனித தனமான காசி மாநகரில் இருக்கும் காசி விஸ்வநாதர் சன்னதிக்கு முன்னர் தொண்டி ராஜ்கணபதியை ஐந்தாம் படை வீடு என்றும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகரை ஐந்தாம் படை வீடு என்றும் குறிப்பிடுவர்.

இதைத்தொடர்ந்து திருநாரையூர் என்ற ஊரில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பொள்ளா பிள்ளையார் ஆறாம் படை வீடு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

திருமணமாகாதவர்கள், கல்வியில் தடை குறிப்பாக உயர்கல்வியில் தடை, பொருளாதார ரீதியில் நெருக்கடியையும், அழுத்தங்களையும் தொடர்ந்து சந்தித்து வருபவர்கள், குடும்பத்தில் மன மகிழ்ச்சியை விரும்பி அதனை கிடைக்க பெறாதவர்கள்... என தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை களைய வேண்டும் என்றால், இந்த ஆறுபடை விநாயகர் ஆலயத்திற்கும் விஜயம் செய்து முழு முதற் கடவுளான பிள்ளையாரை தரிசித்தால் உங்களுக்கு அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மன நிம்மதியும் கிடைக்கும். குறிப்பாக காசியில் இருப்பது போல் பிள்ளையார்பட்டியில் இருக்கும் கற்பக விநாயகரை வணங்கினால் மோட்சம் கிட்டும். எமக்கு மட்டுமல்ல... எம்முடைய முன்னோர்களுக்கும் அது சாத்தியப்படும் என ஆன்மீக பெரியோர்கள் இந்த அறுபடை வீடு விநாயகரை தரிசனமும், அதன் மூலம் கிடைக்கும் பலன்களை விரிவாக பட்டியலிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆறுபடை வீடு விநாயகரை தரிசிக்கும் போது தவறாமல் அருகம்புல் உங்களுடைய பிரார்த்தனையில் இடம் பெற வேண்டும். அதேபோல் ஒவ்வொரு இடத்திலும் சிதறுகாய் அடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தகவல் : திரிபுரசுந்தரி

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right