38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை : சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கண்காணிப்பு திருப்தியளிக்குமா?

27 Sep, 2023 | 02:40 PM
image

(நிவேதா அரிச்சந்திரன்)

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகளுக்காக கடந்த 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கை வந்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் சுமார் 3 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.

அந்த கடன் உதவியின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் பரிந்துரைகளையும் அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியுள்ளதா என்பதை கண்காணிக்கும்  முதற்கட்ட மதிப்பீட்டுக்காகவே மேற்படி குழு இலங்கை வந்துள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்குழுவின் வருகை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாவது,

'சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளை ஆராய்வதற்காகவே இந்த குழு இலங்கை வந்துள்ளது. மாறாக, எமக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. இந்த மதிப்பீட்டின் பின்னரும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாற்கான கால அவகாசம் இலங்கைக்கு உள்ளது. 

நாம் இயன்ற வரை நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளோம். சிறப்பாக செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்' என்றார். 

இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளதாவது,

'விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்றிட்டத்தின் கீழான பல்வேறு கூறுகள் தொடர்பில் இலங்கையின் நகர்வுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். 

நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை சிறப்பாக செயலாற்றியுள்ள அதேவேளை  நேர்மறையான போக்கையும் கடைப்பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

'இலங்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 4 சதவீதம் என்ற பணவீக்கத்தை பதிவு செய்திருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு 70 சதவீதமாக பதிவான பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போது இலங்கை கணிசமானளவு முன்னேறியுள்ளது என்றே கூற வேண்டும். 

முதற்கட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு எவ்வித பிரச்சினையும் இருக்காது.  இருப்பினும் கடன் மறுசீரமைப்பு விடயத்தில்  முன்னேற்றம் காணவேண்டியுள்ளது' என தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும்  இடையிலான  இணக்கப்பாடு எட்டப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்  செப்டெம்பர் மாத இறுதிக்குள் 71 நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அராசாங்கம் திட்டமிட்டுள்ளபோதிலும் ஆகஸ்ட் மாத இறுதி வரை 38 நிபந்தனைகளை மாத்திரமே நிறைவேற்றியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி.மேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நகர்வுகள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து முன்னெடுத்துவரும் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் ஆய்வின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 57 கண்காணிக்கப்படக்கூடிய உறுதிமொழிகளில் 38ஐ இலங்கை நிரூபணமாக நிறைவேற்றியுள்ளது.

வெரிட்டே ரிசேர்ச்சின் நிகழ்நிலை தளமான 'ஐ.எம்.எப். கண்காணிப்பான்' வழங்கும் ஆகஸ்ட் மாத இறுதிக்கான நிகழ்ச்சித்திட்டத்தின் புதுப்பித்தலுக்கு அமைய, 11 உறுதிமொழிகளின் முன்னேற்றம் இன்னும் "அறியப்படவில்லை" என்றும், அதேநேரம் 8 உறுதிமொழிகள் "நிறைவேற்றப்படவில்லை" எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி வெளிப்படைத்தன்மை தளமானது அரையாண்டு அடிப்படையில் மூன்று முக்கிய வகைகளின் கீழ் தகவல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதில் பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தினதும் வெளிப்படுத்தல் முதலாவதாகவும்  முதலீட்டு சபையின் மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களினதும் பட்டியல் இரண்டாவதாகவும் சொகுசு வாகன இறக்குமதியில் வரி விலக்கு பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் மூன்றாவதாகவும் அமைந்துள்ளது. இந்த வெளிப்படுத்தல்கள் ஊடாக  அரசாங்கத்தின் நகர்வுகளை வெளிப்படையாக அறியக்கூடிய அதேவேளை அரச வருவாமனம் மற்றும் செலவீனத்தில் தனியார் ஏற்படுத்தும் ஊழல்களை கண்டயறியக்கூடியதாக அமையும். 

நீடிக்கப்பட்ட காலக்கெடு இருந்தபோதிலும், ஆட்சி தொடர்பான முக்கியமான உறுதிமொழியை நிறைவேற்றுவதில் இலங்கை பின்தங்கியுள்ளது.  அதாவது நிகழ்நிலையில் நிதி வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்குவதாகும். மார்ச் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட இந்த உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையின் பேரண்டப் பொருளாதார மீட்சி மற்றும் உறுதிப்பாட்டுக்கு முக்கியமானதாக ஆட்சி மற்றும் ஊழல் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  இலங்கைக்கான ஐ.எம்.எப். இன் முதல் வேலைத்திட்டமும் இதுவாகும். அதனால் மேற்கூறிய நிதி வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை நிறுவுவதற்கான உறுதிமொழியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக தோல்விக்கான காரணங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, சர்வதேச நாணய நிதியம் பெரும்பாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய நாடுகளிடம் மென்மையாக நடந்துகொண்ட வரலாறு உள்ளது. எவ்வாறாயினும் இந்த புறக்கணிப்பு நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற ஒன்றாகும்.

ஆட்சி தொடர்பான அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதில் தோல்விகளை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகம் கவனிக்கவில்லை என்றால், அது அதன் சொந்த மதிப்பீட்டுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காதது போல் தோன்றலாம். இலங்கையில் ஆட்சியை மேம்படுத்துவது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளின் தலைவிதியும் அவ்வாறே தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.

2023 மார்ச் 20ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் விருப்பக் கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டு, அடையாளம் காணப்பட்ட 100 உறுதி மொழிகளிகளை கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளம்  ‘ஐ.எம்.எப். கண்காணிப்பான்’ ஆகும். இதனை manthri.lk இணையதளத்தில் https://manthri.lk/en/imf_tracker பொதுமக்கள் பார்வையிடலாம் என வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் ஒரு தீர்க்கமான கட்டத்தில் இலங்கை தற்போது பயணிக்க வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இந்த மதிப்பாய்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாதவிடத்து இரண்டாவது கடன் தொகையை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும். 

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள், நிபந்தனைகள் என்பன மிக முக்கியத்துவமிக்கதாக அமைந்துள்ளன. அந்த நிபந்தனைகள், பரிந்துரைகளை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது. 

வழமையாகவே சர்வதேச நாணய நிதியமானது உலக நாடுகளுக்கு  நிபந்தனைகளை, பரிந்துரைகளை  முன்வைக்கும்போது இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக பெரிதாக நிபந்தனைகளை முன்வைத்ததில்லை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் இம்முறை இலங்கையில் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள வறியவர்களுக்கு நிவாரணங்களையும் நலன்புரி உதவிகளையும் வழங்க வேண்டுமென்ற விடயத்தை வலியுறுத்தியது. இதன் பின்னணியில் தற்போது பல நலன்புரி திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேநேரம் பொருளாதார ரீதியிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய தேவையும் காணப்படுகிறது. 

சர்வதேச நாணய நிதியமும் இந்த விடயத்தில் பல்வேறு நிபந்தனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறது. இவை அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு வெளிவரக்கூடியதாக இருக்கும். 

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாக கடன் மறுசீரமைப்பு காணப்படுகிறது. 

சர்வதேச ரீதியிலான கடன் மறுசீரமைப்பு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பன முக்கியமானதாக காணப்படுகின்றன.

இவற்றில் சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் கடன் வழங்கிய ஏனைய நாடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 

அதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டிய தேவையும் இலங்கைக்கு காணப்படுகிறது. இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் வங்கி கட்டமைப்பு விலக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மாறாக, ஊழியர் சேமலாப நிதி மற்றம் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றில்  உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பையடுத்து மக்களின் ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் கைவைத்துவிட்டதாகவும் தொழிலார் வர்க்கத்தின் எதிர்காலம் பாதிக்கப்பட போவதாகவும் தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்துள்ளன. 

அதாவது ஊழியர் சேமலாப நிதியம் ஏற்கனவே திறைசேரிக்கு வழங்கிய கடன்கள் அனைத்தையும் மீள வழங்கி மீண்டும் புதிய கடன்கள் பெறப்படவுள்ளன. அந்த கடன்களுக்கு 2024ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டியும், அதன் பின்னர் 2038 ஆம் ஆண்டு வரை 9 வீத வட்டியும் வழங்கப்படவுள்ளது. இதன் ஊடாக ஊழியர்களின் நிதிக்கு 9 வீத வட்டி கிடைக்கும் என உறுதிப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்பு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக, சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்றான கடன் மறுசீரமைப்பில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயம் சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், நாட்டில் சகல தரப்பினரதும் ஒத்துழைப்போடு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54