நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின் அதிகாரங்கள், பிரஜைகள் ஊடகத்துறையை மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரஜைகளையும் மௌனிப்பதற்கு வழிசமைக்கிறது"

27 Sep, 2023 | 11:41 AM
image

ஆர்.ராம்

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுவைத் தாபிப்பதற்கும் இலங்கையில் நிகழ்வு பற்றிய குறித்த சில கூற்றுக்களின் நிகழ்நிலைத் தொடர்பாடலை தடை செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும், தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலைக் கணக்குகள் மற்றும் மெய்யுறுதிப்படுத்தப்படாத நிகழ்நிலைக் கணக்குகளின் பயன்பாட்டை தடுப்பதற்கும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிகழ்நிலை அமைவிடங்களை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடலுக்கு நிதியளித்தல் மற்றும் வேறு ஆதரவை ஒடுக்குவதற்கும் அத்துடன், அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமாக ‘நிகழ்நிலை காப்பு’ சட்டமூலம் என்ற தலைப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், நாட்டில் 14.58 மில்லியன் பேர் இணையப் பாவனையாளர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது மொத்த சனத்தொகையில் 66.7 சதவீதமாக உள்ளது. அத்தோடு, 2022இலிருந்து 2023 வரையான காலத்தில் இணையப் பாவனையானது 43 ஆயிரத்தால் அதாவது 0.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் 7.2 மில்லியன் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதோடு, அவர்களில் 37.3 சதவீதமான பெண்களும், 62.3 சதவீதமான ஆண்களும் காணப்படுகின்றனர்.

மேலும், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவினர் 6.85 மில்லியனாக உள்ளதாகவும் தரவுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழுவுக்கு 2021ஆம் ஆண்டு 16,975 முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் தொடர்பில் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு 15,509ஆக காணப்படுவதோடு, அவற்றில் 70 சதவீதமானவையாக உள்ளன.

அதேநேரம், வெறுப்புப்பேச்சு மற்றும் தனியுரிமை தொடர்பில் 181 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழுவுக்கு மேலதிகமாக இலங்கை பொலிஸ் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் 1,817 இணையவழிக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 9 ஆயிரம் வரையிலான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக, இணைய மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தல், இன, மத முரண்பாடுகளை தோற்றுவித்தல், வெறுப்பு பேச்சுக்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், நிதி மோசடி, பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம், போலிச் செய்திகளைப் பரப்புதல், தனிமனித தாக்குதல்கள், போதைப்பொருள் வியாபாரம், சூட்சுமமான முறையில் சட்ட விரோத விபசாரத்தை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலைமைகள் தோன்றியிருந்தன.

இந்நிலையானது உள்நாட்டில் இணையங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியத்தை தோற்றுவித்திருந்ததோடு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அதற்கான வலியுறுத்தல்களும் மேலெழுந்திருந்தன.

இதனையடுத்து தற்போதைய அரசாங்கம் இணையங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழங்குபடுத்துவதற்கான சட்ட வரைவினை தயாரிக்கும் பணியில் இறங்கியது. குறித்த செயற்பாடு பொதுமக்களினதும், எதிர்கால சந்ததியினரினதும் நன்மை கருதியாக வெளித்தோற்றத்துக்கு தெரிந்தது.

ஆனால், அவ்வாறு உருவாக்கப்படும் சட்டமானது ஜனாதிபதி முதல் அரசாங்கத்தின் அத்தனை தரப்புக்களுக்கும் தமக்கு தொடர்ச்சியாக தலைவலியாக இருக்கும், இணையங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றை ‘மௌனிக்கச் செய்வதே’ இலக்காக இருந்தது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஆட்சியாளர்களை விரட்டியடித்த மக்கள் எழுச்சிப் போராட்டமான ‘அரகலய’ சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தித்தான் முன்னெடுக்கப்பட்டது என்பதால் அவ்விதமான நிலைமையொன்று மீள நிகழாத சூழலொன்றை (அரசியல் முறைமை மாற்றத்தால் அல்ல) குறுக்குவழியில் சென்று தோற்றுவிக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உள்ளது.

அதுமட்டுமன்றி, தற்போதும் ஆங்காங்கே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளும், அரசாங்கத்தின் எந்தவொரு எதிர்மறையான செயற்பாடுகள் பற்றிய வெளிப்படுத்தல்களும் அவற்றுக்கான உடனடி பிரதிபலிப்புக்களும் சமூக ஊடகங்கள் ஊடாகவே தொடர்வதால் அரசாங்துக்கு சமூக ஊடகங்கள் மீதான ‘ஒவ்வாமை’ அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள ‘நிகழ்நிலைக் காப்பு’ சட்டமூலம் அரசாங்கத்தின் அத்தனை திரைமறைவு சிந்தனைகளையும் நோக்கங்களையும் முழுமையாக நிறைவேற்றுவதாக உருவாக்கப்பட்டிருக்கின்றமை வெளிப்படையாகிறது.

சட்டமூலத்தின் உள்ளடக்கமும் வெளிப்படும் ஆபத்துக்களும்

குறித்த சட்டமூலத்தின் ஆரம்பத்தில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஏற்புடைமைகள், இலக்குகள் பற்றிய நியாயமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் பகுதி காணப்படுகிறது. இந்தப் பகுதியே மிகவும் முக்கியமானதாகிறது. 

நிகழ்நிலை காப்பு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் அடங்கிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரத்தினை கொண்டுள்ளதோடு, அவர்களின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்ற ஆணைக்குழுவானது தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும் பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றை கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவது அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாக உள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் அதிகார வரையறையைக் கொண்டிருக்கும்.

அதுமட்டுமன்றி, ஆணைக்குழுவுக்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தொடுக்க முடியாது என்பதோடு இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்துக்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய்நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்கவோ அபராதம் விதிக்கவோ அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிப்பதற்கோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அடிப்படைக்கு பேராபத்து ஐ.நாவின் 78ஆவது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜயம் செய்திருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக்கிளெக்குடனான சந்திப்பின்போது, “இணையத்தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதோடு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உத்தேச சட்டமூலத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும்” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

புதிய சட்டத்தின் ஊடாக இவ்விதமான வாய்ப்பு கிடைத்தால் அது தேவையான விடயமாக பார்க்கப்பட்டாலும், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஜைகளுக்கான பேச்சு சுதந்திரமும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரமும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமும் பறிக்கப்படப்போகிறது.

குற்றவியல் வழக்குகளை தொடுக்கவல்ல சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை, கணினி குற்றச் சட்டம்,  பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஆகியன அமுலில் இருக்கத்தக்கவாறு ஜனாதிபதியினால் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழு செயற்படுவதானது நிறைவேற்று அதிகாரத்தின் மற்றுமொரு விரிவாக்கம்தான்.

அதுமட்டுமன்றி, வளரும் நவீன யுகத்துக்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தரவுக்களஞ்சிய உருவாக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளில் மெட்டா உள்ளிட்ட சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களுடனான ஒத்துழைப்புச் செயற்பாடுகளும் கானல்நீராகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54