லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் - நய்னா மொஹமத் வேண்டுகோள்

27 Sep, 2023 | 10:31 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்டத்தின் மேம்பாட்டையும் இளம் கால்பந்தாட்ட சந்ததியினரின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலின்போது லீக் பிரதிநிதிகள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான குழுவை தெரிவு செய்யவேண்டும் என இலங்கையின் முன்னாள் தேசிய கால்பந்தாட்ட முன்கள வீரர் நய்னா மொஹமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை தேர்தலில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான ரஞ்சித் ரொட்றிகோ மற்றும் ஜஸ்வர் உமர், முன்னாள் உதவித் தலைவர் டொக்டர் மனில் பெர்னாண்டோ ஆகியோர் ஒரு குழுவாகவும் அநுராதபுரம் கால்பந்தாட்ட லீக் தலைவர் தக்ஷித்த சுமதிபால தரப்பில் மற்றொரு குழுவாகவும் வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி நடைபெறவுள்ள சம்மேளனத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந் நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களில் கால்பந்தாட்ட மேம்பாட்டுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார் என்பதை லீக் பிரதிநிதிகள் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்பதே சாலச்சிறந்தது என வீரகேசரி ஒன்லைனுடனான உரையாடலின்போது நய்னா மொஹமத் தெரிவித்தார்.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இலங்கை கால்பந்தாட்டத்தின் மறுமலர்ச்சியையும் நினைவில்கொண்டு லீக் பிரதிநிதிகள் செயற்பட்டால் கால்பந்தாட்டம் நிச்சயமாக ஜெயிக்கும் என ஸாஹிரா, யோர்க் விளையாட்டுக் கழகம், இலங்கை தேசிய அணி ஆகியவற்றின் முன்னாள் நட்சத்திர வீரரான நய்னா மொஹமத் குறிப்பிட்டார்.

கால்பந்தாட்ட நிருவாகத்தில் மாற்றம் தேவை எனவும் அவர் வலியுறுத்தத் தவறவில்லை.

'இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் சிலர் கால்பந்தாட்ட நிருவாகத்தில் பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளனர். ஆனால், உலக தரவரிசையில் இலங்கை கால்பந்தாட்டம் பின்தள்ளப்பட்டுள்ளதை சகலரும் அறிவர். அவர்கள் பதவி வகித்த காலங்களில் கால்பந்தாட்டத்திற்கு எதை செய்தார்கள், எதை செய்யாமல் விட்டார்கள் என்பதை லீக் பிரதிநிதிகள் அறியாமல் இருக்க நியாயம் இல்லை. எனவே தேர்தலில் வாக்களிக்கும் லீக் பிரதிநிதிகள்தான் சரியான தீரமானங்களை எடுக்கவேண்டும். கால்பந்தாட்ட நிருவாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.

'இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் கால்பந்தாட்டம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கைகளில் அல்ல வாக்காளிக்கும் லீக் பிரதிநிதிகளின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. எனவே வாக்களிப்பவர்கள் மிகச் சரியான முடிவுகளை எடுத்து கால்பந்தாட்டத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும். நான் இவ்வாறு கருத்து வெளியிடுவதால் யாருக்கும் பக்கசார்பாக செயற்படுவதாக எண்ணக்கூடாது. கால்பந்தாட்டம் மிக மோசமாக பின்தள்ளப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில் பேசுகிறேன். சிலருக்கு உண்மை கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், உண்மை ஒருபோதும் அழியாது' என நய்னா மொஹமத் குறிப்பிட்டார்.

'இலங்கையில் கால்பந்தாட்டம் முழு அளவில் அபவிருத்தி செய்யப்படவில்லை. கீழ்மட்ட அபிவிருத்தி என்ற சொல் கால்பந்தாட்ட அகராதியில் இடம்பெறவில்லை' என அவர் சுட்டிக்காட்டினார்.

'சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான சுற்றுப் பயணங்களின்போது உயர் நிருவாகிகள் தங்களது நண்பர்களை திருப்திபடுத்துவதற்காக பயிற்றுநர்களையும் வீரர்களையும் தெரிவு செய்வார்கள். கடைசி நேரத்தில் வீரர்கள் பட்டியல் எமக்கு சமர்ப்பிக்கப்படுவதால் தேர்வாளர்கள் என்ற வகையில் நாங்கள் அதற்கு சம்மதிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாங்கள் அதனை அங்கீகரிக்க மறுத்து இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றாமல் விட்டால் பீபா அல்லது ஏஎவ்சி அபராதம் விதிக்கும். அதற்கு அஞ்சியே வீரர்களின் பட்டியல்களை கடைசி நேரத்தில் நாங்கள் அங்கீகரிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்' எனவும் அவர் கூறினார்.

எல்லாவற்றையும் விட வீரர்கள் தேர்வின்போது அநாவசிய தலையீடுகளால் தாங்கள் மன உலைச்சல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிட்டதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

'தேசிய அணிகள் வெளிநாடுகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற செல்லும்போது கடைசி நேரத்தில்தான் ஜேர்சிகள், பூட்ஸ்கள், டெக் ஷூஸ் என்பன வழங்கப்படுகின்றது. இது குறித்து பயிற்றுநர் அமானுல்லா என்னிடம் முறையிட்டிருந்ததை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கான வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டபோது விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவுடன் ஆலோசனை நடத்தப்படாதது ஆச்சரியமூட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

'இது குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாகக் குழுத் தலைவர் தேஷப்ரியவிடம் நான் வினவியபோது, அவரால் பதில் அளிக்க முடியாமல் போனது' என அவர் கூறினார்.

'எனவே, குறுகிய கால ஆதாயங்களைக் கருத்தில்கொள்ளாமல் பிள்ளைகளின் நீண்டகால எதிர்காலத்தை மனதில் நிறுத்தி அடுத்துவரும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் (செப்டெம்பர் 29) சரியான குழுவுக்கு வாக்களித்து கால்பந்தாட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது லீக் பிரிதிநிதிகளின் கடைமை ஆகும்.  லீக் பிரதிநிதிகள் உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்  என நம்புகிறேன்' என்று நய்னா மொஹமத் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58