மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

26 Sep, 2023 | 03:57 PM
image

நடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் 'சித்தா' திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் மற்றும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் ஆகியோர் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள் என சித்தார்த் தெரிவித்தார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சித்தா'. இதில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஸ்ர ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

எமோஷனல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இடாகி என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பற்றி சித்தார்த் பேசுகையில், '' உதவி இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகனாகவும் அறிமுகமானேன்.

ஒரு நல்ல தரமான படைப்பை எந்தவித சமரசமும் இல்லாமல் நம்பகத் தன்மை மிகுந்த ஒரு கதையை தயாரிக்க வேண்டும் என்ற எனது கனவு 22 ஆண்டுகள் கழித்து இந்த 'சித்தா' படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்கு இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்  கதையை தெரிவு செய்து, அதனை திரையில் உணர்வுபூர்வமாக சொல்வதில் கைதேர்ந்தவர் என்பதனை இப்படத்தின் மூலம் உணர்ந்திருக்கிறேன்.

இப்படத்தினை தயாரித்து ஒன்றரை ஆண்டு காலத்திற்கு யாரிடமும் காண்பிக்காமல் ரகசியமாக வைத்திருந்தேன். இந்த திரைப்படத்தை முதன்முதலாக ரெட் ஜெயண்ட் உதயநிதிக்கு திரையிட்டு காண்பித்தேன். அவர் இப்படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தவுடன் இப்படம் செப்டம்பர் 28 ஆம் திகதி அன்று வெளியாகும் என அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டோம்.‌

 இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம், 'உலகநாயகன்' கமல்ஹாசன் ஆகியோருக்கு திரையிட்டு காண்பித்தேன். அவர்கள் படத்தைப் பார்த்து எம்முடைய முயற்சியை பாராட்டினர். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் மற்றும் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் ஆகியோருக்கு திரையிட்டு காண்பிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்தும் வாழ்த்துக்களை பெற காத்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த பட குழுவினரும் பழனியில் நான்கு மாத காலம் தங்கி பணியாற்றினோம். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும்... குறிப்பாக அற்புதமாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right