உங்களது திட்டத்தை வெற்றி பெற வைக்கும் எளிய பரிகாரம்....!?

26 Sep, 2023 | 05:16 PM
image

எம்மில் பலரும் தங்களது நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். பலர் இந்த ஆண்டிற்குள் நான்கு சக்கர வாகனம் ஒன்றை வாங்க வேண்டும் என திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுவர்.

வேறு சிலர் இந்த ஆண்டிற்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் சிறிய அளவிலான சதுர அடிக்குள் ஒரு மனை ஒன்றினை வாங்கிட வேண்டும் என திட்டமிடுவர். வேறு சிலர் இந்த ஆண்டின் இறுதிக்குள் கனடா,‌ அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வேண்டும் என திட்டமிடுவர்.

இவர்களில் திட்டங்கள் நூறு சதவீதம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதனை அவர்களுடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டே எம்முடைய ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக பெரியோர்களும் துல்லியமாக அவதானித்து விடுவர்.  இவர்கள் உங்களது ஜாதக கட்டத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் எங்கு இடம்பெற்றிருக்கிறார் என்பதனை பொறுத்து துல்லியமாக சொல்லிவிடுவர்.

இதற்கான சூட்சமத்தை சில சோதிட நிபுணர்கள் பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். அதாவது உங்களின் திட்டம் திட்டமிட்டபடி துல்லியமாக நிறைவேற வேண்டும் என்றால் உங்களுக்கு சூரிய பகவான் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும்.‌

அதேபோல் உங்களுடைய லக்னத்திலிருந்து ஐந்தாம் அதிபதி நல்லதொரு இடத்தில் அமர்ந்து அருள் புரிந்தால்..., உங்கள் திட்டமெல்லாம் நினைத்தபடி நிறைவேறி உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.‌

வேறு சிலர், ''நான் ஒரு திட்டத்தை தீட்டினால்.. அதை நடைமுறைப்படுத்தும் போது திசை மாறி, வேறொரு தீவினை பயனை  அளிக்கிறது' என புலம்புபவர்களும் உண்டு. இவர்களுக்கு திட்டங்களை தீட்டி அதனை செயலாக்கம் செய்வதில் வல்லவரான சூரிய பகவான் லக்னத்திலிருந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்திருக்க கூடும் அல்லது இயற்கை அசுபரான ராகு, கேது உடன் ஏதேனும் ஒரு இடத்தில் இணைந்திருக்கும்.‌

வேறு சிலருக்கு அவர்களுடைய லக்னத்தின் ஐந்தாம் அதிபதி, பாவருடன் இணைந்திருப்பார் அல்லது தவறான இடத்தில் நீசமடைந்து அருள் பாலிக்க இயலாத நிலையில் இருப்பார்.‌

வேறு சிலருக்கு அவர்களுடைய திட்டம் செயல்படாமல் போவதற்கு சூரியன் மற்றும் அவர்களுடைய லக்னத்தின் ஐந்தாம் அதிபதி... திதி சூனிய ராசி கட்டங்களுக்குள் அடங்கி இருப்பர். இதன் காரணமாகவும் உங்களது திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதுடன் திசை மாறி பயணித்து உங்களுக்கு நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும்.‌

உங்களது திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், லக்னத்தின் ஐந்தாம் அதிபதியை விட சூரிய பகவானின் அருள் அதிகம் வேண்டும். இதனை உணர்ந்து நீங்கள் நாளாந்தம் சூர்யோதய வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். பிரதோஷ வழிபாட்டினை தொடர்ந்து கடைப்பிடித்து வரும்போது உங்களின் மாயத்தடைகள் அகன்று திட்டங்கள் செயல்பட தொடங்கும். அதனூடாக வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.‌

மேலும் உங்களது திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒரு முறையேனும் தமிழகத்தில் உள்ள சூரிய நாயனார் ஆலயத்திற்கு வருகை தந்து சூரிய பகவானை வணங்கிட வேண்டும்.

இந்த பரிகாரங்களை தொடர்ந்து நீங்கள் பின்பற்றும் போது.. முன்பு செயல்படாத உங்களது திட்டங்கள் மீண்டும் உத்வேகம் பெற்று செயல்பட தொடங்கும். அதனுடன் இந்தத் திட்டங்கள் நன்முறையில் செயல்பட்டு உங்களுக்கு பண பலனை வழங்குவதுடன் மன மகிழ்ச்சியையும் அள்ளித் தரும்.‌

தொகுப்பு :சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right