ஆர்.ராம்
'முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து, அரச அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஏற்ப வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாத நிலையில் நீதிமன்ற வழக்குகளும், சட்டவிரோதமாச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் நீடிக்கின்றன' -
“அரசியல் அதிகாரம் மற்றும் பணபலம் படைத்தவர்களின் பின்னணியில் முத்துராஜவெல-நீர்கொழும்பு களப்பில் சதுப்பு நிலங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவதும், சுற்றுலா விடுதிகள் மற்றும் வாழ்விடங்கள் அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றமையை நாம் அவதானித்துள்ளோம்”என்று முத்துராஜவெலவைப் பாதுகாக்கும் பேராயர் குழுவின் தலைவர் தினுஷ்க நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார்.
“ஏற்கனவே குறித்த பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது முதல் எமது குழுவினர் போராடி வருவதால் பாரிய அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகள் நீடிக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், 11-05-2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்திக்காக தற்போதைய நிலைக்கு ஏற்றவகையில் திட்டத்தை வகுக்கப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கு அமைவாக,
முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் பிரதான திட்டத்தை துரிதமாகத் தயாரித்தல்.
அதற்காக ஏற்புடைய பங்குதார நிறுவனங்களின் தலைவர்கள்/பிரதிநிதிகள் அடங்கிய நடவடிக்கை குழு மற்றும் செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்தல்.
நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய உகந்த பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்துவதற்காக அரச/தனியார் காணிகளை நகர அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கையகப்படுத்தல்
தாழ்நிலப் பிரதேசமாக குறித்த சுற்றாடல் தொகுதியை பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக குறித்த ஏற்புடைய நடவடிக்கைகளுக்கான பொறுப்பை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைத்தல்
பிரதான திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்படும் தேசிய பாதுகாப்பு வனமாக்கப்பட வேண்டிய பிரதேசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சட்டத்தின் கீழ் தேசிய வனமாக பிரகடனப்படுத்தல்.
நடவடிக்கைக் குழு தயாரிக்கின்ற பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்தி முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை றம்சா ஈரநில வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அமைச்சரவையின் இந்த அனுமதியுடன் முத்துராஜவெலவை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வர்த்தமானி 07ஆம் திகதி ஒக்டோபர் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
குறித்த வர்த்தானி அறிவித்தலுக்கு எதிராக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலைமைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
அத்துடன், முத்துராஜவெலவுடன் தொடர்புடைய நகர அபிவிருத்தி அதிகார சபை, வனப் ஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, வனப்பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட பங்குதாரர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளபோதும், அக்குழுவின் செயற்பாடுகள் நம்பகத்தன்மையைப் பெற வேண்டுமாயின் முத்துராஜவெலவைப் பாதுகாக்கும் பேராயர் குழு உள்ளிட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்று பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலைமையே நீளுகின்றது.
“முத்துராஜவெலவுக்குள் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் முத்துராஜவெலவுக்குள் கழிவுகளை கொட்டுவதற்கான அனுமதியை முதன்முதலாக அஜித் பண்டித ரத்ன என்பவருக்கு வழங்கினால் என்பதால் தற்போது நீடிக்கும் பலத்த அமைக்கு பின்னால் பாரிய திட்டமிருக்கலாம் என்ற அச்சம் எமக்குள்ளது” என்றும் முத்துராஜவெலவைப் பாதுகாக்கும் பேராயர் குழுவின் தலைவர் தினுஷ்க நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிக குடியிருப்புகள், காளான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தீவிபத்துகள் மற்றும் மணல் அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் முத்துராஜவல சரணாலய நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
1992 இல் மீள் வரைபு செய்யப்பட்ட முத்துராஜவெல பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தப் பரப்பில் முக்காற்பங்கு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படும் கேந்திர நிலையமாக மாறியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முத்துராஜவெல சதுப்புநிலம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டின் ஆசிய ஈரநிலக் குழுவால் நாட்டில் உள்ள 41சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களில் ஒன்றாகவும் முத்துராஜவெல பெயரிடப்பட்டது.
1996ஆம் ஆண்டு 947/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முத்துராஜவெல சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், இதுவரை முத்துராஜவெலவுக்கான எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத நில அபகரிப்புக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் அலுவலகமும் கவனம் செலுத்தியுள்ளனது.
குறித்த அலுவலகமானது, வனாந்தரப்பகுதியில் இணைக்க வேண்டிய பகுதிகளை அடையாளமிடும் நோக்குடன் வர்த்தமானிக்கு அமைய 1285 ஹெக்டெயர் நிலப்பரப்பின் எல்லையின் அளவைப் பணிகளை நிறைவு செய்துள்ளதோடு எல்லைகளை அடையாளமிடும் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், 1990 ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கை இணைந்து கொண்ட ரம்ஸா சமவாயத்துக்கு அமைய இச்சதுப்பு நில வலயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது. அது இலங்கையின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானதொன்றாகவும் உள்ளது.
5000 ஹெக்டயருக்கும் மேற்பட்ட வனாந்தரப் பகுதி முத்துராஜவெல சரணாலய நிலப்பகுதிக்கு சொந்தமானாபக இருக்கின்ற போதிலும் 1285 ஹெக்டெயர் நிலப்பகுதி மாத்திரமே சரணாலயத்திற்கு சொந்தமானதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குள் பற்றிய குழுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முத்துராஜவெல சூழல் கட்டமைப்பு 2569 ஹெக்டெயர் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை அடையாளம் கண்டுள்ளநிலையில், 1285 ஹெக்டெயர் மாத்திரம் எவ்வாறுசரணாலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
அதனடிப்படையில், முத்துராஜவெல சரணாலயத்தின் அழிவினை தடுப்பதற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கீழ் அதன் நிருவாகத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை பூங்காவாக முத்துராஜவெல சரணாலயத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், முத்துராஜவெல சரணாலயத்தை பாதுகாப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் இன்னமும் ஏட்டளவில் மட்டும் தான் காணப்படுகின்றது.
இதேவேளை, தனியார் நிறுவனம் ஒன்றினால் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவுகொண்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி, முத்துராஜவெலவில் 209 வகையான விலங்குகள் மற்றும் பூச்சிகள் மற்றும் 194 இனங்கள் உள்ளன. மரங்கள், 40 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வனங்கள், 102 வகையான பறவைகள் மற்றும் 48 வகையான பட்டாம்பூச்சிகள் உயிர் வாழ்கின்றன.
அதுமட்டுமன்றி, “முத்துராஜவெல பகுதியானது இலங்கைக்கு 3800-4000மில்லியன் செலவில் மேற்கொள்ள வேண்டிய இயற்கைப் பாதுகாப்பை அளிக்கும் கொடையாக உள்ளதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக” சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஹேமந்த விதானகே குறிப்பிடுகின்றார்.
விசேடமாக, ஆண்டுக்கு 1800மில்லின் ரூபா செலவீனத்தை ஏற்படுத்தவல்ல வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துவதாகவும், 800மில்லியன் ரூபா செலவீனத்தினை ஏற்படுத்தவல்ல காற்றுமாசடைவைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேநேரம், “முத்துராஜவெலவை முறையாக பராமரிப்பதன் ஊடாக பெருந்தொகையான சுற்றுலாத்துறை வருமானத்தினை பெற்றுக்கொள்ள முடியும். மாறாக, திட்டமிடாத அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் ஆக்கிரமிப்புக்களால் இயங்கையின் கொடையாகவும், பல்லுயிர்களின் அரணாகவும் உள்ள முத்துராஜவெலவை இழப்பதற்கு நேரிடும். அது சமூகத்துக்கும் நாட்டுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பேண்தகு அபிவிருத்தியில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமானதாக இருக்கின்றபோதும், அதற்கும் அப்பால் இயற்கையின் கொடைகளை பாதுகாப்பதும், அதனை எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைத்துச் செல்வதும் தார்மீக கடமையாகின்றது.
அதேநேரம், 'சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்' எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையின் வருமானத்திiனை அதிமுக்கிமானதாக கருதுகின்ற இலங்கையும் அத்தொனிப்பொருளின் கரிசனையுடன் முத்துராஜவெல குறித்த தீர்மானம் எடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது. ஆகவே இலங்கை அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால், இயற்கையையும், பல்லுயிர்களையும் பலிக்கடாவாக்கிவிடக்கூடாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM