இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் !

Published By: Digital Desk 3

26 Sep, 2023 | 11:09 AM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் (China's Belt and Road Initiative) இத்தாலி இணைந்ததால், அமெரிக்காவுடனான உறவில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதை சரி செய்யவே, அத்திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் 2019இல் இணைந்தது.

சீன ஜனாதிபதி ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன்  டொலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

ஆனால், அதேநேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்தது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி. தற்போது இத் திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முன்வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வெளியேறும் இத்தாலி 

கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் இடையே, சீன பிரதமர் லீ கியாங்கை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்துப் பேசினார். அப்போது, பட்டுப்பாதை திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஆயினும், சீனாவுடன் நட்புறவை தொடர விரும்புவதாகவும் மெலோனி கூறியுள்ளார்.

சீனாவின் கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் ஒப்பந்தத்தில் 2019-ம் ஆண்டு இத்தாலி அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. ஆனால், அத்திட்டம் அந்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க சிறிதும் உதவி செய்யவில்லை என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார். 

இதன்பின் பீஜிங்கிற்குச் சென்ற இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி, பட்டுப்பாதை பற்றி விமர்சன ரீதியாக பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பட்டுப்பாதை திட்டம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்றும் இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பட்டுப்பாதையின் உருவாக்கம்

பட்டுப் பாதைத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு, சீனா கிழக்கத்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் மையக் கேந்திரமாக உயரும். அது சீனாவுக்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். இதனால் பொருளாதாரத்துக்கும் அப்பாற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விரிவான அரசியல் செல்வாக்கு சீனாவுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

பட்டுப் பாதையை சீனா அமைப்பதன் நோக்கம், தடையற்ற பொருளாதாரம்

அனைத்து நாடுகளும் பலனடையும், கூட்டாளி நாடுகளின் நலன்கள் ஊக்கமடைவதோடு, சீனாவும் நலம் பெறும் என்ற போதிலும் சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் அதிகரிப்பதாக மேற்குலகால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டுப் பாதை (The Silk Road), பீஜிங்கில் இருந்து 2000 கிலோ மீற்றரில் உள்ள பாதை என்பது ஒற்றைப் பாதை இல்லை. அத்துடன் வரலாற்று உண்மையுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆயினும், காலப் போக்கில் அமெரிக்கா, உலக மேலாதிக்க வர்த்தக சக்தியாக உருவெடுத்தபின் இந்த பட்டுப்பாதை முக்கியத்துவம் அற்றுப் போனது.

சீனாவின் ஆசியக் கனவு

தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சீன அதிகளவில் கடன்களை வழங்கி அந்நாடுகளை மீள முடியாத சுமையில் சிக்க வைப்பதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்ற நிலையில், சீனாவின் அகண்ட ஆசியக் கனவின் (China's Asian Dream) வெளிப்பாடாக , பட்டுப் பாதை என்பது சீனாவின் மையக் கொள்கையாகவும், முன்னணிக் கொள்கையாகவும் இருக்கிறது.

சீனா மற்றைய நாடுகளுக்கு கடனுதவி கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கப் பார்க்கும் என்றும், லாவோஸில் நாட்டில் சீனாவின் முதலீடு அந்த நாட்டையே பாரிய கடனாளி ஆக்கியதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பை சந்திக்க நேரிடும். இதற்கு சான்றாக லாவோஸ் நாட்டு அரசுடன் இணைந்து, அந்த நாட்டின் ஊடாக செல்லும் ரயில் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. இந்தத் திட்டத்திற்கு ஏழு பில்லியன் டொலர்கள் செலவாகும்.

மக்கள் தொகை லாவோஸில் குறைவாக இருந்தாலும் கூட, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 பில்லியன் டொலர்கள் அளவுக்கு பங்களிப்பு செய்கிறது. இது லாவோஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி. லாவோஸ் இதை எப்படி திருப்பச் செலுத்தும் என்பது கேள்விக்குறியே.

பாகிஸ்தானில் சீன ஆதிக்கம்

பெருஞ்சாலைகள், ரயில்பாதை, மின்சார வசதிகள், வேளாண் மேம்பாடு என பாகிஸ்தானுக்கு சீனா பாரிய அளவில் உதவி வருகின்றது.

அத்துடன் எல்லை தாண்டி வளர்ந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க இராணுவ உதவிகளையும் சீனா செய்கிறது.

மத்திய ஆசியாவில் கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் நாடுகளில் பாரிய மின்சார வசதிகளை சீனா நிறுவியுள்ளது. அதேவேளை அங்கு தனது கண்காணிப்பை பலப்படுத்தியும் உள்ளது.

அதேபோல் அண்மைய ஆண்டுகளில் அபிவிருத்தி கட்டமைப்புத் துறைக்காக சீனா பல முதலீடுகளை கம்போடியாவில் செய்துள்ளது. இதனாலேயே தென்சீனக் கடலில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் குறித்து சீனாவை விமர்சிக்க முடியாமல் கம்போடியா மௌனம் காக்கிறது.

இந்தியாவை சுற்றி சீனா 

இந்தியாவை சுற்றி, சீனாவின் அயல்நாட்டு அபிவிருத்தித் திட்டங்களை, வெறுமனே பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவில்லை. ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா முயல்வதாகவும், குறிப்பாக, இந்தியப் பெருங்கடலை சீனா கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியா பார்க்கின்றது.

பாகிஸ்தான், மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் சீனா பல முதலீடுகளை செய்துள்ளது. இவற்றை, இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்குடன் செயற்படுவதாக இந்தியா பார்க்கின்றது. இந்த நோக்கத்திலேயே பட்டுப் பாதைத் திட்டம் மீது, அதன் உள்நோக்கங்கள் மீதும் இந்தியா அவநம்பிக்கை கொண்டுள்ளது.

சீனாவுடன் நீண்டகால பிராந்திய மோதல்களை கொண்டுள்ள இந்தியா

பட்டுப் பாதையானது மாபெரும் பொருளாதார தொடரமைப்பாக மட்டும் இருக்காது, சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐயப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிதைவுகளைத் தோண்டி பிள்ளைகளைத் தேடும் அவலம்...

2023-12-06 14:24:15
news-image

தாங்க முடியாத பெருஞ்சுமை

2023-12-05 20:17:16
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு பாதகமான முறையில் அதிகரிக்கும்...

2023-12-04 22:09:45
news-image

பௌத்தத்தின் பெயரால் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்படும்...

2023-12-04 13:35:03
news-image

FATF சாம்பல் பட்டியலில் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கு...

2023-12-04 11:34:43
news-image

தேயிலைத் தோட்டங்களில் இனி கள மேற்பார்வையாளர்களாக ...

2023-12-04 11:52:54
news-image

தமிழ்த் தரப்பின் டெல்லி விஜ­யத்தின் உள்­நோக்கம்

2023-12-03 18:45:09
news-image

திரு­டர்­களின் சொர்க்­கமா?

2023-12-03 18:40:10
news-image

இந்­தி­யா­வுக்­கான  சவால்

2023-12-03 18:38:49
news-image

பேச்சு சுதந்­திரம் : அமெ­ரிக்­காவில் பலஸ்­தீன...

2023-12-03 18:37:03
news-image

பொரு­ளா­தார மைய யுகம்

2023-12-03 18:34:40
news-image

அரசியல் தீர்வை எதிர்பார்க்கலாமா?

2023-12-03 18:31:54